You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி வன்முறை குறித்து ஐ .நா. மனித உரிமைகள் ஆணையர் கவலை - இந்தியாவின் பதில் என்ன?
இந்தியாவில் நடந்துவரும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான போராட்டங்கள் மற்றும் டெல்லி வன்முறை குறித்து ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் ஆணையரான மிஷேல் பெஷலட் கவலை தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை பேரவையின் 43ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த கூட்டத்தில் உலகெங்கும் உள்ள நாடுகளில் உள்ள மனித உரிமைகள் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் அனைத்து நாடுகளிலும் மனித உரிமைகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது இந்தியா குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் 370-ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்த அரசின் முடிவுக்கு பிறகு ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் அண்மைய டெல்லி கலவரங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.
''கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச்சட்டம் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்களும் பெரும் எண்ணிக்கையில் இந்த சட்டத்துக்கு எதிராக தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்'' என்று மிஷேல் தெரிவித்ததாக ஏஎன் ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
''டெல்லியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியபோது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் முன்பு சிஏஏ சட்டத்துக்கு எதிராக அமைதியாக போராடியவர்களை கட்டுப்படுத்த அதிக அளவில் போலீஸ் படைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் வரும் செய்திகளால் நான் கவலை அடைகிறேன். கடந்த பிப்ரவரி 23 முதல் அங்கு நடந்த வன்முறையில் 34 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது இது மதக்கலவரமாக உருவெடுத்துள்ளது. வன்முறையை தடுக்க அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்'' என்று அவர் மேலும் கூறியதாக அந்த செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
ஐ.நா. ஆணையரின் பேச்சுக்கு பதிலளித்த இந்திய பிரதிநிதி, ''இந்தியா போன்ற உயிர்ப்புடன் உள்ள ஜனநாயகத்தை கொண்ட நாட்டில் மனித உரிமைகளும், சுதந்திரமும் ஒவ்வொரு நாளும் நல்ல முறையில் நன்கு காப்பாற்றப்பட்டு வரும் நிலையில், இது குறித்து எந்த முடிவுக்கும் வருவதற்கு முன்பு இங்குள்ள சூழலை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறோம்'' என்று தெரிவித்தார்.
''அதேவேளையில், உலகெங்கும் மனித உரிமைகளை பாதுகாக்க ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் ஆணையத்துக்கு தொடர்ந்து ஆக்கப்பூர்வமாக ஒத்துழைப்போம்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
''மேலும் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ள இந்தியாவில் வன்முறைக்கு எந்த இடமும் இல்லை. டெல்லியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியை நிலைநாட்டவும், மீண்டும் இயல்புநிலை திரும்பவும் அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம்'' என்று மேலும் இந்திய தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவானவர்கள் இடையே உண்டான மோதலால் ஞாயிறன்று தொடங்கிய வன்முறைகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
ஜிடிபி என்றழைக்கப்படும் குரு தேஜ் பகதூர் மருத்துவமனையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 34-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள தெரிவித்துள்ளதாக ஏஎன் ஐ செய்தி முகமை லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் (எல்என்ஜெபி) மருத்துவமனையில் மூன்று பேர் இறந்துள்ளனர் என்றும், ஜக் பர்வேஷ் சந்தர் மருத்துவமனையில் ஒருவர் இறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- டெல்லி வன்முறை: உளவுத் துறை ஊழியர் கொலையால் வழக்கு; கவுன்சிலரை இடைநீக்கம் செய்த ஆம் ஆத்மி கட்சி
- கொரோனா வைரஸ் பாதிப்பு: சீனர்கள் தங்கள் நாட்டுக்கு வர இரான் தடை
- வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த பாகிஸ்தானுக்கு 1 லட்சம் வாத்துகளை அனுப்பும் சீனா
- மலேசியா : "புதிய பிரதமரை அடையாளம் காண முடியாவிட்டால் மீண்டும் பொதுத்தேர்தல்"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: