மேற்கு வங்கத்தில் பூட்டப்பட்ட சட்டமன்ற கதவுகள் - காக்க வைக்கப்பட்ட ஆளுநர்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
காக்கவைக்கப்ட்ட ஆளுநர் - தினமணி
மேற்கு வங்க சட்டப்பேரவைக்குள் ஆளுநர் வரும் மூன்றாம் எண் நுழைவு வாயிலுக்கு பூட்டு போடப்பட்டது. இதனால் பேரவை வாயிலில் ஆளுநர் காத்திருந்தார். பிறகு பத்திரிக்கையாளர்கள் மற்றும் அதிகாரிகள் செல்லும் நான்காம் எண் நுழைவு வாயில் வழியாக பேரவை வளாகத்திற்குள் ஆளுநர் தன்கர் சென்றார் என்கிறது தினமணி செய்தி.
"இதனை திட்டமிட்டு செய்துள்ளனர். இது எனக்கு ஏற்பட்ட அவமானம் அல்ல, மேற்கு வங்க மக்களுக்கும் அரசியலமைப்புச் சட்டத்துக்குமான அவமதிப்பு. நமது நாட்டின் ஜனநாயகத்தின் அவமானத்துக்குறிய நாளாக இது அமைந்து விட்டது," என்று செய்தியாளர்களிடம் ஆளுநர் இதுகுறித்து தெரிவித்திருந்தார்.
"பேரவை வளாகத்திற்குள் உள்ள நூலகம் உள்ளிட்டவற்றை பார்வையிடுவதற்காக ஒரு நாள் முன்னதாகவே சட்டப் பேரவைத் தலைவருக்கு முறைப்படி தகவல் தெரிவித்தேன். ஆனால் சுமார் ஒன்றறை மணி நேரத்தில் தனக்கு வேறு பணி இருப்பதாக பேரவைத் தலைவர் தகவல் அனுப்பினார். அவரை சந்திக்க முடியவிட்டாலும் செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால் வேண்டுமென்றே ஆளுநருக்கான நுழைவு வாயிலுக்கு பூட்டு போட்டுள்ளனர்," என்றார்.
இந்த சம்பவத்தால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் ஆளுநர் ஜெகதீப் தன்கருக்கு இடையேயான மோதல் முற்றியுள்ளது. என்று விவரிக்கிறது தினமணியின் செய்தி .

ராகுல் காந்தியின் மேடை பேச்சை மொழி பெயர்த்த 12ம் வகுப்பு மாணவி - தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

பட மூலாதாரம், Getty Images
வயநாடில் ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, தன் உரையை துவங்கியபோது கூட்டத்தில் உள்ள மாணவர்களிடம் 'யாராவது என் உரையை மொழி பெயர்க்க முன்வருகிறீர்களா?' என கேள்வி எழுப்பினார். அப்போது 12ம் வகுப்பு மாணவி சபா ஃபெபின் முன்வந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் முழு மேடை பேச்சையும் மலையாளத்தில் மொழி பெயர்த்தார் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.
இந்த உரையில் அறிவியல், சமத்துவம் குறித்தும் அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கும் பள்ளிகள் குறித்தும் உரையாற்றினார் ராகுல் காந்தி.
உரையின் இறுதியில், மிக சிறந்த வகையில் மொழி பெயர்த்ததாக சபா ஃபெபினை பாராட்டி இனிப்பும் வழங்கினார் ராகுல் காந்தி.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களிலும் பெரியளவில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் தான் சுலபமாக மொழி பெயர்க்க ராகுல் காந்தி மிகவும் பொறுமையாக பேசி எனக்கு உதவினார் எனவும் சபா ஃபெபின் கூறியுள்ளார் என்று விவரிக்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு, போலி கடிதம் மூலம் வெடி குண்டு மிரட்டல் - தினகரன்

பட மூலாதாரம், Getty Images
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தெரிவிக்கிறது தினகரன் செய்தி . மிரட்டல் கடிதத்தில் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட வெடிகுண்டுகள் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை இரவு குண்டு வெடிக்கும் என குறிப்பிட்டிருந்தது. மேலும் பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக வாசகங்களும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து கோயில் நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் மூலம் கோயில் முழுவதும் நடத்திய சோதனையில், இந்த கடிதம் அளித்த தகவல் பொய்யானது என்பதை காவல் துறையினர் கண்டறிந்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள ஆஞ்ச நேயர் கோயிலுக்கு வந்த வெடிகுண்டு கடிதம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று விவரிக்கிறது தினகரன் செய்தி.
பிற செய்திகள்:
- ஹைதராபாத் பாலியல் வல்லுறவு: குற்றம்சாட்டப்பட்ட 4 நபர்கள் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொலை
- டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மான நடவடிக்கைகள் தொடங்குகின்றன - நான்சி பெலோசி
- உணவுத் தேடி கிராமத்திற்குள் நுழைந்த 56 பனிக்கரடிகள் - பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து
- தமிழக உள்ளாட்சித் தேர்தல் வழக்கு: நாளை காலை தீர்ப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












