You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: வெளிநாட்டில் இருந்துவந்த 90,000 பேர் நோயைப் பரப்பும் அபாயம் - அச்சம் தரும் பஞ்சாப் அமைச்சரின் கடிதம்
வெளிநாட்டில் வசித்த 90,000 பேர் பஞ்சாபில் வந்து இறங்கியிருப்பதால் கொரோனா பரவும் அபாயம் பெரிய அளவில் ஏற்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சித்து எச்சரித்திருக்கிறார். மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்கவும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "கோவிட் 19 வைரஸ் தாக்குதல் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அது பஞ்சாபிலும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. இந்தியாவிலேயே பஞ்சாபில்தான் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகம். இந்த மாநிலத்தில் மட்டும் 90,000 பேர் வந்து இறங்கியுள்ளனர். பலருக்கு கோவிட் - 19 இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இவர்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு, இந்த நோயைப் பரப்புகிறார்கள்.
இதனால், கோவிட் - 19 நோய் தாக்கியவர்கள் பெரும் எண்ணிக்கையில் அதிகரிக்கக்கூடும். இந்த நோயை எதிர்த்துப் போரிட பஞ்சாப் தயாராகிவருகிறது. கீழ்மட்டம்வரை இதற்கான திட்டங்களைத் தீட்டியுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவு, தனிமைப்படுத்தும் வார்டுகள் ஆகியவற்றை உருவாக்கிவருகிறோம். இதற்காக கூடுதலாக ஆட்கள், நிபுணர்கள், தீவிர நோய் சிகிச்சையாளர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், நுரையீரல் நோய் நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் தேவைப்படுகின்றனர். மருந்துகள், செயற்கை சுவாசக் கருவிகள் ஆகியவையும் தேவை.
இந்த நோயை முறியடிப்பதற்கான போராட்டத்திற்கு, பஞ்சாப் அரசிற்கு மத்திய அரசிடமிருந்து கூடுதலாக 150 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. மாநில மருத்துவ சேவைகளை வலுப்படுத்த இந்தத் தொகை மிக அவசியம். அதனை மத்திய அரசு ஒதுக்கித் தர வேண்டும்" என தன் கடிதத்தில் சித்து குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாபில் இதுவரை 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். மூன்று நாட்களுக்கு முன்பே பஞ்சாபில் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டது. இந்தியாவிலேயே முதன்முறையாக அங்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவின்போது வெளியில் வருவோர் கைதுசெய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 40க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் முடக்கம் - நரேந்திர மோதி முழுமையான உரை
- கொரோனா வைரஸ்: அரிசி முதல் 50 லட்சம் பணம், ரஜினி முதல் ஹரீஷ் கல்யாண் - துயர் துடைத்த கலைஞர்கள்
- கொரோனா வைரஸ்: “இனம், மதம், நிறம் பார்த்து கொரோனா தாக்காது” - ஐ.நா
- கொரோனா வைரஸ்: உயரும் பலி எண்ணிக்கை - சீனாவின் உதவியைக் கோரும் மலேசியா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: