வோடஃபோன்: பெரும் நஷ்டத்தில் நிறுவனம் - இந்தியாவில் நிலைக்குமா வர்த்தகம்?

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் இந்தியா, தனது இரண்டாவது காலாண்டில் 510 பில்லியன் ரூபாய் இழப்பை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த இழப்பால் வோடோஃபோன் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுமா என்ற அச்சமும் நிலவுகிறது. இது தொழில்துறையின் நிலை குறித்த அச்சத்தை மேலும் அதிகரிக்கிறது.

இது குறித்து பொருளாதார நிபுணர் விவேக் கவுல் விவரிக்கிறார்.

பெரிய அளவிலான தொலைத்தொடர்பு நிறுவங்களின் சந்தையில் இழப்பு ஏற்பட என்ன காரணம் ?

ஒரு பில்லியனுக்கும் அதிகமான மொபைல் சந்தாதாரர்களைக் கொண்ட இந்தியா, உலகின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு சந்தைகளில் ஒன்றாக விளங்குகிறது.

இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஆரம்பகட்டத்தில் தொலைப்பேசி அழைப்புகளுக்கான கட்டணம் தொடந்து குறைந்து வந்தாலும், மொபைல் டேட்டாவின் விலை அதிகரித்தபடியே இருந்தது. ஆனால் ரிலையன்ஸ் ஜியோ சந்தையில் விற்பனைக்கு வந்த பின்னர் இந்த நிலை முற்றிலும் மாறியது. மொபைல் டேட்டா விலையை குறைப்பதன் மூலம் மட்டுமே இந்த சந்தையில் நிலைபெற முடியும் என்பதால், பல நிறுவனங்கள் மொபைல் டேட்டா விலையை குறைத்தன. இதன் விளைவாக உலகின் மலிவான மொபைல் டேட்டா இந்தியாவில் உருவானது.

இதனால் சந்தையில் ஏற்கனவே நல்ல விற்பனையில் உள்ள தொலைத்தொடர்பு சேவைகளுக்கு அழுத்தம் ஏற்பட்டது. விற்பனையில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சமமான நிலையில் அனைத்து தொலை தொடர்ப்பு நிறுவனங்களும் போட்டியிட விரும்பி, மொபைல் டேட்டா விலையை குறைத்து மிக குறைந்த லாபத்தை மட்டுமே பெற்றனர். இன்னும் சில நிறுவனங்கள் பெரும் இழப்புகளை சந்திக்க நேர்ந்தது.

இரண்டாம் காரணம், தொலைத்தொடர்ப்பு நிறுவனங்களுக்கு உள்ள முக்கிய நெருக்கடி என்னவென்றால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஈட்டும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அரசாங்கத்தின் தொலைத்தொடர்புத் துறையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் இதற்கு கடந்த 2005ம் ஆண்டில் இருந்தே அரசாங்கம் மற்றும் தொலைத்தொடர்ப்பு நிறுவனங்களுக்கு மத்தியில் சுமூக நிலை ஏற்படவில்லை.

தொலைத்தொடர்ப்பு வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்படும் வருவாயை மட்டுமே கணக்கிட வேண்டும் என நிறுவனங்கள் விரும்புகின்றன. ஆனால் தொலைத்தொடர்பு அல்லாத சொத்துக்கள் மற்றும் விற்பனை வைப்புத்தொகைகளின் மூலம் ஈட்டப்படும் வட்டி உள்ளிட்ட பரந்து விரிந்த வரையறையை கணக்கிட்டு வரி விதிக்க அரசாங்கம் விரும்புகிறது.

ஆனால் சமீபத்தில் அரசாங்கத்திற்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு 900 பில்லியன் ரூபாய் செலுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வோடஃபோன் இந்தியாவின் பங்கு மதிப்பு 390 பில்லியன் ரூபாய் ஆகும்.

இதன்மூலம் நஷ்டம் மேலும் அதிகரிக்கிறது.

உண்மையில் வோடபோன் இந்தியாவைவிட்டு வெளியேறுமா ?

இவ்வளவு பணம் எங்கிருந்து வரப்போகிறது.. இதுவே அனைத்து தொலைத்தொடர்ப்பு நிறுவனங்களும் கேட்கும் கேள்வி.

இந்தியாவில் இயங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் அதிக வரி மற்றும் கட்டணங்களை குறைக்காவிட்டால், வோடஃபோன் நிறுவனம் இந்தியாவில் செயல்படுவது சந்தேகமே என வோடஃபோனின் தலைமை நிர்வாகி நிக் ரீட் எச்சரித்துள்ளார்.

வோடஃபோன்-ஐடியா கூட்டாக செயல்பட்டு தொலைத்தொடர்பு சந்தையில் சுமார் 29% வருவாயை ஈட்டுகிறது.

"ஏற்கனவே இந்தியாவில் உள்ள மிகுந்த கட்டுபாடுகள் மற்றும் அதிகரிக்கப்பட்ட வரியால் நிதி நெருக்கடிகள் உள்ள நிலையில், தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பும் எங்களுக்கு சாதகமாக வரவில்லை." என செவ்வாய்கிழமை அன்று நிக் ரீட் தெரிவித்துள்ளார். பிறகு அடுத்த நாளே இந்திய அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டு, இந்திய நாட்டில் இருந்து வர்த்தகத்தை முறித்துக்கொள்ளும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் நிக் ரீட் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த மன்னிப்பை விட பெரிய பிரச்சனை என்னவென்றால், வோடஃபோன் நிறுவனம் அவர்களின் இந்திய முதலீட்டை பூஜியத்தில் வைத்துள்ளது. மேலும் வோடஃபோன் அல்லது வோடஃபோன்-ஐடியா நிறுவனத்தின் தலைவரான ஆதித்யா ப்ரில்லா குழுமம் புதிய முதலீட்டை கொண்டுவர ஆர்வம் காட்டவில்லை.

எனவே நிறுவனத்தின் உரிமையாளர்கள் தங்கள் நிலைப்பாடை மாற்றி இந்தியாவில் அதிக முதலீட்டுகளை கொண்டுவரவில்லை என்றால், வோடபோன் நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

இதனால் வர்த்தகத்திற்கு என்ன பாதிப்பு ?

வோடஃபோன் போன்ற பெரிய நிறுவனம் இந்தியாவை விட்டு வெளியேறுமானால், அது இந்தியா குறித்து நல்ல பிம்பத்தை பிரதிபலிக்காது.

சமீபத்தில் வெளிவந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு மட்டும் இதற்கு காரணம் அல்ல. கடந்த பத்து ஆண்டுகளாகவே வோடஃபோன் நிறுவனத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே வரி விதிப்பு தொடர்பாக முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன.

எனவே வோடஃபோன் நிறுவனம் இந்தியாவைவிட்டு வெளியேறினால் மற்ற முதலீட்டாளர்கள் இந்தியாவை தேர்ந்தெடுக்க தயங்குவார்கள்.

வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு உள்ளதா?

உடனடியான பாதிப்பு இருக்காது. வோடஃபோன் இந்தியாவை விட்டு வெளியேறாவிட்டாலும், வரும் காலங்களில்மொபைல் டேட்டாவின் விலை அதிகரிக்கும். ஆனால் விலை அதிகரிப்பதும் பெரிய பாதிப்பு இல்லை - உண்மையில் நல்ல விஷயமாக இருக்கும், ஏனென்றால் சந்தையில் போட்டி நிலவ விலை உயர்வே ஒரே வழியாகும்.

உண்மை என்னவென்றால், வோடஃபோன் வெளியேறினால், அடிப்படையில் இரண்டு பெரிய தொலைத்தொடர்ப்பு நிறுவனங்கள் மட்டுமே சந்தையில் நிலைத்திருப்பார்கள், எந்த விற்பனை தளத்திலும் இரண்டு நிறுவனங்கள் மட்டும் போட்டியிடுவது, ஆரோக்கியமான வர்த்தகமாக இருக்காது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :