You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜே.என்.யு. வன்முறை: "ஆர்எஸ்எஸ், ஏபிவிபி அமைப்புகளை சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல் இது"
"நேற்று நடைபெற்ற தாக்குதல் ஆர்எஸ்எஸ் மற்றும் ஏபிவிபியை சேர்ந்த குண்டர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று. கடந்த 4-5 நாட்களில் பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் ஏபிவிபியை சேர்ந்த பேராசிரியர்களால் வன்முறைகள் நடத்தப்பட்டு வந்தன," என தாக்குதலுக்கு உள்ளான ஜே.என்.யுவின் மாணவர் சங்க தலைவி ஒய்ஷி கோஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்த வன்முறையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பல்கலைக்கழக துணை வேந்தரை உடனடியாக நீக்க வேண்டும்," என ஒய்ஷி கோஷ் தெரிவித்துள்ளார்.
"மாணவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு இரும்பு கம்பிகளுக்கும் பதிலடியாக விவாதங்களும், கூட்டங்களும் நடத்தப்படும். ஜே.என்.யுவின் கலாசாரம் அவ்வளவு சீக்கிரத்தில் அழிந்துவிடாது. ஜே.என்.யுவின் ஜனநாயக கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும்." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
துணை வேந்தரை பதவி நீக்க ஆசிரியர்கள் கோரிக்கை
ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முகமூடிக் கும்பல் நடத்திய தாக்குலை ஒட்டி, பல்கலைக்கழகத் துணை வேந்தரை பதவி நீக்கவேண்டும் என்று ஜே.என்.யு. பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர்களும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது அவர்கள் கட்டண உயர்வுக்கு எதிராகவும், நேற்று நடைபெற்ற தாக்குதலுக்கு எதிராகவும் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
முன்னதாக தாக்குதல் நடைபெற்ற ஜே.என்.யு சபர்மதி விடுதியின் வார்டன், ஆர்.மீனா அந்த பொறுப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார் மேலும், "நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால் எங்களால் விடுதி மாணவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியவில்லை," என அவர் தமது விலகல் கடிததத்தில் தெரிவித்துள்ளார்.
`எதிர்க்கட்சிகள் யோசித்து பேச வேண்டும்`
"அனைத்து மாணவ அமைப்புகள் மற்றும் குழுக்கள் ஜேஎன்யு வளாகத்தில் அமைதி காக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். இம்மாதிரியான சூழலில் எதிர்க்கட்சிகள் தாங்கள் பேசுவதை யோசித்து பேச வேண்டும். குற்றச்சாட்டுகளும், பதில் குற்றச்சாட்டுகளும் பிரச்சனைக்கு தீர்வாகாது." என மனித வள மேம்பாட்டுத் துறையின் இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் கண்டனம்
"ஜே.என்.யுவில் நடத்தப்பட்ட தாக்குதல் நாம் மெல்ல மெல்ல அராஜகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்பதற்கான எடுத்துக்காட்டு. இந்தியாவின் முக்கிய பல்கலைக்கழகத்தில் மத்திய அரசு, உள்துறை அமைச்சர் மற்றும் காவல் ஆணையருக்கு தெரிந்தே இது நடைபெற்றுள்ளது. வன்முறையாளர்கள் 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட வேண்டும்," என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
துணை வேந்தருக்குபங்கு இருக்கிறது - யெச்சூரி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, "இது வெளியாட்களால் நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என்பது தெளிவாக தெரிகிறது. சுமார் 5 மணி நேரமாக போலீஸார் உள்ளே நுழைந்து இயல்பு நிலையை கொண்டு வர துணைவேந்தர் கோரவில்லை. இதன்மூலம் அவரும் இந்த தாக்குதலில் அவருக்கும் பங்கிருப்பது தெளிவாகத் தெரிகிறது." என்று தெரிவித்தார்.
முன்னதாக ஜேஎன்யுவின் துணை வேந்தர் ஜெகதீஷ் குமார், "இவ்வாறு மாணவர்கள் தாக்கப்பட்டது மிகுந்த வேதனையளிக்கிறது; பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த எவ்வித வன்முறை சம்பவங்களையும் ஜே.என்.யு நிர்வாகம் கண்டிக்கிறது," என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
மும்பை தாக்குதலை நினைவுபடுத்துகிறது: உத்தவ் தாக்கரே
ஜே.என்.யு சம்பவம் மும்பையில் நடந்த 26/11 பயங்கரவாதத் தாக்குதலை நினைவு படுத்துவதாக மகராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
என்ன சொல்கிறது பாஜக?
இந்த வன்முறையை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும், மங்கி வரும் தங்கள் அரசியல் வாழ்க்கையை மீட்டெடுக்க அராஜக சக்திகள் மாணவர்களை பகடைக்காய்களாக பயன்படுத்துகின்றனர் என்றும் பாஜக தெரிவித்துள்ளது.
பல்கலைக் கழகங்கள் கல்விக்கான இடமாக மட்டுமே இருக்க வேண்டும் எனவும் பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் "அதிர்ச்சியளிக்கிறது" என விவரித்து ஜே.என்.யு சம்பவம் தொடர்பாக அம்னெஸ்டி இன்டர்நேஷனல் டெல்லி போலீஸாரிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
என்ன நடந்தது?
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று முகமூடி அணிந்த மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தாக்கினர்.
இதனை கண்டித்து நாட்டின் பல இடங்களிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பலர் இந்த தாக்குதலுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
கோவையில் போராட்டம்
ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கோவையில் இன்று பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்திய மாணவர் சங்கம் சார்பில் கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தின் வாசலில் சுமார் 30 மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கேம்பஸ் ஃபரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ஆத்துப்பாலம் பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று மாலை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சுமார் 50 பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கோவையைச் சேர்ந்த ஜே.என்.யு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.
அனைத்து போராட்டங்களிலும் மத்திய அரசுக்கு எதிராகவும், அகில பாரத வித்யா பரிக்ஷத் அமைப்பினரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போலீஸார் கேட்டுக்கொண்டதையடுத்து போராட்டக்காரர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு கலைந்து சென்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: