ஜியோவுக்கு சாதகமாகும் சந்தை - வோடஃபோன், ஏர்டெலுக்கு பலத்த அடி

ரிலையன்ஸ் ஜியோவின் முக்கிய போட்டியாளர்களான சில தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இந்திய அரசு விதித்த அபராதங்களை கட்டாயம் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோவுக்கு சந்தையில் சாதகமான சூழலை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஈட்டும் லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் அரசாங்கத்தின் தொலைத்தொடர்புத் துறையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

ஆனால் இது குறித்து கடந்த 2005ம் ஆண்டில் இருந்தே அரசாங்கம் மற்றும் தொலைத்தொடர்ப்பு நிறுவனங்களுக்கு மத்தியில் கருத்து உடன்பாடு ஏற்படவில்லை.

தொலைத்தொடர்ப்பு வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்படும் வருவாயை மட்டுமே கணக்கிட வேண்டும் என நிறுவனங்கள் விரும்புகின்றன. ஆனால் தொலைத்தொடர்பு அல்லாத சொத்துகள் மற்றும் விற்பனை வைப்புத்தொகைகளின் மூலம் ஈட்டப்படும் வட்டி உள்ளிட்ட பரந்து விரிந்த வரையறையை கணக்கிட்டு வரி விதிக்க அரசாங்கம் விரும்புகிறது.

வோடஃபோன் ஐடியா நிறுவனம் சுமார் 53,000 கோடி ரூபாய், ஏர்டெல் நிறுவனம் சுமார் 35,500 கோடி ரூபாய் மட்டுமல்லாது தற்போது தங்கள் தொலைத்தொடர்பு சேவைகளை நிறுத்திவிட்ட டாட்டா டெலிசர்வீசஸ் நிறுவனம் சுமார் 13,800 கோடி ரூபாய் மற்றும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 20,400 கோடி ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டும் என்று இந்தியத் தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்கு தர வேண்டிய தொகை என்று இந்திய அரசு கூறும் தொகை சுமார் 1.47 லட்சம் கோடி ரூபாய்.

இந்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக வோடஃபோன் ஐடியா மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தன.

கடந்த அக்டோபர் 24ஆம் தேதி அரசின் இந்த முடிவை ஆதரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மனு தொடுத்திருந்தன. ஆனால் அதை உச்சநீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

இது அம்பானியின் ரிலையன்ஸ் ஜியா நிறுவனத்துக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே வோடஃபோன் ஐடியாவை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் மிகப்பெரிய அலைப்பேசி சேவை நிறுவனமாக ஜியோ உருவெடுத்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இந்தியாவில் தொலைதொடர்பு சேவையை பெரிதும் பாதிக்கும். ஏற்கனவே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சேவைகளுக்கு இது மேலும் ஒரு பலத்த அடியாக இருக்கும்.

அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் முக்கிய போட்டியாளர்கள் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகும்.

இந்த தீர்ப்பின் மூலம் உரிமக் கட்டணமாக மட்டும் வோடஃபோன் ஐடியா நிறுவனம் சுமார் 28,300 கோடி இந்திய ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டும். ஏர்டெல் நிறுவனம் சுமார் 21,700 கோடி இந்திய ரூபாய் செலுத்த வேண்டும்.

ரிலையன்ஸ் ஜியோவின் வளர்ச்சி

ரிலையன்ஸ் ஜியோ தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கும் குறைவான காலமே ஆகிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பிரிட்டனை சேர்ந்த நிறுவனமான வோடஃபோன் மற்றும் இந்திய நிறுவனமான ஐடியா ஆகியவற்றின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் என தொலைத்தொடர்பு ஆய்வாளர் மினாக்ஷி கோஷ் தெரிவித்துள்ளார்.

பிபிசியிடம் பேசிய அவர், "ஏர்டெல் நிறுவனம் நெருக்கடிக்கு உள்ளானாலும், அது சமாளித்துவிடும். வோடஃபோன்தான் அதிகம் கவலை கொள்ள வேண்டும்," என்றார்.

"இதன்மூலம் வோடஃபோன் பலத்த அடிவாங்கும். இறுதியில் ஏர்டெல் மற்றும் ஜியோ மட்டுமே சந்தையில் இருக்கும் நிலை ஏற்படும். ஆனால் அது நல்லது இல்லை," என்கிறார் அவர்.

இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்கு அமைப்பு நவம்பர் மாதம் ஜியோவில் 5.6 மில்லியன் (56 லட்சம்) வாடிக்கையாளர்கள் சேர்ந்த்தாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி தற்போது மொத்தம் 370மில்லியன் பயன்பாட்டாளர்கள் உள்ளனர் மொத்த வாடிக்கையாளர்களின் 32% சதவீதமாகும்.

சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நுழைந்த பிறகு அதன் போட்டியாளர்களாக இருந்த வோடஃபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்கள் சேவைகளை ஒன்றாக இணைக்கும் நிலை ஏற்பட்டது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :