"நரேந்திர மோதி பல்துறை மேதை": உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா புகழாரம்

"இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பல்துறை வித்தகர். ஆகச் சிறந்த அறிவாளி. உலகளவில் சிந்திக்கிறார், அதை நம் மண்ணுக்கு ஏற்றப்படி செயல்படுத்துகிறார்" என உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா புகழ்ந்துள்ளார்.

டெல்லியில் சர்வதேச நீதித்துறை மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நன்றியுரை ஆற்றிய அருண் மிஸ்ரா, பிரதமரை மோதியையும், அவரது செயல்பாடுகளையும் புகழ்ந்தார்.

அருண் மிஸ்ரா, "சர்வதேச அளவில் புகழ்பெற்ற தொலைநோக்கு பார்வை உடைய பிரதமர் நரேந்திர மோதியால் இந்தியா சர்வதேச சமூகத்தின் பொறுப்பான மற்றும் மிகவும் நட்பான உறுப்பினராக உள்ளது," என்று குறிப்பிட்டார்.

பல்துறை மேதை மோதி

"தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்கள் பொதுவானவை. எப்போதும் மாறிவரும் உலகில் நீதித்துறைக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு," என்று அவர் குறிப்பிட்டார்.

"கண்ணியமான மனித இருப்பு எங்கள் பிரதான அக்கறை. உலகளவில் சிந்தித்து, உள்நாட்டிற்கு ஏற்றவாறு செயல்படும் பல்துறை மேதை பிரதமர் மோதிக்கு நன்றி."

"உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியா எவ்வாறு வெற்றிகரமாக செயல்படுகிறது என்று மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இந்தியா அரசமைப்பு கடமைகளுக்கு உறுதியளித்து, பயங்கரவாதத்திலிருந்து விடுபட்டு, அமைதியான மற்றும் பாதுகாப்பான உலகிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நீதித்துறையை வலுப்படுத்துவது என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பாக இருக்கிறது," என்றார்

உலகமயமாக்கல்

உலகமயமாக்கலை குறிப்பிட்டுப் பேசிய மிஸ்ரா, "உலகமயமாக்கலின் பலன்கள் தங்களுக்கு கிடைகாததன் அதிருப்தி பெரும் எண்ணிக்கையிலான மக்களிடையே அதிகரித்து வருகிறது," என்றார்.

ஜனநாயகத்தின் முதுகெலும்பு நீதித்துறை என்றும், சட்டமன்றம் இதயம் என்றும், நிர்வாகம் மூளை என்றும் குறிப்பிட்ட அவர், இவை மூன்றும் சுதந்திரமாக செயல்பட்டால்தான் ஜனநாயகம் வெற்றிகரமாக இருக்கும் என்று தனது உரையின்போது குறிப்பிட்டார்.

உலகின் 20 நாடுகளை சேர்ந்த நீதிபதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: