You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஷாஹீன்பாகில் சுட்டவர் ஆம் ஆத்மி கட்சிக்காரர் என்கிறது போலீஸ்
டெல்லியில் ஷாஹீன்பாக் பகுதியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடக்கும் இடத்துக்கு அருகே சில நாள்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்ட நபர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ளது டெல்லி போலீஸ்.
டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் போலீசின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜனவரி 30-ம் தேதி ஜாமியா மில்லியா கல்லூரி அருகில் இருந்து குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் பேரணி நடத்தியபோது திடீரென அங்கு தோன்றிய ஒரு நபர் மாணவர்களைப் பார்த்து துப்பாக்கியால் சுட்டார்.
இந்த அதிர்ச்சி அடங்கும் முன்னரே, பிப்ரவரி 1ம் தேதி அதே டெல்லியில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக 49வது நாளாக சாலையை ஆக்கிரமித்து பெண்கள் நடத்திவரும் தொடர் தர்ணா போராட்டத் தலத்துக்கு அருகே மீண்டும் ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிக்க முயன்றார். அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தது போலீஸ். அவரது பெயர் கபில் குஜ்ஜர் என்பது பிறகு தெரியவந்தது.
இன்று செவ்வாய்க்கிழமை இது குறித்துப் பேசிய டெல்லி போலீஸ் குற்றப்பிரிவு துணை ஆணையர் ராஜேஷ் தேவ், "எங்கள் தொடக்க நிலை புலன் விசாரணையில் கபில் குஜ்ஜரின் கைபேசியில் கண்டெடுத்த சில புகைப்படங்கள், மற்றும் அவரே ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், அவரும் அவரது தந்தையும் ஓராண்டுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தது தெரியவந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார் என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.
கபில் குஜ்ஜர் கைப்பேசியில் இருந்து எடுத்ததாகவும், அதில் கபில் குஜ்ஜர் ஆம் ஆத்மி தலைவர்கள் ஆடிஷி மற்றும் சஞ்சய் சிங் ஆகியோருடன் இருப்பதாகவும் குறிப்பிடப்படும் படத்தை வெளியிட்டுள்ளது ஏ.என்.ஐ. செய்தி முகமை.
இது குறித்துப் பேசிய ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங், "அமித்ஷா இந்த நாட்டின் உள்துறை அமைச்சர். சட்டமன்றத் தேர்தலுக்கு 3-4 நாள்களுக்கு முன்பாக புகைப்படங்களும், சதித் திட்டங்களும் கண்டுபிடிக்கப்படுகின்றன. பாஜக தம்மால் எவ்வளவு இழிவான அரசியல் செய்ய முடியுமோ அவ்வளவு செய்யும். ஒருவரிடம் படங்கள் இருப்பது எதைக் குறிக்கிறது?" என்று கேட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: