You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீர் விவகாரத்தில் மலேசியாவை இந்தியா மிரட்டியது - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மலேசியப் பிரதமர் மகாதீர் வெளிப்படையாக கருத்து தெரிவித்தார் என்றும், அதற்காக தாம் நன்றி தெரிவிப்பதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
பிரதமர் மகாதீர் முகமது காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசியதால், மலேசியாவுக்கு இந்தியா மிரட்டல் விடுத்தது என்றும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
மலேசியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார் இம்ரான் கான். இன்று காலை அவர் மலேசிய பிரதமரை சந்தித்தார்.
இதையடுத்து இருவரும் கூட்டாகப் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பாகிஸ்தானுக்கும் மலேசியாவுக்கும் இடையே நீண்டகாலமாக நல்லுறவு நீடித்து வருவதாக மகாதீர் தெரிவித்தார்.
இதையடுத்துப் பேசிய இம்ரான் கான் தம்மை மலேசியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தமைக்காக மகாதீருக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு தமது பயணத்தின் மூலம் மேலும் நெருக்கமடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
'இனி மலேசிய பாமாயிலை பாகிஸ்தான் அதிகளவு வாங்கும்'
"மலேசியப் பாமாயில் இறக்குமதியைக் குறைப்போம் என இந்திய அரசு மிரட்டியதைக் கவனித்தோம். எனவே மலேசியாவுக்கு எதிராக இந்தியா இறக்குமதியைக் குறைத்தால் அதை ஈடுகட்ட பாகிஸ்தான் முடிந்தளவு முயற்சிக்கும். இனி வழக்கத்தைவிட அதிகளவு பாமாயிலை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் தயாராக உள்ளது," என்றார் இம்ரான்கான்.
அண்மையில் மலேசிய முதன்மைத் தொழில்துறை அமைச்சர் திரேசா கோக் பாகிஸ்தானுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார் . அப்போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது, மலேசிய பாமாயிலை இனி கூடுதலாக இறக்குமதி செய்ய பாகிஸ்தான் ஒப்புக் கொண்டது.
இதையடுத்து கடந்த ஜனவரியில் பாகிஸ்தான் கூடுதல் பாமாயிலை இறக்குமதி செய்தது.
இந்நிலையில், மலேசிய பாமாயிலின் இறக்குமதி அளவை இந்தியா குறைத்திருப்பதால், மலேசியாவுக்கு தாங்கள் உதவப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
காஷ்மீரில் தற்போது நடப்பது குறித்தே மகாதீர் பேசியுள்ளார்: இம்ரான்கான்
"காஷ்மீர் விவகாரத்தில் மலேசியா வெளிப்படையாகப் பேசியதை இப்போது குறிப்பிட்டே ஆக வேண்டும். இதற்காக பிரதமர் மகாதீருக்கு பாகிஸ்தான் மக்கள் சார்பாக நன்றி."
"காஷ்மீர் மக்களுக்கு தற்போது என்ன நடக்கிறது என்பது குறித்து பிரதமர் மகாதீர் பேசினார். கடந்த ஆறு மாதங்களாக காஷ்மீர் மக்கள் திறந்தவெளி சிறைச்சாலையில் உள்ளனர்.
"இந்தியாவில் தற்போது அமைந்துள்ள தீவிர போக்குடைய அரசுதான் காஷ்மீர் மக்களை இவ்வாறு திறந்தவெளிச் சிறையில் வைத்துள்ளது. அம்மக்களுடைய சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது, தலைவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர், இளைஞர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் அல்லது காணாமல் போகிறார்கள்."
"நீங்கள் (மகாதீர்) எங்கள் பக்கம் இருந்தமைக்கும், தற்போது நடந்து கொண்டிருக்கும் அநீதி குறித்து மலேசியப் பிரதமர் பேசியதற்கும் பாகிஸ்தான் மக்கள் சார்பாக நன்றி" என்றார் இம்ரான் கான்.
கோலாலம்பூரில் நடைபெற்ற இஸ்லாமிய உச்சி மாநாட்டில் பங்கேற்க இயலாமல் போனதற்காக வருந்துவதாகக் குறிப்பிட்ட அவர், இஸ்லாமிய நாடுகள் ஒன்று சேர்ந்து மேற்கத்திய நாடுகளுக்கும், மற்ற நாடுகளுக்கும் இஸ்லாம் குறித்து சொல்லித் தர வேண்டும் என்றும், இதை மிகவும் முக்கியமான நடவடிக்கையாகக் கருதுவதாகவும் தெரிவித்தார்.
கோலாலம்பூரில் அடுத்த இஸ்லாமிய மாநாடு நடைபெற்றால் அதில் தாம் பங்கேற்பது உறுதி என்றார் இம்ரான் கான்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: