You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
`சுட்டு தள்ளு ` என கோஷம் எழுப்பியவர்கள் கைது - மேற்கு வங்க முதல்வர் அதிரடி
- எழுதியவர், பிராபகர் மணி திவாரி
- பதவி, பிபிசி ஹிந்தி சேவைக்காக
கொல்கத்தாவில் ஞாயிற்று கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேரணியின் போது சுட்டு தள்ளு என கோஷம் எழுப்பிய மூன்று பாஜக உறுப்பினர்களை போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் அமித் ஷா நடத்திய பேரணியில் கலந்து கொள்ள சென்ற போது இவ்வாறு கோஷம் எழுப்பியுள்ளனர்.
இதனை திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சித்துள்ளன. ஆனால் இது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சதி என பாஜக கட்சியினர் கூறியுள்ளனர்.
மகாநகர் நியூ மார்க்கெட் காவல் நிலையத்தில் ஞாயிற்று கிழமை இரவு சிலர் மேல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என போலீஸார் கூறியுள்ளனர்.
இணை காவல் ஆணையர்( குற்றப்பிரிவு) முரளிதர் ஷர்மா கூறுகையில், ”நேற்று இரவு சிசிடிவி காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காண முடிந்தது. இதன் அடிப்படையில் சுரேந்திர குமார் திவாரி, பங்கஜ் பிரசாத் மற்றும் துவ்ர பசு ஆகியோர் திங்கள் கிழமை கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் திங்கள் கிழமை நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்படுவர்” என்றார்.
நடந்தது என்ன?
ஞாயிற்று கிழமை காங்கிரஸ் மற்றும் இடது சாரிகள் மேற்கு வங்கத்துக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக `Go Back Amit Sha` என்னும் கோஷம் எழுப்பி பேரணி நடத்தினர்.
அப்போது அவரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
அதே சமயம் தர்மதல்லா பகுதியில் ஜவஹர்லால் நேரு சாலையில் அமித் ஷா நடத்தவிருந்த பேரணியில் கலந்து கொள்ள சென்ற பாஜக உறுப்பினர்கள் இந்த எதிர்ப்பு பேரணியை சந்தித்தனர்.
அப்போது பாஜகவை சேர்ந்தவர்கள் `சுட்டு தள்ளு` என கோஷம் எழுப்பினர்.
அவர்களின் இந்த கோஷம் காணொளியாக சமூக வலைதளத்தில் வைரலானது. இதைப் பற்றி விசாரிக்கக்கோரி மாநில அரசு காவல் துறைக்கு ஆணையிட்டது.
பிறகு காவல் துறை இதை விசாரிக்கத் தொடங்கியது.
மேற்கு வங்க முதல்வர் கூறுவது என்ன?
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அமித் ஷாவின் சுற்று பயணத்தின்போது சுட்டு தள்ளு என்ற கோஷம் எழுப்பியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கோஷம் தீப்பற்ற வைக்கக்கூடிய ஒன்றாகும். சட்டத்துக்கும் புறம்பானது. இது டெல்லி இல்லை. மேற்கு வங்கம். இங்கே ஒருவரை விட்டால் இன்னொருவரின் தைரியம் மேலோங்கும் எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர், மேற்கு வங்கத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து பேசுபவர்கள் டெல்லியில் நடக்கும் வன்முறையைத் தூண்டும் அரசியல் தலைவர்களை இன்னும் ஏன் கைது செய்யவில்லை என்பதற்கு பதில் சொல்லட்டும். மேற்கு வங்கத்தில் ஒருவர் பேசினார் அவரை கைது செய்தாயிற்று. இது போல் ஏன் டெல்லியில் நடக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பினார்.
"துரோகிகள் யார் என்று யார் முடிவெடுப்பது? முடிவெடுக்க நீங்கள் யார்" என்று கேட்டுள்ளார் மம்தா பானர்ஜி.
மேலும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் போலீஸார் தேடும் குற்றவாளிகளை பிடிக்க உதவி செய்ய வேண்டும். ஆனால், சட்டத்தை கையில் எடுக்க கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
'சுட்டுத் தள்ளு' கோஷத்துக்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
பாஜக கூறும் பதில்
ஆனால் தங்கள் கட்சி உறுப்பினர்களை கைது செய்வதற்கு திரிணாமுல் காங்கிரஸ் செய்யும் சூழ்ச்சி இது என பாஜ கட்சியினர் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் என கைது செய்யப்பட்ட ஒருவரில் துவ்ர பசு என்பவர் குற்றம் ஏதும் செய்யவில்லை என அவர்களின் வீட்டில் இருப்பவர்கள் கூறுகிறார்கள் என பாஜகவினர் கூறியுள்ளனர்.
துவ்ரவின் உறவினர் ரஞ்சித் பசு கூறுகையில், துவ்ர ஒரு கட்டுக்கோப்பான உறுப்பினர். அவர் இவ்வாறு செய்ய மாட்டார் என கூறினார்.
இது குறித்து அரசியல் அறிவியல் துறை பேராசியராக இருக்கும் சமரேஷ் சான்யால் கூறுகையில், திரிணமூல் "காங்கிரசுக்கு மத்தியில் ஆளும் பாஜகவுடன் மறைமுக உறவு இருக்கிறது என்று எழுப்பப்படும் குற்றச்சாட்டைத் துடைத்துக்கொள்ளும் வகையில் இந்த சுட்டுத் தள்ளு கோஷம் எழுப்பியவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திருக்கிறது திரிணமூல் காங்கிரஸ் அரசு" என்று தெரிவித்தார். .
பிற செய்திகள்:
- இரும்புக் கம்பிகளுடன் சென்ற இளைஞர்களும், ஜெய் ஸ்ரீராம் கோஷமும்: பிபிசி செய்தியாளரின் அனுபவம்
- டெல்லி வன்முறை: ஏன் துரிதமாக செயல்படவில்லை? - காவல்துறையிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி
- கொரோனா வைரஸ்: இத்தாலியில் கடும் பாதிப்பு - அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நிலவரம் என்ன?
- டெல்லியில் வன்முறை வெறியாட்டத்தில் தீக்கிரையான மசூதி - புகைப்படத் தொகுப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: