You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேல் - பாலத்தீன மோதலின் பிரச்சனைகளும் பின்னணியும்?
மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளது தொடர்பாக உலக அளவில் பல்வேறு விவாதங்களும், எதிர்வினைகளும் நடந்துவரும் நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலத்தீன தரப்புகளுக்கு இடையேயான மோதலின் நெடிய பின்னணி என்ன என்பதை பார்ப்போம்.
மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை அறிவித்த டிரம்ப் இந்த திட்டம்தான் பாலத்தீனத்திற்கான கடைசி வாய்ப்பு எனக் கூறி உள்ளார். ஆனால், அமெரிக்காவின் அமைதி திட்டத்தை சதித்திட்டம் எனக் கூறி புறக்கணித்துள்ளது பாலத்தீனம்.
தொடர்புகளை முறித்துக் கொண்ட பாலத்தீன தரப்பு
ஜெரூசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து, டெல் அவிவ் நகரில் இருந்து தனது தூதரகத்தை மாற்றப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 2017 டிசம்பரில் அறிவிப்பு வெளியிட்ட பிறகு, அமெரிக்க அரசுடன் இருந்த தொடர்புகளை பாலத்தீன தரப்பு முறித்துக் கொண்டது.
அதற்கு பிறகு பாலத்தீனத்துக்கு வழங்கப்படும் உதவிகள் மற்றும் பாலத்தீன அகதிகளின் நல்வாழ்வுக்காக உருவாக்கப்பட்ட ஐ.நா. அமைப்புக்கு அளிக்கும் உதவிகள் ஆகிய இரண்டையும் அமெரிக்கா நிறுத்தியது.
சர்வதேச சட்டத்துக்கு முரணாக யூத குடியிருப்புகள் மேற்குக்கரை பகுதியில் உள்ளதாக கடந்த நான்கு தசாப்தங்களாக தாங்கள் மேற்கொண்டு வந்த நிலைப்பாட்டை அமெரிக்கா கைவிடுவதாக அமெரிக்க செயலர் மைக் பாம்பேயோ கடந்த நவம்பரில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்காவின் தற்போதைய அறிவிப்பை தொடர்ந்து அரபு லீக் (அரேபிய நாடுகளின் கூட்டமைப்பு) அமைப்பு வரும் சனிக்கிழமையன்று அவசர கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இஸ்ரேல்- பாலத்தீன்இடையே பிரச்சனைகள் என்ன?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடந்த அனைத்து மோதல்களிலும், இஸ்ரேல் மற்றும் பாலத்தீன தரப்புகளுக்கு இடையேயான மோதலே மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
கடந்த 1993-இல் இந்த இவ்விரு தரப்புகளும் அமைதி உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்ட போதிலும், இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் இடையிலான பிரச்சனைகள் மற்றும் மோதல்களை அரேபு நாடுகள் மட்டுமல்லாது உலகமே உன்னிப்பாக கவனித்து வருகிறது.
ஜெரூசலேம் -சரித்திரத்தின் சுவடுகள்
இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் ஆகிய இரு தரப்புகளும் ஜெரூசலேம் மீது தொடர்ந்து உரிமை கோரி வருகின்றன. இந்த நகரை 1976 மத்திய கிழக்கு போரில் இஸ்ரேல் ஆக்கிரமித்ததாகக் கூறும் பாலத்தீனம் ஜெரூசலேமை தங்களின் எதிர்கால தனி நாட்டுக்கு தலைநகராக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அரபு-இஸ்ரேல் போரில் கிழக்கு ஜெரூசலேமை தனது கட்டுப்பாட்டிற்கு இஸ்ரேல் கொண்டு வந்தது.
எதிர்காலத்தில் உருவாக்கப்படும் தன்னுரிமைகொண்ட பாலத்தீன நாட்டின் தலைநகராக ஜெரூசலேம் இருக்கும் என்பது பாலத்தீனர்களின் வாதம். ஒன்றுபட்ட ஜெரூசலேம் தனது தலைநகர் என்று இஸ்ரேல் கூறுகிறது.
இஸ்ரேலியர்களுக்கும், பாலத்தீனர்களுக்கும் புனித நகராக திகழும் ஜெரூசலேம் நகர் மட்டும் மிகவும் புராதனமானது அல்ல அதைப் பற்றிய சர்ச்சைகளும் பழமையானவையே.
இஸ்லாம், கிறிஸ்தவம், யூதம் ஆகிய மூன்று மதங்களுக்கும் புனித்ததலம் ஜெரூசலேம்.
இதனாலேயே பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்கள், யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஜெரூசலேமிற்கு உரிமை கொண்டாடுகின்றனர்.
5,000 ஆண்டு வரலாற்றைக் கொண்ட ஜெரூசலேம் பலமுறை தாக்குதலுக்கு உள்ளாகி, முற்றுகையிடப்பட்டுள்ளது. தரைமட்டமாக்கப்பட்டு மீண்டும் புனரமைக்கப்பட்டுள்ளது. எனவேதான் இந்த நகரின் மண்ணில் சரித்திரத்தின் சுவடுகள் பொதிந்துள்ளதாக கருதப்படுகிறது.
பாலத்தீன தரப்பு கோரும் அதிகாரமும், இஸ்ரேல் கூறுவதும்
மேற்குக்கரை, காஸா மற்றும் கிழக்கு ஜெரூசலேம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி தங்களுக்கு என சொந்த நாடு ஒன்று வேண்டும் என்று பாலத்தீனர்கள் விரும்புகின்றனர்.
பாலத்தீன தரப்பு விரும்புவது போல தனி நாடாக அப்பகுதியை தங்கள் ஏற்றுக் கொள்வதாக கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த இஸ்ரேல் பிரதமர்கள் கூறியுள்ள போதும், அவர்கள் கோரும் எல்லைகளை இஸ்ரே ஏற்றுக்கொள்ளவில்லை.
தனது பிராந்தியத்தில் தன்னாட்சி செய்ய பாலத்தீன தரப்புக்கு அதிகாரம் அளித்தாலும், இஸ்ரேலை அச்சுறுத்தும் விதமாக அந்த பகுதி ராணுவ மயமாக்கப்படக்கூடாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
55 லட்சம் பாலத்தீனஅகதிகள்
மத்திய கிழக்கு பகுதியில் உள்ள கிட்டத்தட்ட 55 லட்சம் பாலத்தீன அகதிகளுக்கு தங்களின் முகமைகள் ஆதரவளிப்பதாக ஐ. நா. அமைப்பு தெரிவித்திருந்தது.
அகதிகளின் எண்ணிக்கை 60 லட்சம் வரை உள்ளதாக பாலத்தீன நிர்வாகம் தெரிவிக்கிறது. 1948-49 போரில் யூத படைகளின் தாக்குதலால் தப்பித்து சென்றவர்களின் வம்சாவளியினரும் இதில் அடங்குவர்.
இவர்கள் தங்கள் சொந்த பூமிக்கு திரும்ப வாய்ப்பளிக்க வேண்டும் என்று பாலத்தீனம் கோருகிறது. அதேவேளையில் அவ்வாறு செய்வதற்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: