இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பா? மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 12 பேர்

பட மூலாதாரம், Getty Images
இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
தி டைம்ஸ் ஆஃப் நாளிதழ் -இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பா?
சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து இந்தியா திரும்பிய 12 பேர் முன்னெச்சரிகை நடவடிக்கைகளுக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்கிறது தி டைம்ஸ் ஆஃப் நாளிதழ் செய்தி.
மூன்று நபர்கள் மும்பையிலும், ஒன்பது பேர் கேரள மருத்துவமனைகளிலும் தனியே வைக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், கடைசியாக நேபாளத்தில் ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து நேபாள் திரும்பிய மாணவர் ஒருவர் மூச்சுத் திணறல் பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மும்பையில் இருவர், ஹைதராபாத், பெங்களூரில் ஒருவர் என கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நபர்களை பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டது.
கேரள மாநிலம் கோட்டயத்தில் பெண் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, அவரது வீட்டில் அவர் தனிமைபடுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி: நிர்பயா குற்றவாளிகள் நீதிமன்றத்தில் மனு
''திகார் சிறை அதிகாரிகள் சில ஆவணங்கள் தருவதை தாமதிப்பதால் தங்கள் தரப்பு சீராய்வு மனு மற்றும் கருணை மனு ஆகியவற்றை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது,'' என்று நிர்பயா குற்றவாளிகளில் 3 போ் தரப்பில் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நிர்பயா பாலியல் வன்கொடுமை-கொலை வழக்கின் குற்றவாளிகளான வினய் சா்மா, முகேஷ் குமார், அக்ஷய்குமார் சிங், பவன்குமார் குப்தா ஆகிய நால்வருக்கும் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றுமாறு தில்லி நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துவிட்டது. இதில் சிலருக்கு கருணை மனு மற்றும் சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன. எனினும், அதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இது தொடா்பாக குற்றவாளிகள் வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் சிங், பவன் குப்தா தரப்பில் வழக்குரைஞா் ஏ.பி.சிங், தில்லி நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
அதில், 'வினய் குமார் சர்மா கருணை மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல, அக்ஷய் குமார் சிங், பவன் குப்தா ஆகியோர் தனது தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய இன்னமும் வாய்ப்பு உள்ளது. ஆனால், சிறை அதிகாரிகள் சில ஆவணங்களைத் தர மறுப்பதால் மனுக்களை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது. முக்கியமாக, 70 பக்கங்கள் கொண்ட வினய் குமாரின் டைரியை சிறை அதிகாரிகள் தர மறுக்கின்றனர். அதனை உடனடியாக தர சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் சனிக்கிழமை விசாரிக்கப்படும் என்று தெரிகிறது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - சங்கிலியால் கட்டப்பட்டு கொடுமைக்கு உள்ளான முதியவர்கள்
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் அருகே கீசரா எனும் இடத்தில் முதியோர் காப்பகம் ஒன்றில் சிகிச்சை எனும் பெயரில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு இருந்த 80க்கும் மேற்பட்ட முதியோரை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.
தங்கி இருந்தவர்களை கொடுமை செய்தததாக குற்றம்சாட்டப்படும் 'மமதா' எனும் முதியோர் காப்பகம் மூடப்பட்டுள்ளதுடன் அதை நடத்தியவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐந்து முதியோரை அவர்களது குடும்பத்தினர் மீண்டும் அழைத்துச் சென்றுள்ளனர். 21 மூதாட்டிகள் மற்றும் 56 ஆண் முதியவர்கள் வேறு முதியோர் காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை திரும்ப அழைத்துச் செல்லாத அவர்களின் குடும்பத்தினர் மீது மூத்த குடிமக்கள் நலச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட முதியவர்களின் பராமரிப்புக் கட்டணமாக மமதா முதியோர் இல்ல நிர்வாகிகள் மாதம் ரூ.10 ஆயிரம் வசூலித்துள்ளனர்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













