கீழடி நாகரிகம்:‘’150 ஏக்கர் பரப்பளவில் ஆய்வு செய்தால் மருத்துவ வரலாறு மாறும்’’

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
இந்து தமிழ்: "கீழடி - மருத்துவ வரலாற்றை தமிழகத்தில் இருந்து எழுதலாம்"
கீழடியில் 150 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு செய்தால் மருத்துவ வரலாற்றைத் தமிழகத்திலிருந்து எழுத முடியும் என்று தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறு வனத்தின் இயக்குநர் மருத்துவர் ஆர்.மீனாகுமாரி தெரிவித்தார்.
அகத்தியர் பிறந்த மார்கழி திங்கள் ஆயில்ய நட்சத்திர நாள் (ஜனவரி 13-ம் தேதி) தேசிய சித்த மருத்துவ தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு 50 நாள் கொண்டாட்டம் கடந்த நவம்பர் 24-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாகத் தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் மற்றும் மருத்துவமனையில் சித்த மருத்துவத்தின் தொன்மையும் வரலாறும் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. மருத்துவர் ஆர்.மீனா குமாரி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், சித்த மருத்துவ அறிஞர்கள், மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த கருத்தரங்கில் மருத்துவர் ஆர்.மீனாகுமாரி பேசியதாவது:
பண்டைய காலத் தமிழர்கள் மருத்துவத்திலும் சிறந்து விளங்கினர். தமிழ் மொழியைப் போலவே தமிழ் மருத்துவமும் தொன்மையானது. செம்மையானது. மதுரை அருகே உள்ள கீழடியில் கிடைத்த ஆதாரங்களில் இடை நிலையில் கிடைத்தவற்றில் இரண்டை மட்டுமே கார்பன் பரி சோதனைக்கு அனுப்பியதில் அவை 2,200 ஆண்டுகளுக்கு முந்தையது என்ற உண்மை வெளிச் சத்துக்கு வந்துள்ளது.
வெறும் 50 சென்ட் அளவில் மட்டுமே அங்குத் தோண்டிப் பார்க்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் உள்ள 150 ஏக்கர் நிலப்பரப்பிலும் அகழாய்வு செய்தால் ஒரு மிகப் பெரிய தொல் நகரம் வெளிப்பட வாய்ப்புள்ளது.
அதில் சித்த மருத்துவத்துக்கான தொன்மை புலப்படுவ தோடு மருத்துவ வரலாற்றைத் தமிழகத்திலிருந்து எழுத வேண்டிய காலம் வரும்.
இவ்வாறு மருத்துவர் ஆர்.மீனா குமாரி பேசினார்.

தினமணி: ரஜினிகாந்த்: தர்பார் திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாகும? - புதிய சிக்கல்

பட மூலாதாரம், Lyca
சர்கார் படத்தையடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம்.
ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லன் - பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி.
தர்பார் படம் ஜனவரி 9 அன்று தமிழ், ஹிந்தி, தெலுங்கில் வெளிவரவுள்ளது.
இந்நிலையில் தர்பார் படத்துக்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
2.0 படத்தைத் தயாரிக்க ரூ. 12 கோடியை ஆண்டுக்கு 30% வட்டியுடன் கடனாகப் பெற்றது லைகா நிறுவனம். ஆனால், பணத்தைத் திருப்பித் தராததால் வட்டியுடன் சேர்த்து ரூ. 23.70 கோடி வழங்கும் வரை தர்பார் பட வெளியீட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மலேசிய நிறுவனம் டி.எம்.ஒய். கிரியேஷன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதையடுத்து ஜனவரி 2-ம் தேதிக்குள் பதில் அளிக்க லைகா நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தினத்தந்தி: டெல்லி பனி மூட்டம்: கார் கால்வாய்க்குள் பாய்ந்தது 6 பேர் பலி

பட மூலாதாரம், Getty Images
டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 530 விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. பனி மூட்டத்தினால் டெல்லி அருகே கார் கால்வாய்க்குள் பாய்ந்ததில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியானார்கள்.
வட மாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி எடுக்கிறது. பகலில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. டெல்லியில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று வரலாறு காணாத பனி மூட்டம் காணப்பட்டது. அருகில் நிற்பவர்களை கூட காண முடியாத அளவுக்கு பனி மூட்டம் அதிகமாக இருந்தது. டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 2.6 செல்சியசாக பதிவாகி இருந்தது. டெல்லியில் நேற்று கடும் பனி மூட்டத்தினால் வாகன மற்றும் ரெயில் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டது.
டெல்லி விமான நிலைய பகுதியில் நிலவிய கடும் பனி மூட்டம் காரணமாக விமான வருகை மற்றும் புறப்பாடு சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. நேற்று பகல் 11.30 மணிக்கு பிறகுதான் டெல்லி விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டன.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து 530 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. சுமார் 320 விமானங்கள் புறப்படுவதிலும், 210 விமானங்கள் வருகையிலும் தாமதம் ஏற்பட்டது. 20 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. மேலும் 4 விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லி விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள பனி மூட்டம் காரணமாக அனைத்து விமான நிறுவனங்களும் தங்களது பயணிகளை விமானங்கள் புறப்பாடு மற்றும் வருகை விவரங்களை முழுமையாக அறிந்து விமான நிலையத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொண்டன.
டெல்லியை அடுத்த நொய்டாவில் (உத்தரபிரதேச மாநிலம்) உள்ள தாங்கூரில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் சென்ற கார் கடும் பனி மூட்டம் காரணமாக கெர்லி என்ற கால்வாய்க்குள் பாய்ந்தது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று 11 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர். காயம் அடைந்த 5 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும்படி அவர் டாக்டர்களுக்கு உத்தரவிட்டார். பனி காலத்தில் மிகவும் கவனமாக சாலையில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என அவர் மக்களை கேட்டுக்கொண்டார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா: "இந்து மதம் பழிவாங்க சொல்லவில்லை, யோகி'' - பிரியங்கா காந்தி

பட மூலாதாரம், Getty Images
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கடும் விமர்சனங்களைக் கிழக்கு உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளது குறித்த செய்தியை 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளேடு' வெளியிட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்த போராட்டங்களில் வன்முறை ஏற்பட்ட நிலையில், ''பொது சொத்துக்களை நாசப்படுத்துபவர்கள் அதற்கான விலை தந்தே ஆக வேண்டும்'' என்று மாநில முதல்வர் யோகி கூறியதாக செய்திகள் வெளியாகின.
இதனை மேற்கோள் காட்டிய பிரியங்கா காந்தி, ''அரசு நிர்வாகம் பழி வாங்கும் என்று முதல்வர் யோகி கூறுகிறார். போலீசாரும், மாநில நிர்வாகமும் அவரின் வார்த்தைகளைப் பின்பற்றுகிறார்கள். மக்களைப் பழிவாங்குவோம் என்று முதல்வரே கூறுவது இதுதான் முதல்முறை'' என்று பிரியங்கா கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ''முதல்வர் யோகி அவர்களே! இந்து மதம் பழிவாங்கவோ, வன்முறை நடத்தவோ சொல்லித் தருவதில்லை'' என்றார்.
''முதல்வர் யோகி காவி நிற ஆடையை உடுத்துகிறார். அது அவருக்கு மட்டும் சொந்தமல்ல. இந்த நாட்டின் மத மற்றும் ஆன்மீக எண்ணங்களுடன் தொடர்புடையது காவி நிறம். இந்து மதத்தின் அடையாளமும் அது. இந்து மாதத்தில் வன்முறை மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைக்கு எந்த இடமும் இல்லை'' என்று அவர் மேலும் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












