You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நரேந்திர மோதிக்கு எதிராக குழந்தைகள் நாடகம்: பள்ளி மீது 'தேச துரோக' வழக்கு
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்தி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக குழந்தைகளை பேச வைத்து தேச துரோகம் செய்ய வைத்ததாக, கர்நாடக மாநிலம் பீடரில் உள்ள பள்ளி ஒன்றின் நிர்வாகம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை குறிப்பிட்டு தாங்கள் இந்தியக் குடிமக்கள்தான் என குழந்தைகள் நிரூபிப்பதைப் போல நடித்துக் காட்டும் பள்ளி நாடக காணொளி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. அதில் பிரதமர் நரேந்திர மோதி, ஆவணங்களை கேட்பது போன்ற ஒரு குறியீடும் இருந்தது. இதனை அடிப்படையாக வைத்தே புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 21 அன்று நிகழ்ந்த பள்ளி நாடகம் கண்டிக்கத்தக்க வகையில் இருந்ததாகவும், அது தேசத் துரோக குற்றச்சாட்டில் வரும் என்றும் புகாரில் கூறப்பட்டிருக்கிறது.
மேலும் இந்தியப் பிரதமர் மோதிக்கு எதிராக தகாத வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டதாக பீடர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீதரா பிபிசியிடம் தெரிவித்தார்.
அந்தக் காணொளியில் பிரதமரை 'தேநீர் விற்கும் வயதான மனிதர்' என்று குறிப்பிடப்பட்டதாக தெரிகிறது.
"குழந்தைகளுக்கு எது சரி, எது தவறு என்று தெரியாது. பள்ளியில்தான் அவர்களுக்கு அனைத்தும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அங்கு குழந்தைகளை பிரதமருக்கு எதிராக பேச வைப்பது கண்டனத்திற்குரியது," என்று சமூக செயல்பாட்டாளர் நீலேஷ் ரக்ஷல் பிபிசியிடம் தெரிவித்தார்.
"இது போன்று குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது தவறுதானே? இது குழந்தைகளின் தவறு கிடையாது. பள்ளி நிர்வாகத்தின் தவறு" என்கிறார் நீலேஷ்.
இந்நிலையில், தவறு நிகழ்ந்துவிட்டதாக பள்ளி நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.
"சிஏஏ, என்ஆர்சி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த நடத்தப்பட்ட நாடகம் அது. குழந்தைகள் அவர்களது பெற்றோர் கற்றுக் கொடுத்த ஓரிரு வரிகளைத்தான் பேசினார்கள்" என ஷஹீன் கல்வி குழமத்தின் தலைமை செயல் அதிகாரி தௌசீஃப் மடிக்கேரி பிபிசியிடம் தெரிவித்தார்.
"ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு எந்த வசனங்களையும் கற்றுக் கொடுக்கவில்லை" என்று தௌசீஃப் கூறுகிறார்.
"நாடகம் நடக்க இருந்த சமயத்தில் அது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. குழந்தைகளுக்கு அவ்வாறு கற்றுக் கொடுத்தது தவறுதான் என பெற்றோர்களும் கடிதம் எழுதி கொடுத்துள்ளனர்," எனவும் அவர் கூறினார்.
ஆனால், இது தொடர்பாக பெற்றோர் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.
"இது தேச துரோகமா இல்லையா என்பதை விசாரிக்க வேண்டும். தகுந்த ஆதாரங்களை வைத்துத்தான் ஒரு முடிவுக்கு வர முடியும்" என்கிறார் பீடர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாள ஸ்ரீதரா.
இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பிரிவு 504 (பொது அமைதிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது) 505 (2) (மற்றவர்களை குற்றம் செய்ய தூண்டும் வகையில் பயத்தை உண்டாக்குவது) 124(A) (தேச துரோகம்) மற்றும் 153 (A) (இரண்டு சமூகத்திற்கிடையே பகைமையை உண்டாக்குவது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஷஹீன் கல்வி குழுமம் மற்றும் அந்தக் காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்த முகமது யூசுஃப் ரஹீம் என்பவர் மீது மேற்கண்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: