You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: ஸ்ரீரங்கம், பழனி, திருமலை திருப்பதி கோயில் நிலவரம் என்ன? - விரிவான தகவல்கள்
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா தாக்குதலின் பயமின்றி வழிபாட்டை மேற்கொள்ள, கோயிலுக்கு வரும் அனைவரும் தெர்மல் ஸ்கிரீன் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சுமார் 20,000 பக்தர்கள் தினமும் வருகிறார்கள் என்றும், வெளிநாட்டுப் பயணிகளும் வருவதால், நான்கு சோதனை கருவிகள் கோயிலின் வாயில்களில் வைக்கப்பட்டு, மருத்துவ குழுவினர் சோதனை மேற்கொள்கின்றனர் எனக் கோயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீரங்கம் கோயிலின் இணை ஆணையர் ஜெயராமன், எல்லா பக்தர்களும் சோதனை செய்யப்படுவதால், கொரோனா தாக்குதல் குறித்த பயம் இல்லாமல் கோயிலில் வழிபாடு நடைபெறுகிறது என்றார். ''ஸ்ரீ ரங்கம் கோயிலுக்கு வருபவர்கள் குறைந்தபட்சம் இரண்டு மணிநேரம் கோயில் வளாகத்தில் செலவிடுவார்கள். யாருக்கும் கொரோனா குறித்த பயம் இருக்கக் கூடாது என்பதற்காகச் சோதனை செய்கிறோம். காய்ச்சல் இருப்பவர்கள் உடனடியாக கண்டறியப்பட்டு, அரசு மருத்துவமனைக்குச் செல்வதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்”, என்று அவர் கூறினார்.
மேலும் , “இன்று(மார்ச் 14) முதல் தெர்மல் ஸ்கிரீன் என்ற நவீன முறையில் மருத்துவ சோதனை நடைபெறுகிறது. இதுவரை இரண்டு நபர்களுக்குக் காய்ச்சல் இருந்ததால், மருத்துவமனைக்குச் செல்ல உதவினோம்,'' என ஜெயராமன் தெரிவித்தார். திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சோதனை செய்கிறார்கள் என்றும் கோயில் பண்டிதர்களுக்கு போதுமான விழிப்புணர்வு அளிக்கப்பட்டுள்ளது”, என்றும் அவர் தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
நேற்று(மார்ச் 13) மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் விதத்தில்,காய்ச்சல் அல்லது பிற அறிகுறிகள் யாரிடமாவது தென்பட்டால், கோயில் பணியாளர்கள், அவர்களுக்கு மாஸ்க் தரவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோயில்
கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட சோதனைக்கு பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு காய்ச்சல், இருமல் பாதிப்பு உள்ளதா? என மருத்துவகுழுவினர் கேட்டறிந்து தீவிர சோதனை செய்கின்றனர். அதன்பிறகே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
திருப்பதி கோயில்
காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ள பக்தர்கள் திருமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியமாக உள்ள வர்கள் மட்டுமே திருமலைக்கு வரவேண்டும் என திருப்பதி திருமலை தேவஸ்தானமும் கேட்டுக்கொண்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: