You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'வில்சன் கொலை மற்றும் தீவிரவாத தொடர்பு' - ராமநாதபுரத்தில் மூவர் கைது
சுட்டுக் கொலை செய்யப்பட்ட காவல்துறை சார்பு ஆய்வாளர் வில்சன் கொலை மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்க்க திட்டமிட்டது ஆகிய குற்றச்சாட்டுகளின்பேரில் ராமநாதபுரம் காவல்துறையினர் மூன்று நபர்களை புதன்கிழமை இரவு கைது செய்துள்ளனர். ஒருவர் தப்பியோடியுள்ளார்.
"ராமநாதபுரம் மாவட்டம் தேவி பட்டினத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானம் அருகே சந்தேகத்திற்கிடமாக நான்கு பேர் பேசிக்கொண்டிருந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து தேவிபட்டிணம் காவல் துறையினர் அங்கு சென்றனர். போலீஸார் வருவதை கண்டதும் தப்பி ஓட முயன்ற நான்கு பேரில் மூவர் போலிஸாரிடம் பிடிப்பட்டனர்," என காவல்துறை தெரிவித்துள்ளது.
விசாரணையில் அவர்கள் அருண் குமார் என்கிற அமீர், மணிகண்டன் என்கிற முகமது அலி, புறாக்கனி என்ற பிச்சைக்கனி என்பதும், தப்பியோடியவர் பெயர் ஷேக் தாவூத் என்பதும் தெரிந்தது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது அலி, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமீர் ஆகியோர் பிறப்பால் இந்துக்கள் என்றும் இஸ்லாமியர்களாக மதம் மாறியவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
தப்பியோடிய ஷேக் தாவூத் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்பட்டு அவர் மீது ஏற்கனவே கீழக்கரை காவல்துறையினரால் 2018இல் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ள அந்த வழக்கில் கைதாகியிருந்த ஷேக் தாவூத் தற்போது பிணையில் வெளியே வந்திருந்தார்.
வில்சன் கொலைக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு?
களியக்காவிளை சிறப்புநிலை சார்பு ஆய்வாளர் வில்சன் கொலையில் தொடர்புடைய அப்துல் சமீமுக்கு பணம் பரிமாற்றம் செய்தது தொடர்பாகவும், தாங்கள் சார்ந்துள்ள இயக்கத்திற்கு ஆட்கள் சேர்க்க உதவிய முகமது ரிபாஸ் குறித்தும் நான்கு பேரும் கூடி விவாதித்தது விசாரணையில் தெரிய வந்ததது என்கிறது ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை.
இளைஞர்களை மூளைச் சலவை செய்து அவர்களை ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளில் சேர்க்கவும், மதரஸாக்களில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் கைதாகியுள்ளவர்கள் திட்டமிட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமிய அமைப்புகள் மீது அவதூறு
மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மூன்று செல்போன்களை பறிமுதல் செய்த காவலர்கள், அவர்கள் பயன்படுத்தும் சில வாட்ஸ்ப் குழுக்களில் பிற இஸ்லாமிய இயக்கங்கள் குறித்து அவதூறு தகவல் பரப்பியது கண்டறியப்பட்டது.
தப்பியோடிய ஷேக் தாவூத் ஏற்கனவே சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்திருந்தார்
இவர்கள் மூன்று பேர் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஒன்பது பிரிவுகளின் கீழ் தேவி பட்டினம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தப்பி ஓடிய சேக்தாவூத் தீவிரவாதிகளின் திட்டத்தைச் செயல்படுத்தத் தமிழ்நாடு, கேரளா பகுதிகளில் ஆள் தேர்வு பணியை சேக் தாவூத் மேற்கொண்டு வந்ததது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்கின்றனர் காவல் துறையினர்.
கைது செய்யப்பட்ட மூவரும் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் ராமநாதபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பிப்ரவரி 6ஆம் தேதி வரை அவர்களுக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுவது என்ன?
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், ''எனக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் தேவிபட்டிணத்தில் அவர்களை சுற்றி வளைத்தனர். விசாரணையில் என்ஐஏவால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஷேக் தாவூத் மற்றும் தேவிபட்டினத்தைச் சேர்ந்த முகமது ரியாஸின் கூட்டாளிகள் என்பது தெரியவந்துள்ளது.''
''கீழக்கரையை சேர்ந்த முகமது கனி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது அலி மற்றும் விழுப்புரம் மாவட்டம் மன்மேடு பகுதியைச் சேர்ந்த அமீர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். போலிஸாரை கண்டதும் ஷேக் தாவூத் தப்பிச் சென்றுவிட்டார். அவரைப் பிடிக்க தனிபடைகள் அமைத்துத் தேடி வருகிறோம்.''
''களியக்காவிளை சிறப்பு சார்பு ஆய்வாளர் கொலையில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய நபரான அப்துல் சமீமுடன் இவர்கள் பணம் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.''
'அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட செல்பேசியில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்காக, நிதி திரட்டுவதும், இளைஞர்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாத அமைப்புகளுக்கு தயார் செய்வதிலும் இவர்கள் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது,'' என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வருண்குமார் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: