கொரோனா வைரஸ்: பிரிட்டனில் சிகிச்சை அளிக்கும் கேரள செவிலியரின் நெகிழ வைக்கும் நிலை Corona Virus News

கொரோனா வைரஸ்: பிரிட்டனில் சிகிச்சை அளிக்கும் இந்திய செவிலியரின் உருக்கமான நிலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புக்காக
    • எழுதியவர், விஷ்ணுப்ரியா ராஜசேகர்
    • பதவி, பிபிசி தமிழ்

கொரோனா பரவும் அச்சத்தால் கோயில்கள், பள்ளிவாசல்கள் , தேவாலயங்கள் என அனைத்தும் மூடப்பட்டாலும், மூடாமல் தங்கள் கதவுகளைத் திறந்து பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கின்றன மருத்துவமனைகள் அதில் ஓயாமல் பணியாற்றிக் கொண்டு வருகின்றனர் மருத்துவ பணியாளர்கள்.

ஒருவருடன் ஒருவர் நெருக்கமாக இருப்பதைத் தவிருங்கள் என்று அனைவருக்கும் அறிவுறுத்தப்படும் இந்த சமயத்தில் தொற்று பாதித்தவர்களை ஓயாமல் கவனித்துக் கொள்ளும் செவிலியர்களின் மனநிலை என்னவாகும் இருக்கும்? இது குறித்து நம்முடன் உரையாடினார் லண்டனின் தேசிய சுகாதார அமைப்பின் கீழ் கடந்த இரண்டு வருடங்களாக பணிபுரிந்து வரும் கேரள செவிலியர்.

அதிக ஆபத்து

கொரோனா தொற்று நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதைக் காட்டிலும் கொரோனா தொற்று உள்ள நபரா இல்லையா எனத் தெரியாமல் சிகிச்சை அளிக்கும் சமயத்தில்தான் அதிக ஆபத்து உள்ளது. கொரோனா என்பது சாதாரண காய்ச்சலால் ஏற்படும் அறிகுறியைக் கொண்டது எனவே அச்சத்தில் வரும் மக்கள் பொதுவாக மாஸ்க் ஏதும் அணிந்து கொண்டெல்லாம் வர மாட்டார்கள். நேரடியாக வந்து எங்களிடம் நிற்பார்கள். அவர் வந்தவுடன் அவர்களை கொரோனா தொற்று உள்ள நோயாளிகளைப் போன்று சிகிச்சை அளிக்க முடியாது. அவர்களுக்கு நாங்கள் எடுத்து பொறுமையாக எடுத்து சொல்ல வேண்டும் ஆனால் பலர் அதைப் புரிந்து கொள்ள மாட்டார்கள் எங்களிடம் கோபமடைவார்கள்.

சில சமயங்களில் நோயாளிகள் இங்கு வரும்போது அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தாலும் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் வரை அவர்களை நெருங்கி நாங்கள் சிகிச்சை அளித்திருப்போம் அவர்களை ஒரு மெத்தையிலிருந்து தூக்கி மற்றொரு மெத்தையில் மாற்றியிருப்போம் ஆனால் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி என்று ஆன பிறகு நாம் அவர்களை நெருங்கி சிகிச்சை அளித்தோமே நாமும் அந்த தொற்றுக்கு ஆளாகிவிடுவோமோ என்ற அச்சமும் சந்தேகமும் ஏற்படும்.

கொரோனா வைரஸ்: பிரிட்டனில் சிகிச்சை அளிக்கும் இந்திய செவிலியரின் உருக்கமான நிலை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புக்காக

முடிந்த அளவிற்கு, மாஸ்க் போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் நோயாளிக்குச் சிகிச்சை அளித்தாலும், அது முழு பாதுகாப்பைக் கொடுக்கும் என்று உறுதியாக கூறமுடியாது.

நிறைய மக்கள் அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா, பாதிக்கப்பட்டுவிடுவார்களா என்றெல்லாம் அச்சப்பட்டாலும், நமக்கு சிகிச்சை அளிப்பவர்களும் மனிதர்கள்தான் அவர்களுக்கும் இந்த தொற்று கடந்து போகலாம் என நினைக்க மாட்டார்கள்.

இப்போது கொஞ்சம் விழிப்புணர்வு அதிகம் வந்துள்ளது எனவே காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களைத் தனியாக வைப்பது அதிகரித்துள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

மாஸ்க் அணியாமல்

இதற்கு முன்னால் இந்த விழிப்புணர்வு வருவதற்கு முன் நான் எப்போதும் போன்று மாஸ்க் அணியாமல்தான் இருந்தேன்.

இந்த சமயத்தில் மேலும் ஒரு சோதனை என்னவென்றால் கடைகளில் அத்தியாசியப் பொருட்கள் எல்லாம் மக்கள் அச்சம் கொண்டுவாங்குதால் தீர்ந்து போய்விடுகின்றன. அதே போலத்தான் மருத்துவமனைகளிலும்.

கொரோனா வைரஸ்: பிரிட்டனில் சிகிச்சை அளிக்கும் இந்திய செவிலியரின் உருக்கமான நிலை

பட மூலாதாரம், Getty Images

எங்களிடம் தொடர்ந்து நாங்கள் பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது ஆனால் மாஸ்க், க்ளவுஸ் போன்ற பொருட்களின் விநியோகம் குறைவாகத்தான் உள்ளது. எங்களின் தலைமை அதிகாரி எங்களிடம் தேவையான சமயங்களில் மட்டும் மாஸ்க் மற்றும் க்ளவுஸை பயன்படுத்துமாறு எங்களைக் கேட்டுக் கொண்டார்.

சமீபத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை நான் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. என்னிடம் நான் பாதுகாப்பிற்காக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்தும் கூறப்பட்டன ஆனால் அங்கு எனக்குக் கிடைத்தது என்னமோ சர்ஜிக்கல் மாஸ்க் தான் அதாவது ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியப்படும் மாஸ்க் ஒருவேளை நான் சிகிச்சை அளித்த நோயாளிக்கு கோவிட்-19 இருந்திருந்தால் அந்த மாஸ்க் ஒருபோதும் என்னைக் காப்பாற்றாது. ஆனால் அந்த சமயத்தில் அது அனைத்தும் தெரிந்துகொண்டு நான் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் மட்டும்தான் என் கண் முன்னே வந்தது.

ஒரு செவிலியராக நிச்சயமாக என்னால் அந்த சூழ்நிலையைப் புறந்தள்ள முடியாது. மாஸ்க் இல்லை நான் போக மாட்டேன் என்றெல்லாம் என்னால் கூற முடியாது. அந்த சமயத்தில் என்ன கிடைக்கிறதோ அதை வைத்துக் கொண்டு உடனே சிகிச்சையை நான் தொடங்க வேண்டும். எனவே அந்த மாஸ்கை போட்டுக் கொண்டு எனது சொந்த நோய் எதிர்ப்புச் சக்தியை நம்பி நான் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க அங்குச் சென்றேன். அங்கே போனதும் அவர்கள் எனது முகத்துக்கு நேராக இருமினார்கள், இருப்பினும் எனது நோய் எதிர்ப்புச் சக்தியை நம்பிக் கொண்டுதான் அங்கு நான் தொடர்ந்து நின்றேன். இது ஒரு நெருக்கடி நிலை என்பதை நாங்கள் புரிந்துகொண்டுதான் பணியாற்ற வேண்டும். அதுதான் எங்களின் சூழலும்கூட.

நான் சிகிச்சை அளித்த நபருக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தது எனவே நான் ரிஸ்க் எடுத்தது ஆபத்தில் முடியவில்லை.

அறிகுறிகள் உள்ள நோயாளிகளைத் தனி வார்டில் வைத்தாலும், அவர்களைச் சந்திக்க வரும் உறவினர்களோ நண்பர்களோ எந்த பாதுகாப்புமின்றி அவர்களை வந்து பார்ப்பார்கள் உடனே வந்து எங்களிடம் பேசுவார்கள் அது அவர்களுக்கும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் ஏன் மருத்துவமனையில் உள்ள வயதானவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆனால் ஓர் அளவு மட்டுமே எங்களால் எச்சரிக்கைகள் குறித்துச் சொல்ல முடியும். இந்த சமயத்தில் சமூகப் பொறுப்பு என்பது அவசியமான ஒன்று என்பதை யாரும் புரிந்து கொள்வதில்லை.

'எங்களுக்கும் குடும்பம் உண்டு'

இந்த பணியில் இருக்கும் ஒரு மிகப்பெரிய மன அழுத்தம் நம்மால் நம் குடும்பத்தாரும் பாதிக்கப்படுவார்களே என்ற அச்சம்தான். நான் தொற்றுள்ள ஒரு நபருக்குச் சிகிச்சை அளிப்பதும் அல்லது நான் தொடர்ந்து தொற்றுள்ள நபர்களுடன் இருப்பதும் எனது பணி ஆனால் என்னால் என் குடும்பத்தாருக்கு அந்த தொற்று பரவலாம் என்று நினைக்கும்போது நாம் மன அழுத்தத்தின் உச்சிகூட செல்ல நேரிடும்.

கொரோனா வைரஸ்: பிரிட்டனில் சிகிச்சை அளிக்கும் இந்திய செவிலியரின் உருக்கமான நிலை

பட மூலாதாரம், Getty Images

எவ்வளவுதான் கை கழுவினாலும், சுத்தமாக இருந்தாலும் நான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து விட்டு வீட்டிற்குச் செல்லும்போது எனது ஆடைகளிலும் அந்த கிருமிகள் ஒட்டிக் கொண்டிருக்கலாம் அது எளிதில் பாதிப்பிற்கு உள்ளாகும் நிலையில் உள்ள குழந்தைகளையும், முதியவர்களையும் நிச்சயம் பாதிக்கும்.

மற்றொரு மன அழுத்தம் இந்த கொரோனா தொற்று நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் செவிலியர்களுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர்கள் விடுப்பு எடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே இருக்கின்ற ஊழியர்களை கொண்டு பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் விழிப்புணர்வைக் காட்டிலும் அச்சமே அதிகமாக இருந்தது அந்த சமயத்தில் கொரோனா தொற்று வார்டில் பணியாற்றவே மருத்துவ பணியாளர்களும் பயந்தார்கள். அந்தமாதிரி சூழலில் யாருக்கு சம்மதமோ அவர்களுக்கு கொரோனா வார்டுக்கான பணி கொடுக்கப்பட்டது.

நமது சொந்த நாட்டில் இப்படி ஒரு நெருக்கடியைச் சந்திப்பதற்கும் பிற நாட்டில் சந்திப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. நான் அடுத்த மாதம் எனது குழந்தையை இங்கு கூட்டி கொண்டு வர வேண்டும் என திட்டமிட்டிருந்தேன் ஆனால் தற்போது நிலைமை மோசமாகி உள்ளதால் என் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு நான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

இதுஒருபுறம் இருக்க நான் ஒரு செவிலியர், இது அனைத்தும் தாண்டி நான் எனது குழந்தையை கொண்டு வந்தாலும், கொரோனா தொற்று நோயாளிகளுக்கு நான் சிகிச்சை அளித்துவிட்டு வீட்டுக்கு வந்தாலும் அந்த தொற்றை நான் வீட்டிற்கு அழைத்து வருகிறேன் என்றே அர்த்தம் எனவே அது என் குழந்தைக்கு ஆபத்துதான்.

Banner image reading 'more about coronavirus'

மாறும் விதிமுறைகள்

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் என்னுடன் பணிபுரியும் சக ஊழியர் ஒருவருக்கு தீவிரமான கொரோனா அறிகுறிகள் இருந்தது ஆனால் மருத்துவமனையில் அவர்களை சுய தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டதே தவிரே அவருக்கு உடனடியாக எந்த சோதனையும் செய்யவில்லை. இங்கு அனைவருக்கும் சமமான சிகிச்சையே வழங்கப்படும் அதுவே மருத்துவமனையின் விதிமுறை

ஆனால் அவர்களுக்கு சுய தனிமைப்படுத்துதல் என்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதில்தான் ஆபத்து உள்ளது.

சிகிச்சை அளிக்கும் செவிலியர்களுக்கான விதிமுறைகள் தற்போது மாறிக்கொண்டே வருகிறது.

முதலில் செவிலியர்கள் இந்த தொற்று இருந்தால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது ஆனால் தற்போது அவர்கள் தங்களைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. எனவே சிறு குழந்தைகளை வைத்திருக்கும் என்னுடன் பணிபுரியும் செவிலியர்கள் தனியாக வீடு எடுத்து குழுவாக தங்கவும் முயன்று வருகிறார்கள்.

இது எங்கள் பணி இதை நாங்கள் மனப்பூர்வமாகத்தான் ஏற்றுக் கொண்டோம் ஆனால் எங்களுக்கும் இயல்பான அச்சங்களும் தயக்கங்களும் இருக்கலாம், குடும்பச் சூழல்கள் இருக்கலாம் என்று அனைவரும் புரிந்து கொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை என முடிக்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: