You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யுரேனிய சுரங்கம் அமைத்தால் அணை உடையும் - அச்சத்தில் ஆந்திர மக்கள்
நல்லமல்லா காட்டில் யுரேனிய சுரங்கம் அமைத்தால் அங்குள்ள அணைகள் பாதிக்கப்படும் என அங்கு வசிக்கும் மக்கள் அச்சப்படத் துவங்கியுள்ளனர்.
இங்குள்ள ஸ்ரீ சைலம் ஆணை ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் நீர் ஆதாரமாக இருப்பதுடன் மின்சாரத்தையும் கொடுக்கிறது
செளதி அரேபியா நிதி உதவி
ஸ்ரீசைலம் அணையின் கட்டுமானப்பணி 1963-64ல் தொடங்கி 1983ல் கட்டி முடிக்கப்பட்டது. இது சௌதி அரேபியாவின் நிதி உதவியினால் கட்டப்பட்டது.
2009ல் பெரிய வெள்ளம் வந்தப்போது ஸ்ரீசைலம் அணை அதனுடைய கொள்ளளவை விட இரண்டு மடங்கு அதிகமாக தண்ணீர் வந்தபோதும் எந்தவித சேதம் இல்லாமல் இன்று வரை உள்ளது.
முதலில் மின்சார உற்பத்திக்காக அமைக்கப்பட்டாலும், பிறகு விவசாயத்திற்காகவும் பயன்பட்டது.
நல்லமல்லா காடு, ஸ்ரீ சைலம் அணை குறித்து பிபிசி எடுத்த சிறப்பு காணொளியை காண:
யுரேனிய சுரங்கம்
தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ள நல்லமல்லா காடுகளில் யுரேனியம் எடுப்பதற்காக சுரங்கம் அமைக்க யுசிஐஎல் எனப்படும் யுரேனியம் கார்ப்பரேஷன் இந்தியா அமைப்பு முன்மொழிந்துள்ளதை தொடர்ந்து, அந்த பகுதியில் வாழும் மக்கள் இதற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த யுரேனிய சுரங்கத்தால் நல்லமல்லா காடுகள் மற்றும் அங்கிருக்கும் அம்ராபாத் புலிகள் சரணாலயம், ஸ்ரீ சைலம் அணை நாகார்ஜுன சாகர் அணை ஆகியவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அம்ராபாத் பகுதியில் இந்த யுரேனிய சுரங்கத்தின் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதனால் அம்ராபாத் காட்டுப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதுடன், ஸ்ரீசைலம் மற்றும் அதன் நீரோட்டப்பகுதியில் அமைந்துள்ள நாகர்ஜுன சாகர் அணையின் நீரும் மாசடையும் என அந்தப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
நோய் மற்றும் சுற்றுசூழல் மாசு
யுரேனியம் ஒரு கதிரியியக்க பொருள் ஆகும். அணு ஆயுதங்களை தயாரிக்க மற்றும் அணு மின் நிலையத்தில் பயன்படும் ஒரு முக்கிய பொருளாகும். இந்த அர்மாபாத் பகுதியில் கிடைக்கும் யுரேனியம் உலகின் மற்ற பகுதியில் கிடைக்கும் யுரேனியத்தை காட்டிலும் நல்லதாக இருக்கும் என யுசிஐஎல் கூறுகிறது. மேலும் இந்த சுரங்கத்தால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் யுசிஐஎல் கூறுகிறது.
ஆனால் ஏற்கனவே கடப்பாவில் இருக்கும் இது போன்ற யுரேனிய சுரங்கத்தால் மக்களுக்கு நோய் மற்றும் சுற்றுசூழல் மாசு ஆகியவை உண்டாவதாக சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றசாட்டுகிறார்கள். ஆனால் இந்த பாதிப்புகள் சுரங்கத்தால் அல்ல என யுசிஐஎல் கூறுகிறது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்