பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ : "லியனார்டோ டி காப்ரியோதான் அமேசான் காட்டுக்கு தீ வைத்தார்" மற்றும் பிற செய்திகள்

லியனார்டோ டி காப்ரியோதான் அமேசான் காட்டுக்கு தீ வைத்தார்

அமேசான் காட்டுக்கு தீ வைக்க ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டி காப்ரியோதான் பணம் கொடுத்தார் என வலதுசாரி சித்தாந்தம் கொண்ட பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ குற்றஞ்சாட்டி உள்ளார். ஆனால், இதுகுறித்து அவர் எந்த ஆதாரத்தையும் அளிக்கவில்லை. இதற்கு முன்பு, அமேசான் காட்டுத்தீக்கு அரசுசாரா அமைப்புகள்தான் காரணம் என பொல்சனாரூ குற்றஞ்சாட்டி இருந்தார்.

அமேசான் காடுகளைக் காக்க 5 மில்லியன் டாலர்கள் தருவதாக உறுதி அளித்திருந்த காப்ரியோ இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள பிரேசில் சென்று இருந்தபோது பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூவை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியா வர அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று பொல்சனாரூ இந்தியா வருகிறார்.

பெண் ஊழியர்களுக்கு 'மாதவிடாய் பேட்ஜ்' அறிமுகப்படுத்திய ஜப்பான் கடை

தங்களது கடையில் பணிபுரியும் பெண்கள் மாதவிடாய் காலத்தின்போது, அவர்கள் விரும்பினால் அதை மற்ற ஊழியர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பேட்ஜ் அணிந்துகொள்ளும் முறை குறித்து 'மறுபரிசீலனை' செய்யவுள்ளதாக ஜப்பானிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்று தெரிவித்துள்ளது.

'மிஸ் பீரியட்' என்று அறியப்படும் கேலிச்சித்திர பாத்திரம் அச்சிடப்பட்ட பேட்ஜை அணிந்துகொள்ளும் திட்டத்தை கடந்த அக்டோபர் மாதம் 'தி டைமாறு' எனும் ஜப்பானிய பல்பொருள் அங்காடி செயற்படுத்தியது.

காஞ்சிபுரம் தலித் இளம்பெண் மரணம்: வன்கொடுமை வழக்குகள் சரியாக விசாரிக்கப்படுவதில்லையா?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் விவகாரத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்படும் வழக்குகளை முறையாக விசாரிக்காததாலேயே இம்மாதிரி சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் காரை கிராமத்தில் உள்ள தனியார் தோட்டம் ஒன்றில் கடந்த நவம்பர் 27ஆம் தேதியன்று இளம்பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. காவல் துறையினரின் விசாரணையில் மரணமடைந்தவர், காஞ்சிபுரம் சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த ரோஜா என்பவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜப்பான் பிரதமரை 'மனநிலை சரியில்லாதவர்' என விமர்சிக்கும் வடகொரியா

தங்கள் நாடு நடத்திய 'ராக்கெட் லாஞ்சர்' சோதனையை 'ஆயுத சோதனை' என்று கூறிய ஜப்பான் பிரதமரை 'மனநிலை சரியில்லாதவர்' என்றும் 'அரசியலில் இன்னும் வளராதவர்' என்றும் வடகொரிய அரசு விமர்சித்துள்ளது.

வியாழன்று வடகொரிய எல்லையில் இருந்து ஜப்பான் கடலை நோக்கி இரு 'அடையாளம் காணப்படாத ஏவுகணைகள்' ஏவப்பட்டதாக தென்கொரிய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஹைதராபாத் பாலியல் தாக்குதல்: '100 ஊடகத்தினரும் வந்து ஒரே கேள்வியை கேட்க வேண்டுமா?'

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்ட பெண்ணின் தங்கை, ஒரே கேள்வியை 100 ஊடகங்கள் தங்களிடம் கேட்டு, ஏற்கனவே மனவருத்தத்தில் உள்ள தங்களை மேலும் காயப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

27 வயதான பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு தீ வைத்து கொல்லப்பட்டுள்ளார். வியாழக்கிழமை அதிகாலை ஷாத் நகர் அருகில் போலீசார் அவரது உடலை கண்டெடுத்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: