TNPSC முறைகேடு: ''குடிகாரர்கள் மதுக்கடை தேடுவது போல அரசுப் பணிக்கு இடைத் தரகர்களை தேடுகிறார்கள்''

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

தனியார் நிறுவனங்களில் வேலை கிடைக்காத பல இளைஞர்கள், காசுகொடுத்தாவது அரசு வேலை வாங்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இடைத் தரகர்களிடம் பேரம்பேசி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுதியுள்ளார்கள் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், இதுவரை 32 பேர் கைதாகியுள்ளனர். குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து நடந்த விசாரணையில், குரூப்2 ஏ தேர்வு உள்ளிட்ட பிற தேர்வுகளிலும் முறைகேடு நடந்துள்ளது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ரூ.15 லட்சத்துக்கு அரசு அலுவலக உதவியாளர் வேலை?

தொடர்ந்து புகார்கள் குவியும் நிலையில், இடைத் தரகர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவது எப்படி என்றும் தேர்வர்கள் செய்த பணப் பரிமாற்றம் பற்றியும் விசாரணை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"இதுவரை கைதான தேர்வர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களிடம் விசாரித்ததில், சார்பதிவாளர் அலுவலகம், தலைமைச் செயலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆகிய அரசு அலுவலகங்களில் உதவியாளர் பணிக்குச் சேர்ந்த நபர்கள் பலர், ஒவ்வொருவரும் சுமார் ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை முக்கியப் புள்ளியாக கருதப்படும் இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் கொடுத்துள்ளார்கள் என்பது தெரியவந்தது.

தேர்வர்கள் சிலர் முன் பணமாக ரூ.8 லட்சம் வரை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. ஜெயக்குமாரிடம் பணம் கொடுத்து பணியில் உள்ளவர்களை கைது செய்து, பணப்பரிமாற்றம் குறித்த விசாரணையை நடத்திவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இடைத்தரகர்களுக்கும், தேர்வர்களுக்கு இடையில் இருந்தவர்கள் குறித்தும் தகவல் கிடைத்துள்ளது. இந்த நபர்களை விசாரிக்கிறோம். பணத்தை கைமாற்றியவர்கள் யார், எந்தவிதத்தில் பணம் இடைத்தரகர் கையில் கிடைத்தது என விரிவாக விசாரித்துவருகிறோம். புகாருக்கு உள்ளான தேர்வர்கள் பலரும் சென்னை, தூத்துக்குடி, விழுப்புரம், காரைக்குடி, விருதுநகர், சிவகங்கை ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள்" என்றார் அவர்.

இடைத் தரகர்களைத் தேடிச் செல்லும் தேர்வர்கள்

பிபிசிதமிழிடம் பேசிய விசாரணை அதிகாரி, ''தனியார் துறையில் வேலை கிடைக்காத சூழலில், நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த தேர்வர்களில் சிலர், தங்களது திறமை மீது நம்பிக்கையற்ற நிலையில், இடைத்தரகர்கள் யாராவது இருந்தால், பணம் கொடுத்து அரசு வேலைவாங்கிவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்திருக்கிறார்கள். யார் மூலமாவாவது அரசு வேலையை பெற வேண்டும் என முயற்சி செய்பவர்களாக தேர்வர்கள் இருப்பதால், இடைத்தரகர்கள் முறைகேட்டில் ஈடுபட தயாராக இருக்கிறார்கள்,'' என்கிறார்.

பணப்பரிமாற்றம் குறித்து பேசிய அதிகாரி, ''ஒரு சிலர் முழுத் தொகையை உடனடியாக பேசி முடிவு செய்து தேர்வுக்கு முன்பே கொடுத்துவிடுகிறார்கள். ஒரு சிலர், தேர்வுக்கு முன்னர் ஒரு தொகையை முன்பணமாகத் தந்துவிட்டு, தேர்வில் வெற்றி பெற்றதும் மீதமுள்ள தொகையை கொடுப்பதாக முடிவு செய்துகொள்கிறார்கள். இவர்களில் பலரும் 25 வயது முதல் 32 வயதிற்குள் இருப்பவர்கள். தமிழகம் முழுவதும் இடைத் தரகர்களின் வலைப்பின்னல் இல்லை என்றாலும், சில மாவட்டங்களில் இடைத்தரகர்கள் தெரிந்த நபர்கள் மூலம் தேர்வர்களை சந்திக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்,''என்கிறார் அந்த அதிகாரி.

அவர் மேலும், ''மது அருந்தவேண்டும் என ஒருவன் முடிவுசெய்துவிட்டு, கடை எங்கிருந்தாலும் தேடிச்சென்று மது அருந்துவது போலதான், இந்த தேர்வர்களும் இருக்கிறார்கள். முறைகேடு செய்யும் இடைத்தரகர்களை விட, தேர்வர்கள் மோசமானவர்களாக உள்ளனர்,''என்கிறார் அவர்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு வெளிவந்தது எப்படி?

2019 செப்டம்பர் மாதத்தில் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 5,575 மையங்களில் 16 லட்சம் நபர்கள் தேர்வு எழுதினர். குரூப் 4 தேர்வு முடிவுகள் 2019 நவம்பரில் வெளியானது. இந்த தேர்வின் தரவரிசைப் பட்டியல் வெளியானபோது, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய பலர் தரவரிசை பட்டியலில் அதிக இடம் பிடித்திருக்கிறார்கள் என்பது சர்ச்சையானது. ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி தரவரிசைப்பட்டியலில் இடம்பெற்றனர் என சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் விவாதம் எழுந்தது.

இந்த தரவாரிசைப் பட்டியலால் ஏற்பட்ட குழப்பம்தான், விசரணை தொடங்க காரணமானது. முதலில் டிஎன்பிஎஸ்சி விசாரணை செய்து முறைகேடு நடந்துள்ளதாக உறுதி செய்ததும், காவல் துறைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. மேலும் விசாரணையில், தேர்வுத்தாள்கள் சோதிக்கப்பட்டபோது, 52 நபர்கள், தேர்வு எழுதும் போது, ஒரு சில மணிநேரத்தில், மாயமாகும் மையால் பதில்களை எழுதினர் என்றும், இடைத்தரகர்கள், டிஎன்பிஎஸ்சியில் பணிபுரியும் எழுத்தர் ஓம் காந்தன் உதவியால் விடைத்தாள்களை திரும்பப் பெற்று, சரியான விடைகளை எழுதினர் என்றும் சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்தது. இடைத்தரகர்கள் உதவியோடு முறைகேடு செய்து அரசுப்பணியை பெற முயன்ற 99 நபர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் அரசுப்பணி தேர்வு எழுத டிஎன்பிஎஸ்சி தடை விதித்தது.

குரூப் 4ல் இருப்பதாகத் தெரியவந்த இந்த முறைகேடு, தற்போது குரூப் 2ஏ தேர்விலும் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில், விசரணையில் பல தேர்வர்கள் பிடிபடுவார்கள் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடு செய்ததாக தற்போது இரண்டு நபர்கள் கைதாகியுள்ளனர்.

''தேர்வை டிஜிட்டல் முறையில் நடத்தவேண்டும்''

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்துவதில் நவீனத்துவம் வேண்டும் என்றும் டிஜிட்டல் முறையில் கேள்வித்தாள்கள் வழங்கப்படவேண்டும் என்றும் கூறுகிறார் சென்னை நகர முன்னாள் மேயரும், மனிதநேயம் பயிற்சி மைய நிறுவனருமான சைதை துரைசாமி.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தனக்கு அதிர்ச்சியளிப்பதாகக் கூறும் சைதை துரைசாமி, ''ஏழு மையங்களில், சுமார் 18,000 மாணவர்களை அரசு வேலைக்கான போட்டித்தேர்வுகளுக்கு எங்கள் மையத்தில் தயார்படுத்துகிறோம். ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) நடத்தும் தேர்வுகளுக்கு தயாராகும்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை மாணவர்கள் எழுதுவதுண்டு. யூபிஎஸ்சி தேர்வை விட, டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எளிதாக இருக்கும் என்பதால், திறமையான மாணவர்கள் இந்த தேர்வுகளில் சுலபமாக வெற்றிபெறுவார்கள். ஆனால் சமீபகாலமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தேர்வாகவில்லை என மாணவர்கள் கூறுவதை ஏற்கமுடியவில்லை.திரைப்படங்களில் மட்டுமே இதுபோன்ற முறைகேடுகள் நடப்பதைப் பார்த்துள்ளோம். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையை சீர்படுத்தவேண்டும்,''என்கிறார்.

''கேள்வித் தாள்கள் வெளியாவதை தடுக்க, கேள்வித்தாள் முன்னதாக அச்சடிக்கப்பட்டதாக இல்லாமல், தேர்வு மையங்களில், தேர்வு நாளன்று பிரிண்ட் செய்யப்படும் அளவுக்கு டிஜிட்டல் முறையில் மாற்றம் கொண்டுவரவேண்டும். எழுத்துத் தேர்வு நடத்துவதிலும், நேர்முகத்தேர்வு நடத்துவதிலும், வெளிப்படைத்தன்மை வேண்டும். நேர்முகத்தேர்வுகள் தெளிவாக பதிவு செய்யப்படவேண்டும். தேர்வுக்கு வருபவர்களின் புகைப்படம் அன்று எடுத்ததாக இருக்கவேண்டும்,'' என்றார்.

குரூப் 4 முறைகேட்டை அடுத்து, இனிவரும் தேர்வுகளில், தேர்வர்களின் ஆதார் எண்ணை கொண்டுதான் தேர்வுக்கு பதிவு செய்யவேண்டும் என டிஎன்பிஸ்சி தெரிவித்துள்ளது. தேர்வை எழுதுவதற்காக மூன்று மாவட்டங்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும். தேர்வு எழுதும் மையத்தை தேர்வாணையம்தான் முடிவு செய்யும் என மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதோடு, தேர்வு எழுதிய சிலமணிநேரத்தில், தேர்வர், தனது பதில் தாளை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ளும் வசதி விரைவில் கொண்டுவரப்படும் என டிஎன்பிஎஸ்சி செயலர் நந்தகுமார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: