ஜே.என்.யு வன்முறை: காயம்பட்ட மாணவர் தலைவி ஒய்ஷி கோஷ் மீது வழக்குப் பதிந்தது ஏன்?

பட மூலாதாரம், ANI
ஜே.என்.யு சம்பவம் தொடர்பாக மாணவர் சங்க தலைவர் ஒய்ஷி கோஷ் மற்றும் பிற மாணவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன; இருப்பினும் இது ஞாயிறன்று நடைபெற்ற வன்முறை தொடர்பாக இல்லை என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
"இந்த முதல் தகவல் அறிக்கை ஞாயிறன்று நடைபெற்ற வன்முறையுடன் தொடர்புடையது அல்ல. ஜே.என்.யு நிர்வாகத்தால் ஜனவரி 3ஆம் தேதியன்று இவர்கள் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு ஒய்ஷி கோஷ் உட்பட பல மாணவர்கள் மீது ஜனவரி 4ம் தேதியன்று முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது," என்று டெல்லி தென் மேற்கு மாவட்ட துணை காவல் கண்கணிப்பாளர் தேவேந்திர ஆர்யா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது சூழல் போலீசின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை ஞாயிறு சம்பவம் தொடர்பாக ஒரே ஒரு தகவல் அறிக்கை மட்டும்தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தேவேந்திர ஆர்யா தெரிவிக்கிறார்.
ஊடகங்களில் பேசப்பட்டு கொண்டிருக்கும் இரண்டு முதல் தகவல் அறிக்கைகள் ஜனவரி 3 மற்றும் 4ஆம் தேதிகளில் பதியப்பட்டது என அவர் தெரிவிக்கிறார். ஜே.என்.யு. சர்வரை சேதம் செய்ததாக புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
டெல்லி போலீஸின் குற்றப்பிரிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வன்முறை குறித்து விசாரித்து வருகிறது. அது தொடர்பான தகவல்கள் விரைவில் பகிரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஞாயிறன்று ஜே.என்.யு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற வன்முறையில் ஒய்ஷி கோஷ் தலையில் பலமாக தாக்கப்பட்டார்.
அந்த தாக்குதலில் கோஷ் உட்பட 34 பேர் காயமடைந்தனர்.
தற்போதுவரை ஞாயிற்றுக்கிழமை வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என அடையாளம் காணப்படவில்லை.
`வன்முறை தீர்வாகாது`
"ஞாயிறன்று நடைபெற்ற சம்பவம் துர்தஷ்டவசமானது. எங்களது வளாகம் எந்த ஒரு பிரச்சனையையும் தீர்க்கும் விவாதங்கள் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களுக்கு பெயர் போனது. வன்முறை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது. பல்கலைக்கழகத்திற்குள் இயல்பு நிலை திரும்ப அனைத்து முயற்சியையும் மேற்கொண்டு வருகிறோம்," என ஜே.என்.யு துணை வேந்தர் ஜகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












