Dr. Bomb: பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி மாயம்

இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா : Dr. Bomb: பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி மாயம்

இந்தியாவில் பல வெடிகுண்டு சம்பவங்களை நிகழ்த்தியதில் பங்காற்றியதாக கூறப்படும் மற்றும் 1993 ராஜஸ்தான் வெடிகுண்டு சம்பவத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் டாக்டர் ஜலீஸ் அன்சாரி; இவர் ’Dr. Bomb’ என்று பலராலும் அறியப்படுகிறார்.

அவருக்கு வழங்கப்பட்ட 21 நாள் பரோல் காலம் முடியவுள்ள ஒரு நாள் முன்பு அவர் மும்பை வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மகாராஷ்டிராவின் தீவிரவாத தடுப்புப்பிரிவு, குற்றப்பிரிவு மற்றும் மும்பை போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜ்தானி எக்ஸிபிரஸில் வெடிகுண்டு வைத்தது தொடர்பான குற்றச்சாட்டில் 1994ஆம் ஆண்டு சிபிஐ-ஆல் ஜலீஸ் அன்சாரி கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட வெடிகுண்டு சம்பங்களில் இவருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. 1993ஆம் ஆண்டு ராஜஸ்தானில் ரயில்களில் ஆறு இடங்களில் வெடிகுண்டு வெடிக்க செய்ததற்காக இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு ஆஜ்மீர் சிறையில் இருந்து வந்தார். தற்போது அவருக்கு வயது 69.

இந்நிலையில் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பதற்காக ஜலீஸ் பரோலில் வந்துள்ளார். மும்பையில் உள்ள மொமின்புரா பகுதியில் உள்ள அவரது மனைவி மற்றும் ஏழு பிள்ளைகளோடு தங்கியிருந்தார்.

பரோல் முடியும் ஒரு நாள் முன்பு காலையில் வெளியே சென்ற ஜலீஸ், வீட்டிற்கு திரும்பவில்லை என்று அவரது மனைவி காவல்துறையில் புகார் அளிக்க, அவரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி: "இந்தியப் பெருங்கடலில் சீனாவின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்"

'இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சீனாவின் நடமாட்டம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது; இதனை மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்' என்று இந்திய கடற்படை தளபதி கரம்வீர் சிங் தெரிவித்துள்ளதாக கூறுகிறது தினமணி நாளிதழ் செய்தி.

தில்லியில் நடைபெற்ற சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான 'ரெய்சினா பேச்சுவார்த்தை' மாநாட்டில் கலந்து கொண்ட கரம்வீர் சிங், இதுகுறித்து மேலும் கூறுகையில், "சீன ராணுவத்துக்குச் சொந்தமான கடற்படை கப்பல்கள் இந்தியாவின் பிரேத்யேக பொருளாதார மண்டலங்களுக்குள் ஊடுருவும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இது, இந்தியாவின் நலன்களுக்கு ஊறுவிளைவிப்பதாக அமையும் என்பதை நாங்கள் ஏற்கனவே அவர்களிடம் தெரிவித்துள்ளோம்.

இதேபோன்றதொரு ஊடுருவல் சம்பவம், மிக அண்மையில் நடைபெற்றது. இதற்கு இந்திய கடற்படை சார்பில் எதிர்வினையாற்றியதையடுத்து, சீனப் படையினர் அதனை மதித்து பின்வாங்கிச் சென்றனர்.

சீனாவின் பொருளாதார வழித்தடம், இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.

இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் சீன ராணுவத்தின் ஊடுருவல் என்பது சமீபகாலமாக மிகவும் அதிகரித்தே காணப்படுகிறது. இந்திய கடற்படை சார்பில் தீவிர ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிலைமை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்திய பெருங்கடல் பகுதிகளில் சீன ராணுவம் அனுமதியின்றி அத்துமீறி பிரவேசிப்பது கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கியது. அதற்கு முன்னர் இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் அரிதானதாகவே காணப்பட்டது. ஆனால் தற்போது, சீன ராணுவத்துக்கு சொந்தமான 7-8 போர்க்கப்பல்களை எப்போதும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் நாம் காணலாம்.

இந்திய கடற்படையைப் பொருத்தவரையில் சீன கப்பல்கள் மட்டுமின்றி இதர நாட்டு கப்பல்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதிலும் விழிப்புணா்வுடன் செயலாற்றி வருகிறது. தேச நலனுக்கு பாதிப்பு வரும்போது உடனடி பதிலடி தர இந்திய கடற்படை எப்போதுமே தயாராக உள்ளது" என்றார்

தினமலர்: நீண்ட கூந்தல் - குஜராத் மாணவி கின்னஸ் சாதனை

குஜராத் மாணவி ஒருவர் நீண்ட கூந்தலை வளர்த்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் மோட்சா பகுதியை சேர்ந்த நிலன்ஷி படேல் டீன் ஏஜ் பிரிவில் நீண்ட கூந்தல் வளர்த்து சாதனை படைத்துள்ளார்.

இவர் கடந்த 2018 ம் ஆண்டில் 170செ.மீ அளவிற்கு கூந்தல் வளர்த்து ஏற்கனவே கின்னஸ் சாதனை படைத்தார். தற்போது இவரே 190 செ.மீ அளவிற்கு கூந்தலை வளர்த்து புதிய சாதனை படைத்துள்ளார். இவர் சாதனையை இவரே முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த ஏபிரில் என்பவர் 152.5 செ.மீ அளவிற்கு தலைமுடி வளர்த்து சாதனை படைத்தார். மேலும் கெயிட்டோ என்பவர் 155.5 செ.மீ நீளம் முடி வளர்த்து சாதனை படைத்திருந்தார். இந்த இருவரின் சாதனையை கடந்த 2018 ல் நிலன்ஷி முறியடித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :