கொரோனா வைரஸ்: தமிழகத்தில் இரண்டாம் நபர் குணம் அடைந்தார் - அமைச்சர் விஜயபாஸ்கர் Coronavirus Tamil Nadu Update

பட மூலாதாரம், Getty Images
டெல்லியிலிருந்து தமிழகம் பயணித்த கொரானா நோயாளர் குணமடைந்துவிட்டதாகத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அவர் பகிர்ந்த ட்வீட்டில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு முறை பரிசோதனை செய்து இதனை உறுதிப்படுத்தியதாக அவர் கூறி உள்ளார்.
கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு தமிழகத்தில் குணமடையும் இரண்டாம் நபர் இவர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு

தமிழக முதல்வர் உரை

கொரோனா நோய் பரவலைத் தடுக்க மாநிலம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தொலைக்காட்சி மூலம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி புதிய அறிவிப்புகள் எதையும் வெளியிடவில்லை. மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே தனித்திருக்க வலியுறுத்திய அவர், ஊரடங்கால் பாதிக்கப்படும் பிரிவினருக்கான அரசின் திட்டங்களை விவரித்தார்.
மாலை ஏழு மணி அளவில் தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய எடப்பாடி கே. பழனிச்சாமி, "கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக 3,750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10,158 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் படுக்கை வசதியை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது" என்று கூறினார்.
ஏற்கனவே அறிவித்தபடி, ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய், ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகியவை விலையின்றி வழங்கப்படுவது, கட்டடத் தொழிலாளர்கள், ஓட்டுநர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்களுக்குச் சிறப்புத் தொகுப்பாக 1000 ரூபாய், 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணை ஆகியவற்றை வழங்குவது, பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு ரேஷன் கார்டிற்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாயோடு சேர்த்து கூடுதலாக ஆயிரம் ரூபாய் வழங்குவது ஆகியவற்றைப் பட்டியலிட்டார்.
மேலும், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் அவர்கள் அவ்வாறு செய்யத் தவறும்பட்சத்தில், பக்கத்து வீட்டுக்காரர்களோ, குடும்பத்தினரோ அரசுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்த 21 நாட்கள் ஊரடங்கை விடுமுறையாகக் கருதக்கூடாது; இது நோய்ப்பரவலைத் தடுப்பதற்கான அரசின் உத்தரவு என்றும் தெரிவித்த முதல்வர், அரசின் உத்தரவுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

பட மூலாதாரம், Getty Images

இதுவரை தமிழகத்தில் கொரோனா தொடர்பாக நடந்தவை?
தமிழ்நாட்டில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று. இவர்களில் 4 பேர் இந்தோனேசியர்கள். ஒருவர் சென்னையைச் சேர்ந்த பயண வழிகாட்டி. ஐந்து பேரும் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்ச் 22ஆம் தேதி முதல் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
இதனை அடுத்து தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து அவர் நள்ளிரவு 2 மணி அளவில் வெளியிட்ட செய்தியில், ''நீண்ட காலமாக உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த இந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, அவருக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எங்களின் கடும் போராட்டம் மற்றும் சிறந்த சிகிச்சையையும் மீறி அவர் சில நிமிடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
''வைரஸ் தொற்று பாதிப்பை அறிந்துள்ளதால் தொடர்ந்து எனது பத்திரிகையாளர் சந்திப்புகளில், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற காரணங்களால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தால் அவர்களுக்கு அது அதிக ஆபத்தை உண்டாக்கும் என்பதை நான் தெளிவாக கூறிவருகிறேன். உங்கள் குடும்பத்தில் யாரவது ஒருவருக்கு இது போன்ற பாதிப்புகள் இருந்தால் நீங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்'' என்று அமைச்சர் விஜயபாஸ்கர் மேலும் தெரிவித்திருந்தார்.

தற்போது உலகை கடும் அச்சத்தில் ஆழ்த்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 4,17,966 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 18,625 பேர் உலக அளவில் இதுவரை இந்த தொற்று பாதிப்பால் உயிழந்துள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கொரோனா தொடர்பாக வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.


அதேவேளையில் கடந்த வாரம் முதல் இந்தியாவிலும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்தியாவில் இதுவரை இந்த தொற்றால் 536 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 பேர் இறந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நேற்று (மார்ச் 24) இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இந்தியாவைக் காப்பாற்ற ஒவ்வொரு குடிமகனைக் காப்பாற்ற உங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற இரவு 12 மணி முதல் வீட்டிலிருந்து வெளியே வர தடை விதிக்கப்படுகிறது என இந்திய பிரதமர் நரேந்திர மோதி நாடு மக்களுக்கு ஆற்றிய நேற்றைய உரையில் குறிப்பிட்டார்.
முன்னதாக நேற்று இது குறித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தொற்றறால் பாதிக்கப்பட்டு, மதுரையில் அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கும், சென்னையில் அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கும் பயணப் பின்புலம் இல்லை. ஆனால், அவர்கள் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டவர்களோடு தொடர்பில் இருந்தது தெரிய வந்திருப்பதாக கூறினார்.
இந்நிலையில் வெளிநாட்டு பயணம் எதுவும் மேற்கொள்ளாத நபர் மதுரையில் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் முடக்கம் - நரேந்திர மோதி முழுமையான உரை
- கொரோனா வைரஸ்: அரிசி முதல் 50 லட்சம் பணம், ரஜினி முதல் ஹரீஷ் கல்யாண் - துயர் துடைத்த கலைஞர்கள்
- கொரோனா வைரஸ்: “இனம், மதம், நிறம் பார்த்து கொரோனா தாக்காது” - ஐ.நா
- கொரோனா வைரஸ்: உயரும் பலி எண்ணிக்கை - சீனாவின் உதவியைக் கோரும் மலேசியா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












