5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: தமிழக அரசு அறிவிப்பு, கல்வியாளர்கள் வரவேற்பு

ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு ரத்து

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் ஐந்து,எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் தேர்வுகளை ரத்து செய்வதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

News image

தமிழ்நாட்டில் மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மாநிலம் தழுவிய அளவில் பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு முன்பு அறிவித்திருந்தது.

மாணவர்கள் எந்த அளவுக்குக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்தத் தேர்வின் மூலம் அறிந்துகொள்ள முடியும். மாணவர்களின் திறனை மேம்படுத்த இது உதவும் என இதற்கான காரணங்களை மாநில அரசு முன்வைத்தது. இதற்கான அரசானையும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியிடப்பட்டது.

ஆனால், சிறிய குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து மாநிலம் முழுவதுமே பல்வேறு தளங்களில் எதிர்ப்புகள் நிலவின. இது மாணவர்களின் மன நலனைப் பாதிக்கும் என கல்வியாளர்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்த நிலையில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்த பொதுத் தேர்வு ரத்துசெய்யப்படுவதாக மாநில கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். இன்று காலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இந்த முடிவை வெளியிட்டிருக்கிறார்.

"இது வரவேற்கத்தக்க முடிவு, மக்களாட்சி மாண்புக்கு உட்பட்டு தமிழக அரசு நடந்திருக்கிறது. குழந்தைகள் மகிழ்ச்சியடைவார்கள்" என்கிறார் பொதுக் கல்விக்கான மாநில மேடையின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

"14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இம்மாதிரி ஒரு தேர்வை வைப்பதே தவறு. ஒரு குழந்தை தான் பழகியவர்களிடம்தான் இயல்பாகப் பேசும், பதில் சொல்லும். திடீரென புதிதாக ஒரு ஆசிரியர், தேர்வுமுறை என்றால் குழந்தைகளால் எப்படி இயல்பாக பதிலளிக்க முடியும்? எந்த நாட்டில் இப்படி ஒரு தேர்வு முறை இருக்கிறது? செய்த தவறை மாநில அரசு திருத்திக்கொண்டிருக்கிறது. அது வரவேற்கத்தக்கது" என்கிறார் அவர்.

மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில், மாணவர்களின் திறனைச் சோதிக்க ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தவேண்டுமெனக் கூறப்பட்டிருந்தது.

இந்த பொதுத் தேர்வை அறிமுகப்படுத்துவதில் தமிழக அரசு பல முறை மாற்றி, மாற்றிப் பேசி வந்தது. ஒரு கட்டத்தில் இந்த ஆண்டே தேர்வை நடத்தப்போவதாக அறிவித்தது. தேர்வு நடத்தப்படும் முறை குறித்தும் பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இவற்றுக்குக் கடும் எதிர்ப்பு ஏற்பட்ட நிலையில், இந்த முடிவை மாநில அரசு அறிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: