டெல்லி வன்முறை: உளவுத் துறை ஊழியர் கொலையால் வழக்கு; கவுன்சிலரை இடைநீக்கம் செய்த ஆம் ஆத்மி கட்சி

டெல்லி மதக் கலவரத்தில் இந்திய உளவுத் துறையில் பணியாற்றும் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தாஹிர் ஹுசேன் என்பவர் மீது கொலை மற்றும் வன்முறையில் தீவைத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியில் இருந்து தாஹிர் ஹுசேன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

தாஹிர் ஹுசேன் கிழக்கு டெல்லி மாநகராட்சி உறுப்பினராக உள்ளார்.

எந்தக் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் வன்முறையில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் கூறியிருந்தார்.

உளவுத் துறையில் பணியாற்றிய அங்கித் சர்மா என்பவர் கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ஜாஃப்ராபாத் எனும் இடத்தில் உள்ள சாக்கடை ஒன்றில் செவ்வாய் இரவு பிணமாக மீட்கப்பட்டார்.

அவர் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியபோது கும்பல் ஒன்றால் அவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

தாஹிர் ஹுசேன் தலைமையிலான கும்பல் ஒன்று கற்கள், தடிகள் மற்றும் ஆயுதங்களுடன் சென்று தாக்கியதால்தான் அங்கித் சர்மா உயிரிழந்தார் என்று பாரதிய ஜனதா கட்சியின் கபில் மிஸ்ரா குற்றம் சாட்டியிருந்தார்.

அங்கித் சர்மாவின் தந்தை ரவீந்தர் சர்மாவும் உளவுத் துறையில் பணியாற்றுகிறார். அவரும் தாஹிர் ஹுசேன் ஆதரவாளர்களே தனது மகனை கொலை செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

ரவீந்தர் சர்மா அளித்த புகாரின் அடிப்படையிலேயே டெல்லி காவல்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

தாம் தாக்குதலில் ஈடுபடவில்லை என்றும் தாமே தாக்குதலுக்கு உள்ளானதாகவும் தாஹிர் ஹுசேன் கூறியிருந்தார்.

அவர் தடிகள் மற்றும் ஆயுதங்களுடன் கும்பல் ஒன்றுடன் செல்வதாக கூறப்படும் காணொளி ஒன்றும் சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சாந்த் பாக், ஜாஃப்ராபாத் உள்ளிட்ட பகுதிகளில் போராடுபவர்கள் அப்புறப்படுத்தப்படாவிட்டால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கடந்த ஞாயிறன்று பாரதிய ஜனதா கட்சியின் கபில் மிஸ்ரா பேசியது கலவரத்தின் தொடக்கமாக இருந்தது என்று குற்றச்சாட்டு நிலவுகிறது.

ஞாயிறு மாலை ஜாஃப்ராபாத் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவானவர்கள் இடையே உண்டான மோதல் வடகிழக்கு டெல்லியின் பிற பகுதிகளுக்கும் பரவியதால் மதக் கலவரம் உண்டானது.

இதுவரை இந்த மதக் கலவரத்தால் குறைந்தது 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: