You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி வன்முறை: ஏன் துரிதமாக செயல்படவில்லை? - காவல்துறையிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி
டெல்லி வன்முறையை டெல்லி போலீஸார் கையாண்ட விதம் குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
டெல்லி வன்முறையை துரிதமாக கையாண்டிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசஃப் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஷாஹின்பாக் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துவது தொடர்பான விசாரணையின்போது நீதிபதி இதனை தெரிவித்தார்.
மேலும் 'உடனடி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இது போன்ற சூழல்களில் இங்கிலாந்து போலீசார் நடவடிக்கைகள் எடுப்பதை பாருங்கள்' என்று நீதிபதி கே.எம்.ஜோசஃப் சுட்டிக்காட்டினார்.
''வன்முறையின் போது உடனடி நடவடிக்கை எடுக்காமல், எதற்காக காத்திருக்க வேண்டும்'' என்றும் உச்ச நீதிமன்றம் அமர்வு வினவியது.
மேலும் மனித உயிர்கள் விலைமதிப்பற்றது என்றும், நிர்வாகத்தை அதன் பணியை செய்யவிடுங்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஏன் இந்த அளவிற்கு நிலைமையை கைமீறி போக விட்டீர்கள் என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற அமர்வு, ''இது மிகவும் முக்கியமான பிரச்சனை. எவ்வளவு உயிர்களை இழந்துள்ளோம். 13-ஆ அல்லது அதற்கும் மேலா?'' என்று வினவியது.
இதனிடையே ஷாஹின்பாக் தொடர்பான விசாரணையை மார்ச் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.
நேற்று இரவு காயமடைந்தவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அரசு மற்றும் போலீஸாருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
டெல்லி வன்முறை
கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வரும் வன்முறையில், இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். 189 பேர் காயமடைந்துள்ளனர்.
ஜிடிபி மருத்துவமனை என்று அறியப்படும் குரு தேஜ் பகதூர் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் சுனில் குமார் கெளதம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் உள்ள பிபிசி செய்தியாளர்கள், துப்பாக்கி குண்டு காயம் உட்பட அனைத்துவிதமான காயங்களுடன் மக்கள் அனுமதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.
மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும், காயமடைந்தவர்கள் வீடுகளுக்கு திரும்பி செல்ல அஞ்சுவதாகவும் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: