பட்ஜெட் 2020: “இது வேலைவாய்ப்பை அதிகரிக்க வித்திடும் பட்ஜெட்” - பிரதமர் நரேந்திர மோதி பெருமிதம்

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Rob Stothard/getty images

2020-2021ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று (சனிக்கிழமை) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதை தொடர்ந்து, பட்ஜெட் குறித்து தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.

News image

"2020-21 நிதி ஆண்டுக்கான இந்த பட்ஜெட் பொருளாதார வளர்ச்சியை கருத்திற்கொண்டு தாக்கல் செய்யப்பட்டது. இன்றைய சூழலில் இளைஞர்களுக்கு விவசாயம், கட்டுமானம், ஜவுளி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய நான்கு துறைகளில் வேலைவாய்ப்பு அதிகம் இருக்கும். அதை உறுதி செய்யும் வகையில்தான் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது" எனக் கூறினார்.

விவசாயம்

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கக்கூடிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் விவசாயத் துறையின் மேம்பாட்டிற்காக 16 அம்சங்கள் கொண்ட செயல் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோதி தனது உரையில் குறிப்பிட்டார்.

விவசாயத் துறை

பட மூலாதாரம், DOMINIQUE FAGET/getty images

"விவசாயத் துறையுடன் ஒருசேர்ந்து பறவைகள் வளர்ப்பு, மீன்பிடி மற்றும் கால்நடைகள் வளர்ப்பு ஆகியவற்றின் வளர்ச்சி அதிகரிப்பதை உறுதிசெய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.

ஜவுளித்துறை

பல்துறைகளுக்கு தேவையான ஜவுளி தயாரிப்புகளை உருவாக்குதற்கு நெசவாளர்களுக்கு புதிய சாதனங்கள் வழங்கப்படும் என்றும், ஜவுளித்துறை சார்ந்த மூலப்பொருட்கள் மீதான வரி குறைக்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஆயுஷ்மான் என்னும் திட்டத்தின் கீழ் மருத்துவ துறையில் இருக்கும் மருத்துவர், செவிலியர் என அனைவரின் வளர்ச்சி பெருகவும் இந்த பட்ஜெட் வழிவகை செய்கிறது. மேலும் மருத்துவ உபகரணங்களின் தயாரிப்பை பெருக்குவதற்கும் இந்த பட்ஜெட் வழிவகை செய்கிறது.

வேலை வாய்ப்பு

பட மூலாதாரம், Sean Gallup/getty images

கட்டுமானம்

ஒவ்வொரு மாவட்டத்தையும் ஏற்றுமதி மையமாக மாற்றும் முயற்சியை செயல்படுத்த இந்த பட்ஜெட் உதவுகிறது எனக் கூறியுள்ளார் பிரதமர் மோதி.

"100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். வேலைவாய்ப்புகள் பெருக வேண்டுமென்றால் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும். குறிப்பாக டிவிடெண்ட் டிஸ்ட்ரிப்யூஷன் டாக்ஸ் நீக்கப்பட்டதால் தொழில் முதலீடுகள் அதிகரித்து வேலைவாய்ப்பு அதிகரிக்கும்."

வரிவிதிப்பு சீர்த்திருத்தங்கள்

முதலீடுகளை ஊக்கப்படுத்தும் வகையில் புதிதாக தொழில் தொடங்குவோருக்கு மட்டுமின்றி, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளுக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தனது உரையின்போது பிரதமர் மோதி கூறினார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை தணிக்கை செய்வதற்கான உச்சவரம்பு தற்போதுள்ள ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வரி

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE/getty Images

மேலும், மக்களின் சேமிப்பை அதிகரிக்க வைப்பு நிதிகளுக்கான காப்பீட்டு தொகை ஒரு லட்சத்திலிருந்து ஐந்து லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

"கட்டுமானத்தை வலுவாக்க ஒரு லட்சம் கிராமங்களில் உள்ள பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் காவல் நிலையங்கள் உள்ளிட்டவை இணைய வசதி மூலம் இணைக்கப்பட உள்ளது."

விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், அவர்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கான அமைப்புமுறையை ஏற்படுத்தி கொடுக்க திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

ஒட்டுமொத்தத்தில் இந்த பட்ஜெட் வருமானம், முதலீடு மற்றும் நுகர்வு ஆகியவற்றை அதிகரிக்கும் வகையில் அமைந்திருப்பதாக பிரதமர் மோதி மேலும் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: