ஊட்டி மலை ரயில் சேவையின் கட்டணம் உயர்வு - மார்ச் 1 முதல் உயர்ந்தது

கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி ஆகிய பகுதிகளுக்கு இடையில் இயக்கப்படும் சுற்றுலா ரயில் சேவையின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
தமிழகத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தின் உதகை எனப்படும் ஊட்டி உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
பேருந்து மற்றும் ரயில் சேவையைப் பயன்படுத்தி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், சர்வதேச அளவில் பல நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு வந்து ஊட்டியின் ரம்மியமான இயற்கை சூழலையும், குளுமையான வானிலையையும் ரசித்துச் செல்கின்றனர்.
மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டிக்கு இடையில் இயக்கப்படும் நூற்றாண்டு பழைமை வாய்ந்த மலை ரயில் உலகப் புகழ்பெற்ற அடையாளமாகத் திகழ்கிறது.
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (UNESCO) ஊட்டி மலை ரயிலை பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது. இந்த மலை ரயிலில் பயணிக்க ஏராளமானோர் பல மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
அதிக அளவில் பயணிகளின் வருகை இருப்பதால், ஊட்டி மலை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஊட்டி மலை ரயில் சேவையின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
உயர்த்தப்பட்ட கட்டண விவரங்கள் குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில்,
'மேட்டுப்பாளையத்தில் இருந்து, தினமும் காலை, 7:10 மணிக்கு இயக்கப்படும் ஊட்டி மலை ரயிலில் குன்னுார் வரை செல்ல முன்பதிவு கட்டணத்தோடு முதல் வகுப்பு கட்டணம், ரூ. 365 ஆக இருந்தது ரூ.445 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ஊட்டிக்கு ரூ.470 ஆக இருந்த கட்டணம், ரூ.600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு கட்டணம், குன்னுாருக்கு, ரூ.100ல் இருந்து, ரூ.190 ஆகவும், ஊட்டிக்கு, ரூ.145ல் இருந்து, ரூ.295 ஆகவும் உயர்ந்துள்ளது.
முன் பதிவில்லாத சாதாரண கட்டணம் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னுாருக்கு, ரூ. 50ல் இருந்து ரூ.110 ஆகவும், ஊட்டிக்கு, ரூ.75ல் இருந்து, ரூ.175 ஆகவும் உயர்ந்துள்ளது. இக்கட்டண உயர்வு, மார்ச் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேவை காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர், வெல்லிங்டன், அரவங்காடு, கேட்டி, லவ்டேல் வழியாக ஊட்டிக்கு பிற்பகல் 12 மணிக்கு செல்கிறது. அதேநாளில், ஊட்டியிலிருந்து இதேவழியாக 2 மணிக்கு கிளம்பும் ரயில் மாலை 5.35 மணிக்கு மேட்டுப்பாளையத்தை வந்தடைகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













