You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆந்திர பிரதேசத்திற்கு 3 தலைநகரங்கள்: சில கேள்விகள், சில பதில்கள்
விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகரமாகவும் அமராவதியை சட்டமன்றத் தலைநகரமாகவும் கர்நூலை நீதித்துறையின் தலைநகரமாகவும் ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
ஆந்திர பிரதேசத்திற்கு 3 தலைநகரங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கும் மசோதா அந்த மாநில சட்டமன்றத்தின் கீழவையில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் சட்டமன்ற மேலவையில் நிறைவேற்றப்படவில்லை. இதனால் ஆந்திராவின் சட்டமன்ற மேலவையை முழுமையாக நீக்க ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அரசாங்கம் முயற்சிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது?
ஆனால் ஆந்திர பிரதேச மாநிலத்தின் சட்டமன்ற மேலவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்துள்ளதால் சட்டமன்ற மேலவையையே நீக்குவதற்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசாங்கம் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
சட்ட மேலவையில் என்ன சிக்கல்?
இந்த மசோதாவிற்கு ஆந்திர பிரதேசத்தின் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து சில திருத்தங்களை முன்வைத்தது. அந்த திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன.
இதன் பிறகு, ஜனவரி 21ம் தேதி அம்மாநிலத்தின் நீதித்துறை அமைச்சர் ராஜேந்திரநாத் ரெட்டி, இந்த புதிய மசோதா குறித்த தகவல்களை ஆந்திர பிரதேசத்தின் சட்டமன்ற மேலவையில் விவரித்தார். ஆனால் மேலவையில் தெலுங்கு தேசம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததால் இந்த மசோதாவை சட்டமன்ற மேலவையில் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த மசோதாவை நிறைவேற்றுவது ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. ஏனெனில் சட்டமன்ற மேலவையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 9 உறுப்பினர்களும், தெலுங்கு தேசம் கட்சிக்கு 34 உறுப்பினர்களும் உள்ளனர்.
இதனால் ஆளும் கட்சிக்கு பலம் குறைவாக உள்ளதால், இந்த புதிய மசோதாவை நிறைவேற்ற சட்டமன்ற மேலவையையே நீக்க ஆந்திர ஆரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மூன்று தலைநகரங்கள் என குறிப்பிடப்படுவதற்கான அர்த்தம் என்ன ?
ஆந்திராவில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் அமராவதியில் இருந்து தலைமை செயலகம் மற்றும் ஆளுநர் மாளிகையை விசாகப்பட்டினத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
ஆந்திராவின் மையப்பகுதியில் உள்ள அமராவதியில் சட்டமன்றக் கூட்டம் மட்டுமே இனி நடைபெறும். மேலும் கர்நூலில் உயர் நீதிமன்றம் அமைக்கப்படவுள்ளது.
ஏற்கனவே அமராவதியை உலகத் தரம் வாய்ந்த தலைநகரமாக மாற்ற விவசாயிகள் பலர் தங்களின் நிலங்களை வழங்கி இருந்தனர். இதை ஈடு செய்யும் விதமாக, முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 10 ஆண்டுகளுக்கு மாத ஊதியம் வழங்கப்படும் என அறிவித்து அது நடை முறையில் இருந்தது.
தற்போது விவசாயிகளுக்கு வழங்கப்படும் இந்த மாத ஊதியம் 15 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
இந்த மசோதாவால் என்ன சர்ச்சை எழுந்துள்ளது ?
2014ம் ஆண்டு, ஜூன் 2ம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பிரிந்து தெலங்கானா புதிய மாநிலம் உருவானது. அப்போது 2014ல் புதிதாக சட்ட திருத்தம் மேற்கொண்டு 10 ஆண்டுகளுக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு ஹைதராபாத் பொதுவான தலைநகரமாக அமையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
புதிதாக ஆந்திர பிரதேசத்துக்கு ஒரு தலைநகரை அமைக்க மத்திய அரசு ஆணையம் ஒன்றை அமைத்து ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆணையத்திற்கு சிவராம கிருஷ்ணன் என்பவர் தலைமையேற்றார். இந்த ஆணையம் ஆந்திர பிரதேசத்துக்கு மூன்று தலைநகரங்கள் என்ற முடிவை பரிந்துரைத்தது. இதே ஆணையம் தலைநகரம் அமைக்க சில நகரங்களின் பெயர்களையும் பரிந்துரைத்தது.
