தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்திற்கு சம்மன்

பட மூலாதாரம், Getty Images
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்கும்படி நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் அமைந்திருந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டு மே மாதம் போராட்டம் நடைபெற்றபோது, காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமிகள் உட்பட பதிமூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களை பல்வேறு தரப்பினரும் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்தும் தூத்துக்குடிக்குச் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களைச் சந்தித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், போராட்டம் தொடர்பாக கடுமையான கருத்துகளைத் தெரிவித்தார். "தமிழ்நாட்டில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்தால் எந்த முதலீடும் வராது. இப்படித்தான் தமிழகம் வறுமையில் இருக்கும். எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் நாடே சுடுகாடாகிவிடும்" என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்:

மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு "சமூக விரோதிகளே காரணம்" என்றும் கூறினார்.

தூத்துக்குடி போராட்டத்தின் போது வெடித்த வன்முறை குறித்தும் அதனைத் தொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவம் குறித்தும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 17 அமர்வுகள் நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில், இது தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்திற்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 25ஆம் தேதியன்று அவர் ஆணையத்தில் ஆஜராக வேண்டுமெனக் கூறப்பட்டிருப்பதாக ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












