பேராசிரியர் க. அன்பழகன் உடல் தகனம்: மு.க.ஸ்டாலின், தலைவர்கள் பங்கேற்பு

க. அன்பழகன்

பட மூலாதாரம், dmk facebook page

திமுக பொதுச் செயலாளரும், மூத்த திராவிட இயக்கத் தலைவருமான பேராசிரியர் க.அன்பழகனின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் வேலங்காடு மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமான அவருக்கு வயது 98.

News image

இறுதி ஊர்வலம் கீழ்ப்பாக்கத்தில் அவரது இல்லத்தில் இருந்து தொடங்கியது. ஊர்வலத்தில் தி.மு.க. தலைவர் மு.க..ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர்கள் பூங்கோதை, கே.என்.நேரு, பொன்முடி, உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

வீட்டில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மின்மயானத்திற்கு செல்லும் அனைவரும் நடந்து சென்று இறுதி சடங்கில் கலந்துகொண்டதால் வழியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இறுதி மரியாதை செலுத்திவிட்டு திமுக பொருளாளர் துரைமுருகன் கதறி அழுதார். அவரை டி.ஆர்.பாலு, கவிஞர் வைரமுத்து ஆகியோர் தேற்றினர்.

ஓராண்டாக வீட்டில்...

அன்பழகன் முதுமை காரணமாகவும் உடல்நலக் குறைவின் காரணமாகவும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் வீட்டிலிருந்தபடியே சிகிச்சைபெற்று வந்தார்.

இந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமானதால் கடந்த ஃபிப்ரவரி 24ஆம் தேதி அவருக்கு மூச்சுச் திணறல் ஏற்பட்டது. அவர் உடனடியாக க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவந்தாலும் அவரது உடல் நிலையில், முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இருந்தபோதும் அவரது உடல்நிலை மோசமடைந்துவந்தது. இந்நிலையில், அவர் இன்று, சனிக்கிழமை அதிகாலை ஒருமணியளவில், காலமானதாக அறிவிக்கப்பட்டது.

க. அன்பழகன் யார்?

1922ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதி திருவாரூருக்கு அருகில் உள்ள காட்டூரில் கல்யாணசுந்தரம் - சொர்ணம் தம்பதியின் மூத்த மகனாகப் பிறந்த இவருக்கு முதலில் ராமையா என்ற பெயரே சூட்டப்பட்டது.

தி.மு.க. பொதுச் செயலாளர் க. அன்பழகன் காலமானார்

அன்பழகனின் தந்தை காங்கிரஸ் இயக்க அபிமானம் உடையவர் என்றாலும், 1925ல் பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறியபோது அவருடன் சேர்ந்து வெளியேறியவர். இதற்குப் பிறகு தந்தையாருடன் சேர்ந்து பெரியாரின் பொதுக்கூட்டப் பேச்சுகளை கேட்பது அவரது வழக்கமாக இருந்தது. சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டுவந்தார் அன்பழகன்.

தனித் தமிழ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு ராமையா என்ற தனது இயற்பெயரை, அன்பழகன் என பிற்காலத்தில் மாற்றிக்கொண்டார் அவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியராக பணியாற்றியதால் அவருடைய பெயருக்கு முன்பாக 'பேராசிரியர்' என்ற பட்டம் ஒட்டிக்கொண்டது.

1942ஆம் ஆண்டில் திருவாரூர் விஜயபுரத்தில் சி.என். அண்ணாதுரை ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றபோது, அவரைப் பார்க்க வந்த மு. கருணாநிதியும் அன்பழகனும் முதல் முறையாகச் சந்தித்தனர். உடனடியாக ஒரு கூட்டத்தில் பேச அழைத்தார் கருணாநிதி. அப்போது ஏற்பட்ட நட்பு, மு. கருணாநிதி மறையும் வரை 76 ஆண்டுகள் நீடித்தது.

ஒட்டுமொத்தமாக எட்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் ஒருமுறை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். மு. கருணாநிதி முதலமைச்சரான பிறகு, 1971ல் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக முதன்முறையாக அமைச்சரானார் அன்பழகன். சுகாதாரத் துறை அமைச்சகம் என்ற பெயரை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் என்று மாற்றியவர் அன்பழகன்தான்.

கருணாநிதி, மு.க. ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோருடன் க.அன்பழகன்.
படக்குறிப்பு, கருணாநிதி, மு.க. ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோருடன் க.அன்பழகன்.

தமிழ்நாட்டின் கல்வி அமைச்சராக இரண்டு தடவையும் நிதியமைச்சராக ஒரு முறையும் செயல்பட்டிருக்கிறார் க. அன்பழகன். 1977ஆம் ஆண்டு முதல் தி.மு.கவின் பொதுச் செயலாளராகவும் இருந்துவந்தார் க. அன்பழகன்.

அன்பழகனின் மனைவி வெற்றிச் செல்வி ஏற்கனவே காலமாகிவிட்டார். இந்த தம்பதிக்கு செந்தாமரை, மணவல்லி என இரண்டு மகள்களும் அன்புச் செல்வன் என்ற மகனும் இருக்கின்றனர்.

பிராமணன் பிறக்கவில்லை, இன முழக்கம், வாழ்க திராவிடம், மாமனிதர் அண்ணா, The Dravidian Movement, வகுப்புரிமை போராட்டம், திராவிட இயக்கத்தின் தோற்றமும் தேவையும் ஆகிய புத்தகங்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார் க. அன்பழகன்.

க. அன்பழகனின் மரணத்துடன், பெரியார், சி.என். அண்ணாதுரை உள்ளிட்ட மூத்த திராவிட இயக்கத் தலைவர்களுடன் பணியாற்றிய அரசியல் தலைவர்களின் காலம் முடிவுக்கு வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: