மலேசியாவின் புதிய பிரதமர் யார்? மார்ச் 2ல் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு - மகாதீர் நிலை என்ன?

மலேசியாவின் புதிய பிரதமர் யார் என்பதை தீர்மானிக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு வரும் மார்ச் 2ம் தேதி கூட்டப்பட இருக்கிறது.

அன்றைய தினம் வாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள் என்றும், ஒருவேளை பெரும்பான்மை பலத்துடன் உள்ள புதிய பிரதமரை அடையாளம் காண முடியாத பட்சத்தில், மலேசிய மக்கள் மீண்டும் பொதுத்தேர்தலைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் இடைக்கால பிரதமர் மகாதீர் மொஹம்மத் அறிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக மலேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. மகாதீர் மொஹம்மத் தலைமையிலான நம்பிக்கை கூட்டணியின் (பக்காத்தான் ஹராப்பான்) ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்ற 2 ஆண்டுகளுக்குப் பின், பிரதமர் பொறுப்பை அன்வார் இப்ராகிமிடம் அவர் ஒப்படைக்க வேண்டும் எனக் கூட்டணியில் உள்ள கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் எதிர்பாராத திருப்பமாக அண்மையில் பிரதமர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்தார் மகாதீர்.

அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட மலேசிய மாமன்னர், இடைக்கால பிரதமராக நீடிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதையடுத்து இடைக்கால பிரதமராக பணிகளைக் கவனித்து வரும் மகாதீர், நேற்று நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு கூட்டப்படுவது தொடர்பான தகவலை வெளியிட்டார்.

யார் பிரதமர் என்பதை மாமன்னரால் தீர்மானிக்க முடியவில்லை

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய மகாதீர், அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் நேர்காணல் செய்த மாமன்னரால், பிரதமர் வேட்பாளர்களில் யாருக்கு மக்களவையில் பெரும்பான்மை பலம் உள்ளது என்பதை தீர்மானிக்க முடியவில்லை என்றார்.

இதையடுத்தே மக்களவையின் சிறப்பு அமர்வை கூட்டுவது என முடிவெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

"ஒருவேளை சிறப்பு அமர்வின் மூலம் பெரும்பான்மை ஆதரவு கொண்ட பிரதமரை அடையாளம் காண முடியவில்லை எனில் மீண்டும் பொதுத்தேர்தல் நடைபெறும். மக்களே பிரதமரை தேர்வு செய்யட்டும்," என்றார் மகாதீர்.

இதையடுத்து மலேசிய அரசியல் கட்சிகள் மத்தியில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் அணி மாறும் விளையாட்டு மீண்டும் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாகவும், கூட்டணிக் கட்சிகளுடனும் மாறி மாறி ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றன.

பிரதமர் பதவிக்கான போட்டியில் மூன்று பேர்

தற்போதைய சூழலில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பாக அன்வார் இப்ராகிம் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார். அவர்தான் வேட்பாளர் என்பதில் அக்கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் தெளிவாக உள்ளன.

பாரிசான் நேசனல் எனப்படும் தேசிய முன்னணி கூட்டணி சார்பில் யாரும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படவில்லை. அதேசமயம் அந்தக் கூட்டணியின் ஆதரவுடன் பெர்சாத்து கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான மொகிதின் யாசின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட அதிக வாய்ப்புள்ளது.

இடைக்கால பிரதமர் மகாதீரின் முடிவு என்ன? என்பது அவருக்கே வெளிச்சம். ஏனெனில் பிரதமர் பதவி மற்றும் பெர்சாத்து கட்சித் தலைவர் பதவி ஆகியவற்றில் இருந்து விலகுவதாக இரு தினங்களுக்கு முன்பு அவர் அறிவித்திருந்தார்.

பின்னர் பல்வேறு கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசிய பின்னர், அனைவரும் தமக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளிக்க முன்வந்திருப்பதாகவும், அந்த ஆதரவை முன்வைத்து ஒற்றுமை அரசாங்கம் அமைக்க விரும்புவதாகவும் தெரிவித்தார் மகாதீர்.

மேலும் அரசியல் கட்சிகள் பங்குபெறாத, வெளிநபர்களை மட்டுமே கொண்டு, தகுதியின் அடிப்படையில் ஓர் அமைச்சரவையை அமைக்க வேண்டும் எனும் விருப்பத்தையும் அவர் வெளியிட்டார்.

எனவே பிரதமர் பதவிக்கான போட்டியில் அவர் இன்னமும் நீடிப்பதாகவே அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கேற்ப பெர்சாத்து கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த 48 மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் அப்பொறுப்பை ஏற்பதாக அவர் அறிவித்திருப்பது பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கட்சிகளின் பலம் என்ன?

மலேசிய நாடாளுமன்றத்தில் 222 இடங்கள் உள்ளன. ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 112 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

தற்போது அன்வார் இப்ராகிமை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வசம் 102 எம்பிக்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

பாரிசான் நேசனல் எனப்படும் தேசிய முன்னணிக்கு சுமார் 80 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக அத்தரப்பு சொல்கிறது.

அண்மைக்காலம் வரை தனித்துச் செயல்பட்டு வந்த முக்கிய எதிர்க்கட்சியான பாஸ், தேசிய முன்னணியுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து வருகிறது. பாஸ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 18 உறுப்பினர்கள் உள்ளனர்.

இவை தவிர வாரிசான், அமானா உட்பட சில மாநிலக் கட்சிகளும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்டுள்ளன.

மலேசிய நாடாளுமன்ற நிலவரம்:

மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை: 222

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி: 92

வாரிசான்: 9

அஸ்மின் அலி அணி: 11

பெர்சாத்து: 26

பாரிசான் நேசனல் கூட்டணி: 42

பாஸ் கட்சி: 18

ஜிபிஎஸ் (Sarawak): 18

ஜிபிஎஸ் (Sabah): 3

மற்றவை: 2

சுயேட்சை: 1

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: