கொரோனா வைரஸ் எதிரொலி: என்.பி.ஆர். பணிகளை ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு?

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைதொகுத்து வழங்குகிறோம்.
தி இந்து: தாமதமாகிறது என்.பி.ஆர். கணக்கெடுப்பு
கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தலின் காரணமாக வரும் ஏப்ரல் 1ஆம் முதல் இந்தியா முழுவதும் தொடங்குவதாக இருந்த தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான பணிகளை மத்திய அரசு தள்ளி வைக்க திட்டமிட்டுள்ளதாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
"உலகின் மற்ற நாடுகளை தொடர்ந்து தற்போது இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தடுப்பதற்கு சமூக விலகல் மிகவும் முக்கியம் என்று சுகாதாரத்துறை வலியுறுத்தி வரும் நிலையில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான பணிகளை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக செல்ல வேண்டிய என்.பி.ஆர். பணிகளை முன்னெடுத்தால் பெருந்தொற்று நோயான கொரோனா வைரஸின் பரவல் அதிகரிக்க கூடும் என்பதால், இதை திட்டமிடப்பட்ட தேதியிலிருந்து குறைந்தது ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டுமென்று டெல்லி அரசு சார்பில் மத்திய அரசு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இதே கருத்தை ஒடிஷா மாநில அரசும் முன்வைத்திருந்தது.
எனினும், மத்திய தனது முடிவை இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: "35 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 உதவித்தொகை"

பட மூலாதாரம், Getty Images
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 35 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
"உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று மேலும் பாதிக்காத வகையில், முடிந்தவரை பொதுமக்கள் அனைவரும் வீட்டிலிருந்து அலுவலக பணிகளை மேற்கொள்ள அரசு வலியுறுத்தியுள்ளது.
ஆனால், அன்றாடம் பணிபுரியும் கூலித்தொழிலாளிகள் மற்றும் கட்டட தொழிலாளர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும். எனவே, தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 2 லட்சத்து 3 ஆயிரத்து 700 பேருக்கு தலா ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அந்த நாட்டு முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும், கொரோனா அச்சுறுத்தலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கூலித் தொழிலாளர்கள் 15 லட்சம் பேருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி: இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை குறைத்த தரமதிப்பீட்டு நிறுவனங்கள்

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை சர்வதேச தரமதிப்பீட்டு நிறுவனங்கள் குறைத்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சர்வதேச அளவில் மிகப்பெரிய பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. கொரோனாவின் பாதிப்பு இந்தியாவிலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவின் பொருளாதார நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி, வளர்ச்சியைக் குறைக்கும் என சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனங்கள் கணித்துள்ளன.
சர்வதேச தரமதிப்பீடு நிறுவனமான பிட்ச் (FITCH) முன்னர் அறிவித்த 5.6 சதவிதம் என்ற இந்தியாவின் வளர்ச்சியை 5.1 சதவிதமாக குறைத்துள்ளது. இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கபடுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற கணிப்பில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைக்கப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதுபோல் மூடிஸ் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) இந்தியாவுக்கான 2020 வளர்ச்சி கணிப்புகளை முறையே 5.3 சதவிகிதத்தில் இருந்து 5.1 சதவீதமாக குறைத்துள்ளன.
அதேபோல், ஸ்டேண்டர்டு அண்ட் பூர் (STANDARD & POOR) நிறுவனம் முன்னர் கணித்திருந்த 5.7 சதவித வளர்ச்சியை 5.2 சதவிதமாகக் குறைத்துள்ளது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












