கொரோனா வைரஸ்: தமிழகம் திரும்பிய இளைஞருக்கு காய்ச்சல் - மருத்துவர்கள் ஆய்வு

பட மூலாதாரம், Getty Images
சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பிய இளைஞர் ஒருவருக்குக் காய்ச்சல் இருப்பதாக திருச்சி விமான நிலையத்தில் கண்டறியப்பட்டதால், அவருக்கு கொரோனா தாக்குதல் ஏற்பட்டுள்ளதா என கண்டறிய சோதனை மேற்கொள்ளப்படுவதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆறு மாத காலமாக சிங்கப்பூரில் ஓட்டுநராக பணிபுரிந்துவந்த 27 வயதாகும் அருண் என்பவர் திருச்சி விமான நிலையத்திலிருந்து திருச்சி தலைமை மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் சளி இருப்பதால் மருத்துவர்கள் சோதனை செய்தனர்.
கொரோனோ வைரஸ் காய்ச்சலுக்கு முக்கியமான அறிகுறியாக சொல்லப்படுவது மூச்சுத்திணறல்தான். ஆனால் அருணுக்கு சாதாரண காய்ச்சலுக்கான அறிகுறிகள் மட்டும் தென்படுவதாக திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆனாலும் கொரோனோ பாதிப்பு மீதான அச்சம் நிலவுவதால், அவரை தொடர் கண்காணிப்பில் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் முடிவுசெய்து, அவரை அரசு மருத்துவமனையில் தங்கவைத்துள்ளனர்.
அருண் ஒரு திருமணத்தில் கலந்துகொள்ளவந்ததாகவும், அவருக்கு பாதிப்பு இல்லை எனில் விரைவில் அவர் அனுப்பப்படுவர் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் இருந்து தமிழகம் வந்த ஒரு பெண்ணிடம் காய்ச்சல் தொற்று இருந்ததால், அவரை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ததாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போதுவரை கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் பாதிப்புகளை எதிர்கொள்வது குறித்து இந்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தலைவர் ஹர்ஷ் வர்தன் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும் விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு தொற்று பாதிப்பு இருக்கிறதா என்று சோதனைகள் மேற்கொள்ளப்படுவதையும் வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் கண்காணித்தார். சீனா மற்றும் ஹாங்காங் பயணிகள் மட்டும் அல்லாமல் சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து பயணிகளுக்கும் விமான நிலையங்களில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பது சோதித்து பார்க்கப்படுகிறது.
324 இந்திய குடிமக்கள் சீனாவின் வுஹான் பகுதியில் இருந்து இன்று பிப்ரவரி 2 இந்தியாவுக்கு வந்துள்ளனர். அதில் 104 பேர் சாவ்லா முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 220 பேர் ஹரியானாவில் தங்க வைக்கப்பட்டு, அவர்களின் உடல் நிலை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













