You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு: டெல்லியில் இரு பள்ளிகள் மூடல் - கடற்படை நிகழ்வு ரத்து
இந்தியாவில் புதிதாக இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனா இருப்பதாக சந்தேகத்தின் பேரில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 6 நோயாளிகள் டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விசாகப்பட்டனத்தில் கடற்படை மேற்கொள்ளவிருந்த சர்வதேச ஒத்திகை நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் டெல்லியில் ஒருவருக்கும், தெலங்கானாவில் ஒருவருக்கும் கொரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள் கிழமை உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் டெல்லி நபர் இத்தாலிக்கும், தெலங்கானா நபர் துபாய்க்கும் அண்மையில் பயணம் செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் யார் யாருடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்பது ஆராயப்பட்டு அவர்களுக்கும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. டெல்லி அருகே உள்ள நொய்டாவில் உள்ள ஒரு பள்ளியின் மாணவர்கள் பலர் அந்த கொரோனா நோயாளி அளித்த விருந்தில் பங்கேற்றதாகத் தெரிய வந்ததை அடுத்து அந்தப் பள்ளி அடுத்த சில நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் நோய் தாக்கிய நபர் பெங்களூரில் இருந்து பயணித்து சென்றதாகத் தெரியவந்ததை அடுத்து அவருடன் பஸ்ஸில் பயணித்தவர்கள் யார் யார் என்பது கண்டறியப்பட்டு அவர்கள் தங்கள் இல்லங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே உ.பி.யில் கொரோனா தொற்றியிருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் 6 நோயாளிகள் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தெற்கு டெல்லியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த 21 இத்தாலி பயணிகள் மற்றும் 3 இந்தியர்கள் இந்தோ- திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, முடிவுகள் நாளை தெரியும் என்று அரசுத் தரப்புத் தகவல்கள் கூறுவதாக ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது.
சர்வதேச கூட்டுக் கடற்படை பயிற்சி ஒத்திவைப்பு
இதனிடையே மார்ச் 18 முதல் 28 வரை விசாகப்பட்டிணத்தில் இந்தியக் கடற்படை சார்பில் நடத்தப்படவிருந்த சர்வதேச கடற்படை ஒத்திகையான மிலன்2020 (MILAN 2020) நிகழ்வும் கொரோனா நோய்ப் பரவலை கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பங்கேற்பவர்களின் பாதுகாப்பு கருதியும், பயணத் தடைகளையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக இந்திய கடற்படையை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.
பீதி அடையவேண்டாம்: பிரதமர் வேண்டுகோள்
இதனிடையே இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று குறித்து பீதியடையவேண்டாம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். "பீதியடையத் தேவையில்லை. நாம் சேர்ந்து செயல்படவும், தற்காப்புக்கான சிறிய ஆனால் முக்கியமான நடவடிக்கைகளை எடுக்கவும் வேண்டும்" என்று அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் அந்த ட்விட்டர் பதிவில் பகிர்ந்துள்ள விழிப்புணர்வுத் தகவலில், அடிக்கடி கை கழுவுங்கள், சமூகத்தில் மற்றவர்களிடம் இருந்து தள்ளி இருங்கள், உங்கள் கண், மூக்கு, வாய் ஆகியவற்றை தொடுவதைத் தவிருங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிற செய்திகள்:
- இரும்புக் கம்பிகளுடன் சென்ற இளைஞர்களும், ஜெய் ஸ்ரீராம் கோஷமும்: பிபிசி செய்தியாளரின் அனுபவம்
- டெல்லி வன்முறை: ஏன் துரிதமாக செயல்படவில்லை? - காவல்துறையிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி
- கொரோனா வைரஸ்: இத்தாலியில் கடும் பாதிப்பு - அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நிலவரம் என்ன?
- டெல்லியில் வன்முறை வெறியாட்டத்தில் தீக்கிரையான மசூதி - புகைப்படத் தொகுப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: