அதிபர் டிரம்ப் பதவி நீக்க நடவடிக்கை: விசாரணைக்கு தயாராகும் செனட் சபை மற்றும் பிற செய்திகள்

அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவி நீக்க நடவடிக்கைகாக அமெரிக்க செனட் சபையினர் 100 பேர் நீதிக்குழு உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் முன்பு "பாரபட்சம் இல்லாத நீதியை" வழங்குவோம் என்று செனட் உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் பெற்ற டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் செனட் சபையின் அனுமதியை பெற வேண்டும்.

இதற்கான விசாரணை ஜனவரி 21ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.

மூன்றில் இரண்டு பங்கு செனட்டர்களின் பெருன்பான்மை இருந்தால்தான் அதிபரை பதவி நீக்கம் செய்ய முடியும்.

அதற்கு பெரும்பான்மையாக டிரம்பின் கட்சியினரே அவருக்கு எதிராக திரும்ப வேண்டும்.

தீவிரவாதிகளுடன் பிடிபட்ட போலீஸ் அதிகாரி - அவிழும் முடிச்சுகள்

காஷ்மீரில் தேடப்படும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீர் காவல்துறை அதிகாரியான 57 வயதான தேவிந்தர் சிங் ரெய்னாவை விரைவில் தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை ஏற்கனவே பல்வேறு வழக்குகளை விசாரித்து வரும் நிலையில், தீவிரவாதிகளுடன் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் இணக்கமாக செயல்படுவதன் பின்னணி குறித்து அறிவது சவால்மிக்க பணியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

தற்போது சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ள காஷ்மீரின் மூத்த காவல்துறை அதிகாரி தேவிந்தர் சிங், பணம் மீது கொண்டிருந்த பேராசை காரணமாக போதை மருந்து கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கார் திருட்டு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்ததாகவும், அதைத்தொடர்ந்து பெரும் பணத்திற்காக தீவிரவாதிகளுக்கு உதவும் வேலையிலும் அவர் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

'ரஜினியை நேரில் சந்தித்தால் அவரின் உயரிய பண்புகள் தெரியவரும்'

நடிகர் ரஜினிகாந்தை விமர்சிப்பவர்கள் அவரை ஒருமுறை நேரடியாக சந்தித்து பேசினால் அவரின் உயரிய பண்புகள் தெரியவரும் என இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தனது தனிப்பட்ட சந்திப்பை பத்திரிகையாளர்களே அரசியல் சந்திப்பு போல ஆக்கினார்கள் என்றும், தற்போது எந்தப் பதவியிலும் இல்லாத தாம் ஏதோ பெரிய தவறை செய்ததுபோல பேசப்படுவது விந்தையாக இருக்கிறது என்றும் விக்னேஸ்வரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நாராயணசாமியின் சவாலும், கிரண் பேடியின் பதில் சவாலும்

புதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு, முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அவரது மகன் மீது துணை நிலை ஆளுநர் கிரண் பேடியிடம் அளித்த ஊழல் புகாரை, கிரண் பேடி பத்திரிகைச் செய்தியாக வெளியிட்டது, புதுவை முதல்வர் மற்றும் ஆளுநருக்கு இடையே இருக்கும் கசப்பான உறவை மேலும் கசப்பாக்கியுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வாய்மொழியாகத் தெரிவித்த புகாரை நிரூபிக்க முடியாவிட்டால் கிரண் பேடி பொது வாழ்வில் இருந்து விலக வேண்டும் என நாராயணசாமியும், அவருக்கு பதிலடியாக சொந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினரிடம் சவால் விடுங்கள் என்று கிரண் பேடியும் கூறியுள்ளனர்.

தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு என்ன?

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு போதுமான இடங்களை ஒதுக்கவில்லையென அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை விட்டதையடுத்து, இரு கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் எதிரும் புதிருமாகப் பேசிவருகின்றனர்.

காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் வாக்கு வங்கியே கிடையாது என்கிறது தி.மு.க தரப்பு. அது எந்த அளவுக்கு உண்மை?

கடந்த சில ஆண்டுகளில், காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் இரண்டு முறையே தனித்துப் போட்டியிட்டிருக்கிறது. முதலாவதாக 2011ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்; இரண்டாவதாக, 2014ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: