அன்பழகன்: அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்றதாக சர்ச்சை - மூத்த பத்திரிகையாளர் கைதின் பின்னணி

அன்பழகன்

பட மூலாதாரம், FACEBOOK

படக்குறிப்பு, அன்பழகன்

சென்னையில் நடைபெற்று வரும் புத்தக் கண்காட்சியில் அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்றதாக ஏற்பட்ட சர்ச்சையில் மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆண்டுதோறும் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சி ஜனவரி 9ஆம் தேதி தொடங்கியது.

இதில் மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் மக்கள் செய்தி மையம் என்ற அவரது அரங்கத்தில் தனது புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தார்.

இந்நிலையில், அவரது அரங்கத்தில் அரசுக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக சர்ச்சைக்குரிய புத்தகங்கள் விற்பனை செய்யப்படுவதாக புத்தக கண்காட்சியை நடத்தும் தென் இந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) அன்பழகனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அந்த நோட்டீஸில் பபாசியின் விதிகளுக்கு எதிராக அவரது அரங்கத்தில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுவதால், புத்தகக் காட்சியில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்படுகிறது என்றும் அவரது அரங்கத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டது.

மூத்த பத்திரிகையாளர் கைது

இந்நிலையில், கடையை அகற்ற மறுத்து அதிகாரிகளை தாக்கியதாக பபாசி தரப்பில் அன்பழகன் மீது சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அன்பழகனை போலீஸார் ஜனவரி 12ஆம் தேதி அதிகாலை கைது செய்தனர்.

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை வரும் 24ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாரதி தமிழன் கூறுகையில், "அரசாங்கத்திடம் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகவே போலீஸார் அன்பழகனை கைது செய்துள்ளனர். அரசுக்கு எதிராக புத்தகங்கள் விற்பனை செய்யக்கூடாது என்று கூறுவது எங்கள் பேச்சுரிமைக்கு எதிராக உள்ளது" என்று தெரிவித்தார்.

ஆனால், பபாசியின் புத்தக கண்காட்சிக்கான விதிமுறைகளை பார்க்கும்போது, அரசுக்கு எதிரான புத்தகங்களை விற்பனை செய்யக் கூடாது என்ற விதிமுறையும் குறிப்பிடப்படவில்லை.

முக ஸ்டாலின் கண்டனம்

பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரை உடனடியாக விடுவித்து, புத்தக கண்காட்சியில் அவருக்கு உரிய அனுமதியை வழங்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

ஆளுக்கட்சிக்கு எதிரான கருத்துடைய புத்தகங்கள் இருந்ததுதான் இந்த கைதுக்கான பின்னணி என சொல்லப்படும் செய்திகள் மிகுந்த கவலையளிக்கிறது என்றும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் இதுபோன்ற செயல்களை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: