பேராசிரியர் க. அன்பழகன் மறைவுக்கு தொண்டர்கள், தலைவர்கள் அஞ்சலி

க. அன்பழகன் மறைவுக்கு, தொண்டர்கள் தலைவர்கள் அஞ்சலி

பட மூலாதாரம், assembly.tn.gov.in

தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. "திராவிடச் சிகரம் சாய்ந்துவிட்டது; சங்கப் பலகை சரிந்துவிட்டது" என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

News image

சனிக்கிழமையன்று அதிகாலை 1 மணியளவில் அன்பழகன் மறைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு மருத்துவமனையிலேயே மு.க. ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதற்குப் பிறகு அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அங்கும் மு.க. ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டவர்கள் மரியாதை செலுத்தினர். இதற்குப் பிறகு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அஞ்சலி செலுத்தினார்.

க. அன்பழகனின் உடலுக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

தி.மு.கவின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வாரகாலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகவும் அக்கட்சியின் கொடிகள் ஒரு வார காலத்திற்கு அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படுமென்றும் மு.க. ஸ்டாலின் அறிக்கை வாயிலாகத் தெரிவித்திருக்கிறார்.

க. அன்பழகனுக்கு அவர் தன் கைப்பட எழுதி வெளியிட்டிருக்கும் இரங்கல் குறிப்பில், "திராவிடச் சிகரம் சாய்ந்துவிட்டது; சங்கப் பலகை சரிந்துவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.

(கோப்புப்படம்)

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, (கோப்புப்படம்)

"எனக்கு உயிரும் உணர்வும் தந்தவர் கலைஞர்; எனக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டியவர் பேராசிரியர். இந்த நான்கும்தான் என்னை இந்த இடத்தில் இருத்தி வைத்துள்ளது. எனக்கு அத்தை உண்டு பெரியப்பா இல்லை. பேராசிரியப் பெருந்தகையையே பெரியப்பாவாக ஏற்று வாழ்ந்தேன். அப்பாவைவிட பெரியப்பாவிடம் நல்ல பெயர் வாங்குவதுதான் சிரமம். அவரே என்னை முதலில் தலைவர் கலைஞருக்குப் பிறகு தம்பி ஸ்டாலினே தலைவர் என்று அறிவித்தார். எனது வாழ்நாள் பெருமையை எனக்கு வழங்கிய பெருமகன் மறைந்தது என் இதயத்தைப் பிசைகிறது" என தனது இரங்கல் குறிப்பில் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

கருணாநிதி, மு.க. ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோருடன் க.அன்பழகன்.
படக்குறிப்பு, கருணாநிதி, மு.க. ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோருடன் க.அன்பழகன்.

க. அன்பழகனின் உடலுக்கு பொதுமக்களும் கட்சித் தொண்டர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக காலை ஆறு மணி முதல் அனுமதிக்கப்படுகிறார்கள். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை ஆறரை மணியளவில் நடக்குமென குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

திராவிட கட்சியின் தொடக்ககால தலைவர்களில் ஒருவரான அன்பழகனின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்தும், அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

அன்பழகன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். ''கருணாநிதியின் அரசியல் பயணத்தின் நெடுகிலும் உற்ற தோழராக இருந்தவர் அன்பழகன். திராவிட இயக்கக் கொள்கைகளில் இருந்து விலகாத உறுதிமிக்க மூத்த அரசியல்வாதி. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திமுகவினருக்கு ஆழ்ந்த இரங்கல், அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அரசியல்வாதி, ஆசிரியர், பேச்சாளர், எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகத் திறமைகள் கொண்ட அன்பழகனின் இழப்பு பேரிழப்பாகும்,''என முதல்வர் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், dipr tn

முதல்வர் மலர் வளையம்

அன்பழகன் உடலுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

பாமக இளைஞரணி தலைவரான அன்புமணி ராமதாஸ் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அன்பழகனின் குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கடந்த வாரம் அன்பழகனை நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

பாஜக தலைவரும், தெலுங்கானா மாநில ஆளுநராக உள்ளவருமான தமிழிசை சௌந்தரராஜனும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

வீட்டில் குவிந்த தொண்டர்கள்

பேராசிரியர் அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திமுக தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், திரைப்படத் துறையினர் என பலரும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்துள்ளனர். தொல்.திருமாவளவன், ''தந்தை பெரியாரின் பாசறையில் பயின்று, பேரறிஞர் அண்ணாவின் வழிகாட்டலில் வளர்ந்த பேராசிரியர், மறைந்த தலைவர் கலைஞரின் நம்பிக்கைக்குரிய தோழனாக, தடம் மாறாத தளபதியாக உடன் பயணித்தவர். அரசியலில் எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் வந்தபோதிலும் கொண்ட கொள்கையில் சற்றும் உறுதி தளராமல் நடை போட்டவர்,'' என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல் ஹாசன் தனது வருத்தத்தை ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

''தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் திரு.அன்பழகன் அவர்களின் இழப்பு வேதனைக்குரியது. அவர் குடும்பத்தாருக்கும் அவரது இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்,'' என கமல் பதிவிட்டுள்ளார் .

அமமுகவின் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், பேராசிரியர் அன்பழகன் காலமான செய்தி அறிந்து வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார். ''தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான அன்னாரது மறைவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,''என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மதிமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் - வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், "நடேசனார், தியாகராயர், டி.ம்.நாயர் அமைத்த திராவிட இயக்கத்தின் கருவறையை, எஃகுக் கோட்டையாக ஆக்கிய அறிவாசான் பெரியார், அண்ணா வழியில், எட்டுத் திக்கிலும் புகழ் பரப்பும் இயக்கமாய் வளர்த்த கருணாநிதிக்குத் தோன்றாத் துணையாய், திராவிட இயக்கத்தின் பாதுகாப்புக் கவசமாய் புகழ்க்கொடி உயர்த்திய, தன்மானக் காவலர், இனமானத்தின் இமயமாய் செம்மாந்து திகழ்ந்த ஏந்தல், திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைந்தார் என்ற செய்தி, உச்சந்தலையில் விழுந்த பேரிடியாய்த் தாக்கியது,''என வருத்தம் தெரிவித்துள்ளார்.

மதிமுக சார்பில் இரங்கல் தெரிவிக்கும் விதமாக மூன்று நாட்களுக்கு மதிமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்றார் வைகோ.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: