You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை தமிழர்கள்: அமித்ஷா குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து பேசியது என்ன?
சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா திங்கள்கிழமை நள்ளிரவு மக்களவையில் நிறைவேறியது.
இந்த மசோதாவை அறிமுகம் செய்து பேசிய அமித்ஷா, "இது சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல, ஊடுருவல்காரர்களுக்கு எதிரானது" என்றார்.
"ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிகள் இந்தியாவின் சட்டத்தின்படி, குடியுரிமைக்கு விண்ணப்பித்தால், நாங்கள் அதை கருத்தில் கொள்வோம். ஆனால், மேற்குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் மதரீதியிலான துன்புறுத்தல்களை எதிர்கொள்ளாததால், இந்த சட்டத் திருத்தத்தின் வாயிலாக எந்த பலனையும் பெற முடியாது," என்றார்.
"காங்கிரஸ்தான் மதத்தின் பெயரால் நாட்டை பிரித்தது. அதனை சரி செய்யவே இந்த சட்ட மசோதா," என்றும் தெரிவித்தார்.
"ஏற்கெனவே வங்கதேச பிரிவினையின் போதும், உகாண்டாவில் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் தாக்கப்பட்ட போதும் சில சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அங்கிருந்து வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டு இருக்கிறது," என்று தெரிவித்தார் அமித்ஷா.
"இது .001 சதவீதம் கூட சிறுபான்மை மக்களுக்கு எதிரானது இல்லை. இது ஊடுருவல்காரர்களுக்கு எதிரானது," என்றார்.
இலங்கை தமிழர்கள்
அமித்ஷா, "இந்த நாட்டின் (இந்தியா) பிரிவினை மதத்தை அடிப்படையாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டது. அதனால்தான் மதத்தை அடிப்படையாக கொண்டு குடியுரிமை வழங்கப்படுகிறது," என்றார்.
மேலும் அவர், "ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளிலும் இஸ்லாமியர்கள் சிறுபான்மை இல்லை," என்றார்.
"இது அரசியல் நிலைப்பாடு அல்ல. இது மனிதநேயம் சம்பந்தப்பட்டது," என்றார்.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிபிஎம் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன், திமுகவை சேர்ந்த டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலர், "ஏன் இதில் இலங்கைத் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை?," எனக் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து பேசிய அமித்ஷா, "சாஸ்திரி-பண்டாரநாயகே ஒப்பந்தத்தின் போது, இலங்கை தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது," என்றார்.
மதசார்பின்மை குறித்த காங்கிரஸின் நிலைப்பாட்டைக் கேள்விக்கு உட்படுத்திய அமித்ஷா, "காங்கிரஸ் கேரளாவில் முஸ்லீம் லீக்குடன் கூட்டணியில் உள்ளது, சிவசேனையுடன் மகாராஷ்டிராவில் கூட்டணியில் உள்ளது." என்றார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: