தமிழகத்தில் பலத்த மழை: 2015 டிசம்பர் பெரு வெள்ளத்தை நினைவுகூர்ந்த வெதர்மேன்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே தினத்தில்தான் கனமழை பெய்து பெருவெள்ளம் வந்தது. தமிழக மக்கள் அந்நாட்களை சமூக ஊடகங்களில் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்ததது.

சென்னை மட்டும் அல்லாமல் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்திலும் கனமழை பெய்தது.

தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் தொடங்கி இரவு வரை நீடித்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நேற்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாபநாசம் படித்துறை மூழ்கியது.

தூத்துக்குடியில் பெய்த கனமழையால் ரயில்நிலையத்தில் தண்டவாளம் நீரில் மூழ்கியது.

தஞ்சை பகுதியில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

வெதர்மேன் சொல்வது என்ன?

இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்கிறார் வெதர்மேன் பிரதீப்.

தனது முகநூல் பதிவில் 2015ஆம் ஆண்டு மழையை நினைவுகூர்ந்துள்ள அவர் இன்று பெருமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார்.

2015 சென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன?

சென்னையில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே என்று இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான மையம் கூறியது.

கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழை நகரை முழுமையாகப் நிலைகுலையச் செய்துள்ளது என சென்டர் ஃபார் சயன்ஸ் அண்ட் என்விரோன்மெண்ட் அமைப்பின் தலைமை இயக்குநர் சுனிதா நரெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

இயற்கையான நீர்நிலைகளை பராமரிப்பது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படாதது, தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முக்கியமான காரணம் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: