"இஸ்லாமிய பயங்கரவாதம், இந்து பயங்கரவாதம்": ராஜேந்திர பாலாஜி பேச்சால் அமைச்சர் பதவிக்கு ஆபத்தா?

பட மூலாதாரம், Facebook
தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் மதம் குறித்து தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டுமென்று ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திருச்சியில் கொல்லப்பட்ட பா.ஜ.க. பிரமுகர் விஜய ரகுவின் கொலை மத ரீதியானது என்று குறிப்பிட்டார்.
மேலும், "இப்படியே இஸ்லாமிய பயங்கரவாதத்தை கையில் பிடித்துக்கொண்டு போனார்கள் என்றால், இப்படியே இந்துக்களைக் கொல்லும் வேலையைத் தொடர்ந்தார்கள் என்றால், இப்படியே இந்துக்களைக் கொல்லும் இயக்கத்திற்கு தி.மு.க. துணை போனால், இந்து பயங்கரவாதம் உருவாவதைத் தடுக்க முடியாது" என்றும் கூறினார்.
மேலும், "இஸ்லாமியர்கள் வாழக்கூடிய தெருக்களில் முன்பு அண்ணா தி.மு.க.வுக்கு ஓட்டு பாதிக்குப்பாதி விழுந்தது; இப்போது பத்து ஓட்டுகூட கிடையாது. இளைஞர்களை மூளைச் சலவை செய்கிறார்கள். ஆயுதம் ஏந்த வைக்கிறார்கள்" என்றும் கூறினார்.
அவரது இந்தப் பேச்சிற்கு சமூக வலைதளங்களில் பெரும் கண்டனம் எழுந்தது. இந்த நிலையில், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனக் கோரி தி.மு.க. தமிழக ஆளுநரிடம் மனு அளித்துள்ளது.
இது குறித்துப் பேசிய தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன், "அவர் பேசுவதெல்லாம் அமைச்சராக இருப்பவர் பேசும் பேச்சல்ல. சிறுபான்மை மக்களிடம் அச்சுறுத்தல் உண்டாக்கும் வகையிலும் பெரும்பான்மை மக்களை பிளவுபடுத்தும் வகையிலும் ராஜேந்திர பாலாஜி செயல்படுகிறார். ஆளுநரின் செயலரைச் சந்தித்து, ராஜேந்திர பாலாஜியின் முழு பேச்சையும் பென் ட்ரைவில் கொடுத்திருக்கிறோம். ஆளுநர் தலையிட்டு, இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தை நாடுவோம்" என்று கூறினார்.

இது தனிப்பட்ட கருத்து: ஜெயக்குமார்
மாநில மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "இது அவரது தனிப்பட்ட கருத்து. அ.தி.மு.கவின் கருத்து அல்ல" என்று தெரிவித்தார்.
"ஒவ்வொரு மந்திரியும் தனிப்பட்ட கருத்துக்களைத் தெரிவித்துக்கொண்டிருந்தால், அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு என்பதற்கு என்ன அர்த்தம்?" என்று கேட்கிறார் ஜெ. அன்பழகன்.
ரஜேந்திர பாலாஜி அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் மாநில அமைச்சராக பதவி வகிக்கும் நிலையில், ஒரு மதத்திற்கு எதிராகப் பேசுவது சரியா என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.
"ராஜேந்திர பாலாஜி பேசியதற்கெல்லாம் அரசமைப்புச் சட்டம் வரையெல்லாம் போகத்தேவையில்லை. அவர் பேசியது முழுக்க வன்முறையைத் தூண்டும் விஷயம். இரு மதங்களுக்கு இடையில் விரோதத்தை வளர்க்க முயல்கிறார். அவர் மீது இதற்காக கிரிமினல் வழக்குத் தொடுக்கலாம். அல்லது காவல்துறையில் புகார் அளித்து, நீதிமன்றத்தில் முறையிட்டு விரைவில் நடவடிக்கை எடுக்க வைக்கலாம்" என்கிறார் மூத்த வழக்குரைஞரான விஜயன்.
இந்தியா முழுவதுமே அரசியலின் தரம் குறைந்துவருவதன் வெளிப்பாடுதான் ராஜேந்திர பாலாஜி போன்றவர்களின் பேச்சு என்கிறார் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு. "அரசமைப்புச்சட்ட ரீதியாக இவர் பேசியது சரியா என்று கேட்பதற்கு முன்பு இன்னொரு விஷயத்தை கவனிக்க வேண்டும். இந்தியா முழுவதுமே இம்மாதிரி அரசியல்வாதிகளும் மந்திரிகளும் ஏதோ ஒரு பிரிவினருக்கு எதிராகப் பேசி வருகிறார்கள். இந்திய அரசியலில் இது ஒரு பகுதியாகவே மாறிவிட்டது" என்கிறார் அவர்.
அரசியல் கட்சிகளும் இம்மாதிரி பேசக்கூடிய ஒருவர் தம் கட்சியில் இருக்க வேண்டும் என நினைக்கின்றன. அதனால்தான் இப்படி வெறுப்பு அரசியலை பேசுபவர்கள் தொடர்ந்து வெளிச்சத்தில் இருக்க முடிகிறது. இதையெல்லாம் விவாதிக்க வேண்டியிருப்பதே மிக மோசமான சூழல் என்கிறார் அவர்.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், பல அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு குறித்தும் அது தொடர்பாக எழுந்திருக்கும் சர்ச்சைகள் குறித்தும் முதல்வரிடமும் துணை முதல்வரிடமும் தெரிவித்ததாக பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













