குடியுரிமை திருத்தச் சட்டம்: வண்ணாரப்பேட்டை போராட்டத்துக்கு திரைப்பட இயக்குநர்கள் ஆதரவு

வண்ணாரப்பேட்டை போராட்டம்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, அரசியல்வாதிகள் முதலில் தங்களிடம் என்னென்ன ஆவணங்கள் உள்ளன என தெரிவித்துவிட்டு, பின்னர் மக்களை காட்டச்சொல்லலாம் என திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

News image

சர்ச்சைக்குரிய கேள்விகளை கொண்டிருக்கும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து கடந்த 16 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடந்துவருகிறது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் நூற்றுக்கணக்கான பெண்கள் குழந்தைகளுடன் இரவு பகலாக போராட்டம் நடத்திவருகின்றனர்.

CAA Protest

பட மூலாதாரம், Syed ali

படக்குறிப்பு, திரைப்பட இயக்குநர் அமீர்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என போராட்டம் நடத்திவரும் கூட்டத்தில் தினமும் அரசியல் கட்சியினர், மதகுருக்கள், சமூக செயல்பாட்டாளர்கள், திரைப்பட பிரபலங்கள் உள்ளிட்டோர் நேரில் வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இன்று வண்ணாரப்பேட்டை வந்த திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், அமீர் உள்ளிட்டவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் மக்களிடம் ஏற்படுத்திய அச்சம் குறித்து பேசினர்.

வண்ணாரப்பேட்டை போராட்டம்

போராட்டக்காரர்களிடையே பேசிய இயக்குநர் அமீர், ''அரசியல்வாதிகளின் வாய்வார்த்தைகளை மக்கள் நம்பவில்லை. ஆதாரங்களை மக்கள் காட்டவேண்டும் என வற்புறுத்துவதைவிட அரசியல்வாதிகள் தங்களிடம் என்ன ஆவணங்கள் உள்ளன என்பதை சொல்லட்டும். அவர்கள் ஆவணங்கள் வைத்திருந்தால், அதேபோன்ற ஆவணங்களை மக்களிடம் கேட்கட்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பாதிப்பை ஏப்ரல் மாதத்திற்கு பிறகுதான் மக்கள் உணர்வார்கள். வண்ணாரப்பேட்டையில் நடக்கும் போராட்டம் என்பது மக்கள் எழுச்சியாக நடத்திய போராட்டம். இதுபோன்ற அறவழி போராட்டம் எதிர்கால சந்ததியினருக்கான நியாயத்தை பெற்றுத்தரும்,'' என்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், டெல்லியில் நடந்த வன்முறை கண்டனத்திற்கு உரியது என்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் சாமானியர்கள் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும் என்றார் வெற்றிமாறன்.

திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன்

பட மூலாதாரம், Syed ali

படக்குறிப்பு, திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன்

''குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றிய அச்சம் மக்களிடம் பரவலாக உள்ளது. மேலும், நாஜி ஆட்சியில் மக்கள் எவ்வாறு துன்பப்பட்டார்களோ, அதேபோன்ற நிலை ஏற்படுமோ என அச்சத்துடன் வாழ்கிறார்கள். மக்களிடம் ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தயக்கத்துடன் தினசரி வாழக்கையை நடத்துகிறார்கள் என்பது சரியானது அல்ல. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒருவரை சந்தேகத்திற்குரிய நபர் என அடையாளமிட்டால், அரசாங்கம் நினைக்கும்போது, அந்த நபருக்கு எதிராக எப்போது வேண்டுமானாலும் அந்த அடையாளத்தைப் பயன்படுத்திக்கொள்ளமுடியும்.''

''ஆவணங்கள் கேட்கும்போது, கட்டாயம் கொடுக்கவேண்டும் என்ற விதி தற்போது இல்லை. இதன் அடிப்படையில், தற்போது கணக்கெடுப்பு நடக்கும்போது, ஆவணங்களை காட்ட விருப்பமில்லை என கூறுவது நம் எதிர்ப்பை காட்டும் வகையில் இருக்கும்,'' என்றார் வெற்றிமாறன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: