You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: வயலில் பதுங்கியிருந்த போலீஸ்காரர் சித்தாண்டி கைது
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் மூளையாக செயல்பட்டவர் என்று சந்தேகிக்கப்படும் போலீஸ்காரர் சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்தாண்டு செப்டம்பர் 1-ம் தேதி நடந்த இந்த தேர்வில் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு தரவரிசைப் பட்டியலில் முதல் நூறு இடம் பிடித்தோரில் 39 பேர், ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியோர் என்பதால் தேர்வில் முறைகேடு நடந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்து, சர்ச்சையானது. இதையடுத்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய விசாரணையில் தேர்வில் முறைகேடு நடந்தது உறுதியானது.
இதையடுத்து, இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களுக்கு அரசு பணிக்கான தேர்வெழுத வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. முறைகேட்டுக்குத் துணை புரிந்த டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். முறைகேட்டில் மூளையாக செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் சென்னை புதுப்பேட்டையில் வசிக்கும் போலீஸ்காரர் சித்தாண்டி மற்றும் இடைத்தரகரான சென்னையைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை ( சிபிசிஐடி) போலீசார் தேடிவந்தனர்.
சென்னையில் உள்ள ஆயுதப் படைப் பிரிவில் காவலராகப் பணியாற்றிவந்த சித்தாண்டி, டிஎன்பிஎஸ்சி விவகாரம் வெடித்ததும் மருத்துவ விடுப்பு எடுத்துக்கொண்டு தலைமறைவானார்.
அவரது வங்கிக் கணக்கும் அவரது மனைவியின் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டன.
சித்தாண்டியின் செல்போன் அழைப்புகள் கண்காணிக்கப்பட்டன. அவரது இருப்பிடம் குறித்து ஜிபிஆர்எஸ் மூலம் கண்காணிக்கப்பட்டது.
ராமநாதபுரம்- சிவகங்கை சாலையில் உள்ள வயல் ஒன்றில் சித்தாண்டி செல்போன் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் அங்கு ஒரு குடிசையில் தங்கியிருந்த சித்தாண்டியை கைது செய்தனர். இது அவரது மாமனார் ஊர் ஆகும். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அவர் தற்போது சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்.
இதுவரை 23 பேர் கைது
டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக அரசு ஊழியர்கள், இடைத்தரகர்கள் உள்பட 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 14 பேர் குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாகவும் மீதமுள்ளவர்கள் குரூப் 2 தேர்வு முறைகேடு தொடர்பாகவும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த முறைகேடுகளின் முக்கியப் புள்ளியாக அடையாளம் காணப்படும் சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரைப் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று சிபிசிஐடி தெரிவித்துள்ளது. அவரது 12 வங்கிக் கணக்குகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.
ஆயுதப் படையில் பணியாற்றிய சித்தாண்டியின் சகோதரரான வேல்முருகன் என்பவர் சில நாட்களுக்கு முன்பு கைதுசெய்யப்பட்டார். அவர், டிஎன்பிஎஸ்சி தேர்வில் மாநில அளவில் 3வது இடத்தைப் பிடித்து பணியில் சேர்ந்தவர் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டது.
முறைகேடு புகாருக்கு உள்ளாகியிருக்கும் இந்த குரூப் நான்கு தேர்வில் பெரிய கண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி திருவராஜ் என்பவர் முதலிடம் பிடித்தார். அவரை விசாரித்தபோதுதான் இந்த விவகாரத்தில் சித்தாண்டியின் பங்கு குறித்து தெரியவந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: