ஃபரோஸ் கான்: பனாரஸ் இந்து பல்கலை. சமஸ்கிருத துறை முஸ்லிம் பேராசிரியர் ராஜிநாமா - நடந்தது என்ன?

பட மூலாதாரம், FIROZ KHAN
- எழுதியவர், சமீர் அத்மஜ் மிஸ்ரா
- பதவி, பிபிசி இந்திக்காக
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத அறிவியல் மற்றும் மதத்துறையில் உதவி பேராசிரியராக ஃபரோஸ் கான் நியமிக்கப்பட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து, தனது பதவியை ராஜிநாமா செய்து இந்த விவகாரத்திற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்தப் பதவியில் அவரை நியமித்தது தொடர்பாக பல நாட்களாக தொடர்ந்த சர்ச்சைகள் மற்றும் போராட்டங்களை அவரின் இந்த அறிவிப்பு முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. முனைவர் ஃபரோஸ் கானுக்கு ஆயுர்வேதத் துறையிலேயே தற்போதைய பதவிக்கு நிகரான பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டாரா இல்லையா என்பதை பல்கலைக்கழகத் தரப்பு உறுதிப்படுத்தவில்லை.
ஃபரோஸ் கானின் நியமனத்தை எதிர்த்து தர்ணாவில் அமர்ந்திருந்த மாணவர்களிடம் அவரது பதவி விலகல் குறித்து சமஸ்கிருத அறிவியல் மற்றும் மதத்துறைத் தலைவர் பேராசிரியர் கெளஷ்லேந்திர பாண்டே தெரிவித்தார். ஃபரோஸ் கான் ராஜிநாமா செய்த செய்தியை அவர் படித்துக் காட்டினார்.

பட மூலாதாரம், FIROZ KHAN
"உங்கள் உணர்வுகள் மற்றும் வேண்டுகோளின்படி, சமஸ்கிருத அறிவியல் மற்றும் மதத்துறையின் உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்ட முனைவர் ஃபரோஸ் கான், 2019 டிசம்பர் 9ஆம் தேதியன்று இலக்கியத் துறை உதவி பேராசிரியரிடம் தனது ராஜிநாமாவை சமர்ப்பித்தார் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, மாணவர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட வேண்டும். கற்றல், தேர்வு போன்றவற்றில் கவனம் செலுத்துமாறு மாணவர்களை கேட்டுக்கொள்கிறோம்" என்று பேராசிரியர் கெளஷ்லேந்திர பாண்டே தெரிவித்தார்.
முன்னதாக, திங்கட்கிழமை மாலையில் பதவி விலகல் கடிதத்தை தனது துறையின் பேராசிரியர்களின் முன்னிலையில் முனைவர் ஃபரோஸ் கான் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்தத் தகவல் தாமதமாகவே வெளியிடப்பட்டது.
இதைப் பற்றி பல்கலைக்கழக நிர்வாகத்திடமிருந்தோ ஃபரோஸ் கானிடமிருந்தோ தகவல் எதுவும் வெளிவரவில்லை. ஆனால், ஃபிரோஸ் கான் பதவி விலகல் கடிதத்தை கொடுத்துவிட்டதாகசமஸ்கிருத அறிவியல் மற்றும் மதத்துறைத் தலைவர் பேராசிரியர் கெளஷ்லேந்திர பாண்டே தெரிவித்தார். இது ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மாணவர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவர் சமஸ்கிருத அறிவியல் மற்றும் மதத்துறையில் துணை பேராசிரியராக நியமிக்கப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பிய மாணவர்கள் இந்த நியமனத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஏறக்குறைய ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், செமஸ்டர் தேர்வுகளை புறக்கணித்தனர். இதனால், செமஸ்டர் தேர்வுகள் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டன. தற்போது, செவ்வாய்க்கிழமை முதல் தேர்வுகள் நடத்தப்படவிருந்த நிலையில், மாணவர்களின் போராட்டம் தொடர்ந்ததால், அடுத்த அறிவிப்பு வரும் வரை இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டன. ஃபரோஸ் கான் ராஜிநாமா செய்த பின்னர், மாணவர்களின் தர்ணாவும் முடிவுக்கு வந்துள்ளது.

சமஸ்கிருத முனைவர் ஃபரோஸ் கான் ராஜிநாமா செய்த பின்னர், கலை பீடத் சமஸ்கிருத துறையில் உதவி பேராசிரியர் பதவியை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் தகவலை பல்கலைக்கழக நிர்வாகமோ அல்லது டாக்டர் ஃபரோஸ் கானோ உறுதிப்படுத்தவில்லை. ஆனால் சமீபத்தில், அவர் கலை பீடம் மற்றும் ஆயுர்வேதம் இரண்டிலும் சமஸ்கிருதத் துறையில் நியமிக்கப்பட்டார்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், கலைத் துறை, ஆயுர்வேதம், சமஸ்கிருத அறிவியல் மற்றும் மதத்துறை என மூன்று துறைகளில் சமஸ்கிருத மொழி கற்பிக்கப்படுகிறது. தர்ம சாஸ்திரத்தை கற்பிக்கும் சமஸ்கிருத அறிவியல் மற்றும் மதத்துறையில் தான் முனைவர் ஃபரோஸ் கான் நியமிக்கப்பட்டார். ஒரு முஸ்லீம் நபர் இந்து மதத்தைப் பற்றி எவ்வாறு கற்பிக்க முடியும் என்று மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஃபரோஸ் கான் கான் பதவி விலகிய செய்தி வெளியான பிறகு, மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. போராட்டத்தை முன்னிருந்து நடத்திய மாணவர்களில் ஒருவரான சக்ரபாணி ஓஜாவிடம் பேசினோம். "எங்களுக்கு முனைவர் ஃபரோஸ் கான் மீது எந்த வருத்தமோ, பிரச்சனையோ இல்லை. ஆனால், அவர் இந்தத் துறையில் ஏன் நியமிக்கப்பட்டார் என்பதில் தான் எங்களுக்கு கருத்து வேறுபாடு. இந்து மதத்தை சேராத ஒருவர் எப்படி இந்து மதத்தை கற்பிக்கும் துறையில் நியமிக்கப்பட்டார் என்பது தான் பிரச்சனை"
ஃபரோஸ் கான் கானின் நியமனம் விதிமுறைகளின்படியே இருந்தது எனவும், அவரது நியமனம் எந்தவொரு காரணத்திற்காகவும் ரத்து செய்யப்படாது என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் முன்னதாக தெளிவாகக் கூறியிருந்தது.
ஆனால், மாணவர்களின் தொடர்ச்சியான எதிர்ப்பினால், வேறு வழியின்றி பல்கலைக்கழக நிர்வாகம், பின்வாங்க வேண்டியிருந்தது. சமீபத்தில், ஆயுர்வேததுறையில் காலியிடங்கள் ஏற்பட்டதும், அதற்கு ஃபரோஸ் கான் விண்ணப்பித்தார். எனவே, ஃபிரோஸ் கான் இந்த பதவியில் நியமிக்கப்படுவார் என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












