கலப்புத் திருமணம் செய்வோரை பாதுகாக்க காப்பகங்கள்: கேரள அரசு முடிவு

கலப்புத் திருமணம்

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: "கலப்புத் திருமணம் செய்வோரை பாதுகாக்க காப்பகங்கள்"

கேரளாவில் கலப்புத் திருமணம் மற்றும் மதம் மாறி திருமணம் செய்வோா் பாதுகாப்பாக வசிப்பதற்காக காப்பகங்களை ஏற்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

News image

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கலப்புத் திருமணம் செய்துகொள்வோா் கொலை செய்யப்படுவது, மிரட்டப்படுவது உள்ளிட்ட அச்சுறுத்தல்கள் காணப்படும் நிலையில், கேரள அரசு இத்தகைய முயற்சியை முன்னெடுத்துள்ளது.

இதுதொடா்பாக கேரளாவின் சமூக நீதித்துறை அமைச்சா் கே.கே. ஷைலஜா கூறியதாவது: "கலப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதி பாதுகாப்பாக ஓராண்டு வரையில் தங்குவதற்கு காப்பகங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம். தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது."

"கலப்புத் திருமணம் செய்யும் தம்பதி பொதுப் பிரிவினராக இருந்து, ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் சுயவேலைவாய்ப்புக்கான நிதியுதவியாக அவா்களுக்கு ரூ.30,000-ஐ ஏற்கெனவே சமூகநீதித் துறை வழங்கி வருகிறது. தம்பதியில் ஒருவா் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்தவராக இருக்கும் பட்சத்தில் அவா்களுக்கு ரூ.75,000 நிதியுதவி அளிக்கப்படுகிறது" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தினத்தந்தி: "சபரிமலை வழக்குக்கு பின்னரே சிஏஏ வழக்கு விசாரணை"

சிஏஏ

பட மூலாதாரம், Getty Images

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்களை உடனடியாக விசாரிக்க முடியாது எனவும், சபரிமலை வழக்கை முடித்த பின்னரே விசாரிக்க முடியும் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், தி.மு.க., ராஷ்ட்ரீய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மற்றும் அனைத்து அசாம் மாணவர்கள் சங்க அமைதிக்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

மொத்தத்தில் இந்த சட்டத்துக்கு எதிராக 140 ரிட் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மனுக்களிலும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வில் மூத்த வழக்குரைஞர் கபில்சிபல் ஆஜராகி இந்த மனுக்களை விரைந்து விசாரிக்கும் வகையில் பட்டியலிட வேண்டும் என்று முறையிட்டார். மேலும் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யாததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதற்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, தற்போது இந்த மனுக்களை அவசர வழக்காக பட்டியலிட முடியாது என்றும், ஹோலி விடுமுறைக்கு பிறகு மீண்டும் முறையிடுமாறும் கூறினார். மேலும் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு சபரிமலை தொடர்பான வழக்கை விசாரித்து முடித்த பின்னர் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தி எகனாமிக் டைம்ஸ் - "எஸ் பேங்க் - ஐம்பதாயிரம் மேல் எடுக்க முடியாது"

எஸ் பேங்க்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் தனியார் வங்கிகளில் ஒன்றான எஸ் பேங்கின் இயக்குநர்கள் குழுவின் செயல்பாட்டை ஒரு மாதகாலத்துக்கு முடக்கியுள்ள இந்திய ரிசர்வ் வங்கி, அதன் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கிலிருந்து அதிகபட்சம் ஐம்பதாயிரத்தை மட்டுமே எடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

"வைப்பாளர்களின் நலன்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படும்; பீதி அடையத் தேவையில்லை" என்று இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த கடனை திரும்ப வசூலிக்க முடியாமலும், புதிதாக நிதியை திரட்ட முடியாலும் தவித்து வரும் எஸ் பேங்கின் அமைப்பு முறையை மாற்றுவதற்கு வாய்ப்பளிப்பதற்காக இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: