கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு - என்ன செய்யலாம், செய்யக்கூடாது?

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 24) மாலை ஆறு மணி முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை ஆறு மணிவரை 144 தடை உத்தரவு அமலில் இருக்குமென மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக்கூடாது?
கொரோனா என்று பரவலாக அறியப்படும் கோவிட் - 19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தொற்று நோய்ச் சட்டம் 1897ன் கீழ் மாநிலம் முழுவதும் மார்ச் 24-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி காலை வரை பல கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.
அதன்படி, மார்ச் ஒன்றாம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்த கால அளவிற்கு வீட்டிலேயே தனிமைப்பட்டிருக்க வேண்டும். உள்ளூர் நிர்வாகத்தினால் இவர்கள் தினமும் கண்காணிக்கப்படுவார்கள்.
பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும். அத்தியாவசியத் தேவைக்காக வெளியில் வரும்போது, பிறரிடமிருந்து ஒரு மீட்டர் முதல் 3 மீட்டர் தூரம்வரை தள்ளியிருக்க வேண்டும். ஐந்து பேருக்கு மேல் எந்த பொது இடத்திலும் கூடக்கூடாது.
எல்லாக் கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் டாஸ்மாக் கடைகளும் மூடப்படும். மெட்ரோ ரயில், அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் அனைத்தும் ஓடாது. மாநிலங்களுக்கு இடையிலும் மாவட்டங்களுக்கு இடையிலும் பயணம் செய்வது தடைசெய்யப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
தேர்வுகள் இருந்தால் தவிர, கல்வி நிலையங்களின் பணியாளர்கள், ஆசிரியர்கள் வீட்டிலிருந்தபடியே பணியாற்றலாம். ஆனால், இந்த உத்தரவு மருத்துவக் கல்லூரிகளுக்குப் பொருந்தாது.
காவல்துறை, கலால்வரித் துறை, நீதிமன்றங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், பிராந்திய போக்குவரத்து அலுவலகங்கள், நியாய விலைக் கடைகள், தீயணைப்புத் துறை, சிறைத் துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவை இயங்கும்.
அம்மா உணவகங்கள் தொடர்ந்து இயங்கும்
மத்திய அரசு நிறுவனங்களில் ராணுவம், துணை ராணுவப் படைகள், அகில இந்திய வானொலி, மருத்துவ சேவைப் பணியாளர்கள், துறைமுகப் பணியாளர்கள், வெளியுறவுத் துறை பணியாளர்கள், தபால் நிலையங்கள், தூர்தர்ஷன் உள்ளிட்டவை இயங்கும்.

தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை மருத்துவமனைகள், சிறிய ஆஸ்பத்திரிகள், மருந்துக் கடைகள், கண் கண்ணாடிக் கடைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர் சப்ளையர்கள், மருந்து தயாரிப்பாளர்கள், மருத்துவ உபகரணங்களைத் தயாரிப்பவர்கள், முகமூடி போன்றவற்றைத் தயாரிப்பவர்கள் இயங்கலாம்.
மளிகைக் கடை, அரிசிக் கடை, பால் உள்ளிட்ட பொருட்களை விற்பவர்கள், அவற்றைக் கொண்டு செல்பவர்கள் இயங்கலாம். வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்கள் ஆகியவை இயங்கலாம். ஊடக நிறுவனங்கள் இயங்கலாம்.
தகவல்தொழில் நுட்ப நிறுவனங்கள், நிதிச் சேவை நிறுவனங்கள் முடிந்த அளவு தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்றச் சொல்லலாம். தவிர்க்க முடியாத நிலை ஊழியர்கள் மட்டும் அலுவலகத்திற்கு வரலாம்.

பட மூலாதாரம், ASIF SAUD
உணவகங்கள் இயங்கலாம். ஆனால், உள்ளே அமர்ந்து சாப்பிட அனுமதிக்கக்கூடாது. பார்சல் வாங்கிச் செல்ல வேண்டும். தேநீர் கடைகளில் வாசலில் கூட்டமாக நின்று யாரும் தேநீர் அருந்துவது கூடாது. ஸ்விகி, ஸொமாட்டோ, ஊபர் ஈட்ஸ் மூலம் உணவுகளை வாங்க முடியாது.
பெட்ரோல், எரிவாயு நிலையங்கள் இயங்கும்
தொழிற்சாலைகளைப் பொருத்தவரை, மருத்துவ உபகரணங்கள், மருந்துகளைத் தயாரிக்கும் தொழிலகங்கள் இயங்கலாம். மாவு மில் உள்ளிட்ட உணவுப் பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் இயங்கலாம்.
உடனடியாக நிறுத்த முடியாத, அல்லது தொடர்ந்து இயங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலைகள் இயங்கலாம். இவையெல்லாம் 50 சதவீத பணியாளர்களுடன்தான் இயங்க வேண்டும். சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும் இதே விதிமுறைகள் பொருந்தும்.
அத்தியாவசிய பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், விவசாயப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இயங்கலாம். தொழிற்சாலைகளுக்கும் அலுவலகங்களுக்கும் ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் இயங்கலாம்.


ஆம்புலன்ஸ் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் இயங்கலாம். டாக்ஸிகளைப் பொறுத்தவரை விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கும் மருத்துவமனையிலிருந்து வீடுகளுக்கும் செல்லலாம். இறுதி ஊர்வலங்களுக்கான வாகனங்கள் செல்லலாம்.
விரைவில் பிரசவிக்கவிருப்பவர்கள் கணக்கெடுக்கப்பட்டு, கண்காணிக்கப்படுவார்கள். அவர்களுக்கு மருத்துவ உதவி செய்யப்படும்.
அறுவை சிகிச்சைகளைப் பொறுத்தவரை, தள்ளிப்போடக்கூடிய அறுவை சிகிச்சைகள் தள்ளிப்போடப்படும்.
பெண்களுக்கான தங்கும் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் செயல்படும். திறந்திருக்க அனுமதிக்கப்பட்ட கடைகளில் கூட்டம்கூட அனுமதியில்லை. வாசலில் சானிடைஸர்கள் வைத்திருக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
எல்லா நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு, அவர்கள் ஒப்பந்த ஊழியர்களாக இருந்தாலும் சம்பளத்தைத் தந்துவிட வேண்டும்.
ஏற்கனவே கூறியதைப் போல, பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், பூங்காக்கள், மால்கள், நீச்சல்குளங்கள் மூடப்பட்டிருக்கும். வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருக்கும். ஆனால், சடங்குகளைத் தொடர்ந்து செய்யலாம்.
மார்ச் 16ஆம் தேதிக்கு முன்பாக மண்டபங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த திருமணங்கள் மட்டுமே நடக்கலாம். ஆனால், 30 பேருக்கு மேல் வரக்கூடாது.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: “பயங்கர பேரழிவை எதிர்கொண்டுள்ளோம்” - எச்சரிக்கும் மகாதீர்
- கொரோனா வைரஸ்: அமெரிக்காவின் நிலை இனி என்னவாகும்? - அதிர்ச்சி தரும் தகவல்கள்
- கொரோனாவினால் தவிக்கும் இலங்கையர்களுக்கு 16 நிவாரண திட்டங்கள் அறிவிப்பு - விரிவான தகவல்கள்
- கொரோனாவினால் தவிக்கும் இலங்கையர்களுக்கு 16 நிவாரண திட்டங்கள் அறிவிப்பு - விரிவான தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