ஆனால் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, சிவராம கிருஷ்ணன் ஆணையம் பரிந்துரை செய்த இடங்களை தேர்வு செய்யாமல், அமராவதியில் தலைநகரம் அமையும் என அறிவித்தார்.
2015ம் ஆண்டு அக்டோபர் 22ம் நாள், இந்திய பிரதமர் நரேந்திர மோதி அமராவதியில் தலைநகரம் அமைக்க அடிக்கல் நாடினார். மேலும் ஆணையம் அதன் பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்புவதற்கு முன்பே, சந்திரா பாபு நாயுடு அரசாங்கம் அதன் நிர்வாகச் செயல்பாடுகளை அமராவதிக்கு மாற்ற துவங்கியது.
தலைமை செயலகம், அரசின் புதிய திட்டங்களுக்கான கட்டடங்கள் என சில கட்டுமானப் பணிகள் அமராவதியில் துவங்கப்பட்டன. பல அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சென்று புதிய தலைநகரம் அமைப்பதற்கான வரைவுத்திட்டம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரம்மாண்டமான தலைநகரம் அமைக்கப்படும் என உறுதியளித்தார்.
ஆனால் 2019ம் ஆண்டு அனைத்து திட்டங்களும் தலைகீழாக மாறின. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற அந்த நாளில் இருந்து அமராவதியில் புதிய தலைநகரம் அமைக்க உருவாக்கப்பட்ட கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன.
தலைநகரம் உருவாக்குவது குறித்து புதிய அறிக்கை ஒன்றை தயாரிக்க ஜி.என். ராவ் தலைமையில் புதிய ஆணையம் அமைக்கப்பட்டது. இது குறித்து ஆந்திரபிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சட்டமன்ற கூட்டத்தில் அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டார்.
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறுவது என்ன ?
மூன்று நகரங்களை தலைநகரமாக்கி, பல்லாயிரம் கோடி ரூபாயை ஒரே இடத்தில் முதலீடு செய்வதற்கு பதிலாக மூன்று இடங்களில் முதலீடு செய்வதால் பல மக்கள் பயனடைவார்கள் என்றார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.
மேலும் முந்தைய முதல்வர் சந்திரபாபு நாயுடு மக்களுக்கு காட்டிய தலைநகர வரைவுத்திட்டம் கற்பனையானது. அதை நடைமுறைப்படுத்துவது சாத்தியம் அல்ல என்று ஜெகன் மோகன் ரெட்டி கூறுகிறார்.
தெலுங்கு தேசிய கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு என்ன சொல்கிறார் ?
தலைநகரை பரவலாக பகிர்ந்து அளிக்க வேண்டிய அவசியம் இல்லை, வளர்ச்சி திட்டங்களைத்தான் பகிர்ந்து அளிக்கவேண்டும். ஒவ்வொரு முறையும் முதலமைச்சர் மாறும்போது தலைநகரம் மாற்றப்படுவது சரியா என கேள்வி எழுப்புகிறார்.
சட்டமன்றத்திற்கு வெளியே என்ன நடக்கிறது ?
அமராவதியில் தலைநகரம் அமைப்பதற்காக நிலங்களை வழங்கிய விவசாயிகளும் பொது மக்களும் தலைமை செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
அமராவதியில் பெண்களும் விவசாயிகளும் தடுப்புகளை மீறி, மூன்று தலைநகரங்கள் அறிவிக்கப்பட்டதை திருப்ப பெற வேண்டும் என போராட்டம் நடத்துகின்றனர். ஜன சேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் அமராவதியில் உள்ள போராட்டக்காரர்களை சந்திக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
விஜயவாடாவின் பல பகுதிகளிலும், அமராவதியிலும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மாதிரியை வேறு எந்த மாநிலங்கள் பின்பற்றுகின்றன?
பெங்களூரில் மட்டுமல்லாது பெல்காமிலும் கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற கூட்டம் இரண்டு இடங்களில் நடைபெறும். இமாச்சல பிரதேசத்திலும் தலைநகர் சிம்லா, தர்மசாலா ஆகிய இரண்டு இடங்களில் சட்டமன்ற கூட்டம் நடைபெறும்.
உத்தரகாண்டின் நைனிடால் நகரில் அம்மாநில உயர் நீதிமன்றம் அமைந்துள்ளது. எனவே உத்தரகாண்டின் நீதித்துறை தலைநகராக நைனிட்டால் அறியப்படுகிறது.
அதேபோல கேரளா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தலைநகரம் அல்லாத இடத்தில் உயர் நீதிமன்றம் அமைந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: