ஆக்ஷன்: சினிமா விமர்சனம்

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

நகைச்சுவை நிரம்பிய, கலகலப்பான திரைப்படங்களுக்குப் பெயர்போன சுந்தர். சி. இந்த முறை விஷாலுடன் இணைந்து ஒரு ஆக்ஷன் கதையை முயற்சித்திருக்கிறார்.

தேசிய அரசியல் தலைவர் ஒருவர் தமிழ்நாட்டில் கொல்லப்படுகிறார். அதில், முதலமைச்சருடைய (பழ. கருப்பைய்யா) மூத்த மகன் (ராம்கி) குற்றம்சாட்டப்படுகிறார். பிறகு அவர் தற்கொலையும் செய்துகொள்கிறார். தேசியத் தலைவரின் கொலைக்குப் பின்னால் இருப்பது உண்மையிலேயே யார் என்பதை முதல்வரின் இளைய மகன் (விஷால்), பல நாடுகளுக்குப் பயணம் செய்து கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் போல ஒரு நீண்ட சண்டைக் காட்சியுடன் படம் துவங்குகிறது. அதற்குப் பிறகு, அந்த சண்டை எதற்காக என ஃப்ளாஷ் பேக்கில் சொல்கிறார்கள். அந்த ஃப்ளாஷ் பேக் முடிவதற்குள் முதலில் நடந்த சண்டையே மறந்துவிடுகிறது. பிறகு, 'ரீ-கேப்' போட்டு மீண்டும் கதை தொடர்கிறது.

இஸ்தான்புல், லண்டன், பாகிஸ்தான் என பல நாடுகளில் துரத்தல், சண்டை என முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளை மட்டுமே நம்பி உருவாக்கப்பட்டிருக்கும் படம். ஆனால், இந்த சண்டைக் காட்சிகளை இணைக்க எழுதப்பட்டிருக்கும் கதை மிக பலவீனமாக இருப்பதால் மொத்தமாகவே ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது படம்.

பிரதமராக வரவிருப்பவர் கொல்லப்பட்ட விவகாரத்தை, ராணுவத்தில் கர்னலாக இருக்கும் ஒருவர் தனிப்பட்ட முறையில் விசாரிக்கட்டும் என்று சாதாரணமாக விட்டுவிடுவதெல்லாம் சற்று ஓவராகத்தான் இருக்கிறது. அவரும் பல நாடுகளுக்குப் போய், பல நாட்டுக் கம்ப்யூட்டர்களை சர்வசாதாரணமாக ஹேக் செய்து, வில்லன்களை சர்வசாதாரணமாக தூக்கி வருகிறார், பிறகு கொல்கிறார்.

துவக்கத்திலிருந்தே நம்ப முடியாத காட்சிகள், திரைக்கதையுடன் படம் நகர்வதால், ஒரு கட்டத்தில் ஏதோ நடக்கட்டும் என்ற மனநிலையை ஏற்படுத்துகிறது படம்.

ஓடுவது, சுடுவது, பறப்பது, சண்டை போடுவது என விஷாலின் ஆக்ஷன் படங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்திருக்கிறது. தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி என இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள். முதல் பாதியில் ஒருவரும் பிற்பாதியில் ஒருவரும் வந்தாலும் பெரிதாக ஈர்க்கவில்லை. தமன்னா சற்று கூடுதல் நேரம் வந்து, சண்டைகளும் போடுகிறார்.

சுந்தர். சி. எந்த பாணியில் படம் எடுத்தாலும் அதில் நகைச்சுவைக் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் இந்தப் படத்தில் அந்த பகுதி சுத்தமாக இல்லை. யோகி பாபு வரும் இரண்டு காட்சிகளில் சற்று சிரிக்க வைக்கிறார். ஷா ரா படம் நெடுக நகைச்சுவைக்கு முயற்சித்தாலும் அது சரியாக வரவில்லை.

இந்தப் படத்தின் பலம் ஆக்ஷன் காட்சிகள்தான். அவை பல இடங்களில் நன்றாக வந்திருக்கின்றன. கட்டடங்களின் மீது மோட்டர் பைக் ஓட்டுவது, இஸ்தான்புல்லில் கட்டங்களுக்கு இடையே தாவுவது என பல ஆக்ஷன் காட்சிகள் ஜேம்ஸ் பாண்ட் படங்களை நினைவுபடுத்துகின்றன.

ஹிப்ஹாப் தமிழாவின் இசையில் பாடல்கள் ஏதும் மனதில் பதியவில்லை.

ஹாலிவுட்டில் வெளிவரும் ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் போன்ற ஆக்ஷன் திரைப்படங்களில் பெரிதாக கதை என்று ஏதுவுமே இருக்காது. ஆனால், மெல்லிய சரடு ஒன்று அந்த ஆக்ஷன் காட்சிகளை இணைக்கும். இந்தப் படத்தில் பெரிய கதையே இருந்தாலும், எதுவுமே நம்பும்படி இல்லை என்பதுதான் சிக்கல்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :