"கொரோனா வைரஸ் இந்தியாவில் 30 கோடி பேருக்கு பரவக்கூடும்" - எச்சரிக்கும் மருத்துவர் Coronavirus in India Explained

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் நேற்றிரவு 11.30 மணி வரை 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 191 பேர் இந்தியர்கள், 32 பேர் வெளிநாட்டவர்கள். 23 பேர் குணமடைந்துள்ளனர் என்கிறது இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை.
மக்கள் தொகை அதிகம் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைவாகவே உள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது.
இது உண்மையா? கொரோனா தொற்று பரவாமல் இந்தியாவில் தடுக்கப்படுமா? ஒருவேளை நிலைமை மோசமானால் இந்தியாவின் நிலை என்னவாக ஆகும்? - இப்படிப் பல கேள்விகளை நோய் இயக்குவியல் மையத்தின் இயக்குநர் மருத்துவர் ரமணன் லக்ஷ்மி நாராயணனிடம் கேட்டோம். இதற்கு அவர் அளித்த பதில்களைத் தொகுத்து வழங்குகிறோம்.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா எந்த அளவுக்கு பாதிக்கப்படும்?
உலகின் மற்ற பகுதிகளை விட இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள் என்று தற்போதைய நிலையில் சொல்ல முடியாது. கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகளுடன் இருப்பவர்களை அதிகளவில் பரிசோதிக்க தொடங்கினால்தான் நிலைமை தெரிய வரும். கொரோனா தொற்று தீவிரமாவதைப் பொறுத்தவரை நாம் சில வாரங்கள் பின் தங்கியிருக்கிறோம். அவ்வளவு தான். ஆனால் ஸ்பெயினில் சமீபத்தில் நாம் பார்த்ததை போல இன்னும் சில வாரங்களில் இந்த தொற்று சுனாமி போன்று உருவெடுக்கலாம்.
காணொளி வடிவில்:
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது ஏன்?
அதிகம் பேருக்குப் பரிசோதனை செய்யும்போது தொற்று அதிகளவு பரவி இருப்பதை நாம் கண்டறிய நேரிடலாம். ஆனால் உலகம் முழுவதுமே குறைவான எண்ணிக்கையிலேயே பரிசோதனை நடப்பது ஒரு பிரச்சனை. ஆனால் சில வாரங்களில் பரிசோதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகலாம் என நினைக்கிறேன். அதே போலத் தொற்று பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கையும் ஆயிரங்களை எட்டலாம். நாம் நிச்சயம் அதற்குத் தயாராக வேண்டும். சீனாவைப் போல அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட நாடு இந்தியா. எனவே வைரஸ் தொற்று பரவுவது எளிது. கொரோனாவின் சமூக பரவல் மிக வேகமாக நடக்கலாம். கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் மூலம் இரண்டு பேருக்குக் கூடுதலாகதொற்று ஏற்படுவதை நினைவிற்கொள்ள வேண்டும்.



பட மூலாதாரம், Getty Images
ஆக, எவ்வளவு பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் என இந்தியா எதிர்பார்க்கலாம்?
கணித மாதிரிகளைப் பயன்படுத்துவதன் மூலம்தான் எவ்வளவு பேருக்கு ஏற்படலாம் என்று கணிக்க முடியும். அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் மொத்த மக்கள் தொகையில் 20-60% பேர் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 20% என வைத்துக்கொண்டால் கூட இந்தியாவில் 30 கோடி பேருக்கு கொரோனா பரவக்கூடும். ஐந்தில் ஒருவர் அல்லது பத்தில் ஒருவர் தீவிர பாதிப்புக்குள்ளாகலாம் என்று கணக்கிட்டால் 40 முதல் 80 லட்சம் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நேரிடும்.
இந்தியாவின் சுகாதார அமைப்பு இதனை சமாளிக்குமா?
இந்தியாவில் மொத்தமாகவே 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள்தான் உள்ளன.
இவ்வளவு பெரிய நாட்டிற்கு இது மிகவும் குறைவான எண்ணிக்கை. அதுதான் எனக்கு கவலை அளிக்கிறது.
நமக்குத் தயாராவதற்கு நிறைய நேரம் இல்லை. இன்னும் மூன்று வாரங்கள்தான் உள்ளன. சீனாவைப் போல நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக மருத்துவமனைகளை உண்டாக்க வேண்டும். முடிந்தவரை நிறைய வென்டிலேட்டர்களை கொள்முதல் செய்ய வேண்டியதிருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
சரி, அதற்கான சிறந்த நடவடிக்கை என்னவாக இருக்கும்?
அடுத்த மூன்று வாரங்களில் நாம் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் சூழல் அப்படி இருக்கிறது. நமக்கு மூன்று வாரம் இருக்கிறது. கடற்கரையில் இருந்து கொண்டு சுனாமி அலை வருவதை பார்ப்பதாக கற்பனை செய்து பாருங்கள். அங்கேயே உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தால் சாக வேண்டியதுதான்.
உங்களால் முடிந்தவரை மிக வேகமாக ஓட்டமெடுக்கும்போது பிழைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
மக்கள் இந்த விவகாரத்தில் பதற்றப்படக்கூடாது, மக்களை பதற்றப்படுத்தவும் கூடாது. ஆனால் எதிர்கொள்ள தயாராக வேண்டும்.
பிற செய்திகள்:
- கொரோனா அச்சுறுத்தும் நிலையிலும் ஏவுகணைகளை பரிசோதித்த வட கொரியா
- கனிகா கபூருக்கு கொரோனா: நாடாளுமன்றம், குடியரசு தலைவர் மாளிகை வரை படர்ந்த அச்சம்
- கொரோனா வைரஸ்: ஃபேஸ்புக், ட்விட்டர், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் நிறுவனத்தின் நிலை என்ன?
- நிர்பயா பாலியல் வல்லுறவு: குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டது பெண்களுக்கு பாதுகாப்புத் தருமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :













