தாய்லாந்து துப்பாக்கிச்சூடு: 26 பேரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் மற்றும் பிற செய்திகள்

தாய்லாந்தில் ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியை கொண்டு நடத்திய வன்முறை தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதுடன், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனிடையே அந்த தாக்குதலில் ஈடுபட்ட ஜக்ரபந்த் தோம்மா பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தாய்லாந்தின் நகோன் ராட்சாசிமா எனும் நகரத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் தாய்லாந்து முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

இளநிலை அதிகாரியான ஜக்ரபந்த் தோம்மா, ஒரு ராணுவ முகாமில் இருந்து ஆயுதங்களைத் திருடுவதற்கு முன்பு தனது மூத்த அதிகாரியைக் கொன்றார்.

பிறகு, அங்குள்ள வணிக வளாகத்துக்கு சென்ற சந்தேக நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூட்டை நடத்தினார். அதையடுத்து, சிறிது நேரத்திற்கு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுகளை இட்ட அந்த நபர் தற்போது மறைவிடத்தில் இருப்பதாக தெரிகிறது.

தாக்குதலுக்கு உள்ளான வணிக வளாகம் தற்போது பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அங்கு சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான பொது மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டதை அடுத்து, தாக்கியவரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை தெளிவில்லை.

இந்நிலையில், துப்பாக்கிதாரியின் ஃபேஸ்புக் பதிவுகளை நீக்கியதோடு அவரது கணக்கை முடக்கிவிட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

"இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை, நீதி வேண்டும்"

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை அளித்து அவர்கள் அமைதியாக வாழ வழிவகை செய்திட வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கை அரசை வலியுறுத்தி உள்ளார்.

அவர்களுக்கு அங்கு உரிய நீதி மற்றும் மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோதி குறிப்பிட்டார். "இலங்கை தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்புகளை இலங்கை அரசு உணரும் என நான் நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.

டெல்லி சட்டமன்ற தேர்தல்: ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

டெல்லி சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 54.15 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த சட்டமன்ற தேர்தலில் அதாவது 2015 தேர்தலில் 67.12 சதவீதமாக இருந்தது.

டெல்லி சட்டமன்ற தேர்தலில், கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த அளவில் வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த தேர்தலில் எந்த கட்சிகள் எவ்வளவு தொகுதிகளை கைப்பற்றுமென கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.

"சரஸ்வதி சிந்து நாகரிகம் என குறிப்பிட்டது ஏன்?"

2020 பட்ஜெட் உரை வாசிக்கும்போது சிந்துசமவெளி நாகரிகத்தை, சரஸ்வதி சிந்து நாகரிகம் எனக் குறிப்பிட்டது ஏன் என்பதற்கான விளக்கத்தை நாடாளுமன்றத்தில் நடக்கவிருக்கும் பதிலுரையில் கூறவுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பட்ஜெட் குறித்த கேள்விகளுக்குப் பதில் அளித்த நிர்மலா சீதாராமன், சிந்து சமவெளி நாகரிகத்தை 'சரஸ்வதி சிந்து நாகரிகம்' என குறிப்பிட்டதற்குக் காரணம் உள்ளது என்றும் விளக்கத்தை பட்ஜெட் உரை வாசித்த நாடாளுமன்றத்தில் கூறவுள்ளதாகத் தெரிவித்தார்.

"எனக்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம்"

சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு, இந்தியர்கள் பலர் நாடு திரும்பினர், அவர்களை இந்தியாவில் தனிமைப்படுத்தி பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த ஜோதி என்ற பெண் கொரோனா வைரஸ் பாதிப்பால், சீனாவிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மார்ச் மாதம் ஜோதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் சீனா அரசு தன்னை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து காணொளி ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: