ரஜினிகாந்த் தர்பார் திரைப்படம்: நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு அரசு உதவும் - அமைச்சர் கடம்பூா் ராஜு கூறியது என்ன?

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: தர்பார் திரைப்படம்: நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு அரசு உதவும்

திரையரங்க டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாக அரசே விற்பனை செய்யும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சா் கடம்பூா் ராஜூ தெரிவித்தாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் ராஜூ தலைமையில் இணையதளத்தில் திரையரங்க டிக்கெட் விற்பனையை ஒழுங்குப்படுத்துவது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களுக்கு அமைச்சா் கடம்பூா் ராஜூ அளித்த பேட்டி:

ஆன்லைன் மூலம் திரையரங்க டிக்கெட் கட்டணம் செலுத்துவது தொடா்பாக நடந்த கூட்டத்தில், திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து முடிவு எட்டப்பட்டுள்ளது. மக்களுக்கு எவ்வளவு குறைவான விலையில் சேவையை அளிக்க முடியும் என்பது குறித்து ஆலோசித்துள்ளோம். வேறொரு தனியாா் இணையதள முன்பதிவு அமைப்பில் இணைந்துள்ளதாக திரைப்பட விநியோகஸ்தா்கள் சிலா் தெரிவித்தனா். அங்கு ஒப்பந்தம் போட்டவா்கள் அங்கு இருக்கலாம். ஒப்பந்தம் போடாதவா்கள் அரசு கொண்டு வரும் திட்டத்தில் இணையலாம்.

ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் ஒப்பந்தம் செய்தவா்களும் அரசு கொண்டுவரும் திட்டத்திலும் இணையலாம். இது மக்களின் விருப்பத்தை பொருத்தது. திரையரங்க உரிமையாளா் மற்றும் திரைப்பட விநியோகஸ்தா்களை பாதுகாக்கும், அதே நேரத்தில் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடிய நிலையில் அரசு உள்ளது.

ஒரு படத்துக்கு எவ்வளவு டிக்கெட் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது என்பதை வெளிப்படையாக தெரிந்து கொள்ள முடியும். ஏற்கெனவே இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த கூட்டம் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான கூட்டமாக இருக்கும்.

தா்பாா் திரைப்படம்: தா்பாா் திரைப்படத்தால் நஷ்டமடைந்ததாகக் கூறி விநியோகஸ்தா்கள் அரசை அணுகினால் அவா்களுக்கு அரசு உதவும். கடந்த 30 ஆண்டுகாலமாக டிக்கெட் விற்பனை வரைமுறை செய்யப்படாத நிலையில், தற்போது அரசு இதனைச் செய்துள்ளது. கட்டண நிா்ணயத்தை நாங்கள் உறுதிப்படுத்தித் தந்துள்ளோம். இதன் காரணமாக திரைப்பட துறை மறுமலா்ச்சி பெற்றுள்ளது. இதன் பிறகு எந்த திரையரங்கும் மூடப்படாத நிலை ஏற்படும். ஆன்லைன் முறை முழுமையாகக் கொண்டுவரப்படும்போது வாகன நிறுத்தக் கட்டணம் உள்ளிட்டவற்றை க் குறைக்க அரசு பரிசீலித்து வருகிறது என்றாா் அமைச்சா் கடம்பூா் ராஜூ.

ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை முதன்மைச் செயலாளா் எஸ்.கே.பிரபாகா், வணிகவரிகள் துறை முதன்மைச் செயலாளா் கா.பாலச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினத்தந்தி: குரூப் 2 - மனைவிக்கு அரசு பதவி பெற லஞ்சம் கொடுத்த போலீஸ்காரர்

மனைவிக்கு அரசு பதவி பெற ரூ.8 லட்சம் கொடுத்து குரூப்-2ஏ தேர்வில் தேர்ச்சி அடைய செய்து அரசு பணியில் சேர்த்த சென்னை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். மேலும் பணம் கொடுத்து பதவி பெற்ற அரசு அதிகாரிகளாக உள்ள காஞ்சீபுரத்தை சேர்ந்த 3 பேர் நேற்று கைதானார்கள் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2ஏ, குரூப்-4 ஆகிய தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக தினமும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 வழக்குகளை தனித்தனியாக பதிவு செய்துள்ளனர்.

இந்த 2 முறைகேடு வழக்குகளிலும் தொடர்புடைய சென்னை முகப்பேரைச் சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமாரை போலீசார் தேடிவருகிறார்கள். அவரைப்பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

ஜெயக்குமார் கைது செய்யப்பட்டால், பல முக்கிய புள்ளிகள் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயக்குமாரின் கைது நடவடிக்கைதான் இந்த வழக்கில், அடுத்த அதிரடி திருப்பமாக கருதப்படுகிறது. மேலும் இன்னொரு இடைத்தரகராக செயல்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் சித்தாண்டியையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இதுவரை குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் 16 பேரும், குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் 5 பேரும் மொத்தம் 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று குரூப்-2ஏ தேர்வில் பணம் கொடுத்து மனைவிக்கு அரசு பதவி வாங்கி கொடுத்த சென்னை போலீஸ்காரர் ஒருவரும், பணம் கொடுத்து பதவியை பெற்ற 3 அரசு அதிகாரிகளும் நேற்று கைதாகி உள்ளனர். அவர்களது பெயர் விவரம் வருமாறு,

1. வடிவு (வயது 44). காஞ்சீபுரம் மாவட்டம், தாமல் கிராமத்தைச் சேர்ந்த இவர், காஞ்சீபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்தார். இவரது கணவர் பெயர் செல்வரசு. இவர் இடைத்தரகர் ஜெயக்குமாரிடம், ரூ.12.5 லட்சம் பணம் கொடுத்து, 271.5 மதிப்பெண்கள் பெற்று, 29-வது இடத்தில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்துள்ளார்.

2. முத்துக்குமார் (35). இவர் நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகா, மேற்கு விஜயாபதி என்ற ஊரைச்சேர்ந்தவர். இவர் சென்னையில் ஆயுதப்படை போலீஸ்காரராக வேலை செய்கிறார். இவர் தனது மனைவி மகாலட்சுமியை வேலையில் சேர்த்துவிட, இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் ரூ.8 லட்சம் கொடுத்துள்ளார். மகாலட்சுமி தற்போது சென்னை எழிலகத்தில் உதவியாளராக வேலை செய்கிறார். இவர் முறைகேடாக தேர்வு எழுதி 276 மதிப்பெண்கள் பெற்று, 24-வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

3. ஞானசம்பந்தம் (30). பெரிய காஞ்சீபுரம், சர்வதீர்த்த தென்கரையைச் சேர்ந்தவர். இவர் சென்னை பட்டினப்பாக்கம், பதிவுத்துறை ஐ.ஜி. அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்தார். இவர் ரூ.15 லட்சம் கொடுத்து, தேர்வில் 256.5 மதிப்பெண்கள் பெற்று, 56-வது இடத்தில் தேர்ச்சி பெற்றார்.

4. ஆனந்தன் (32). காஞ்சீ புரம் மாவட்டம், ஓரிக்கை அஞ்சல், வெள்ளிங்கபட்டரை என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர் சென்னை செங்குன்றத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்கிறார். இவர் ரூ.13 லட்சம் கொடுத்து வேலையில் சேர்ந்துள்ளார். முறைகேடாக தேர்வு எழுதி, 277.5 மதிப்பெண்கள் பெற்று, 19-வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்து தமிழ் திசை

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை"

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 8 சீனர்கள் உட்பட 10 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள மாணவியுடன் இணைந்து பயணம் மேற்கொண்டு வந்த மாணவியும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளார். மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில் கொரோனா வைரஸ் குறித்த அறிகுறிகள் எதுவும் இல்லாதபோதிலும் இவர்களுக்குப் பரிசோதனை மேற்கொண்டோம்.

புனேவுக்குப் பிறகு சென்னை, கிண்டியில் உள்ள கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை வசதிகளைக் கொண்ட கிங் நோய்த் தடுப்பு ஆய்வகத்தில் 12 பேருடைய ரத்த மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டது. இதன் முடிவில் 12 ரத்த மாதிரிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது தெரியவந்துள்ளது," என்று அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: